தனது சமூகத்தை முன்னிறுத்தி சினிமா எடுக்கும் போக்கு அதிகரித்துவிட்டது. அதே நேரம் பிற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மற்ற சமூகத்தினருக்கு நேர்ந்த அநீதியைப் பற்றி பதிவு செய்து வருகின்றனர். இதெல்லாம் அந்தந்த சமூகத்தினருக்கு மகிழ்ச்சியையும், பலருக்கு எரிச்சலையும் தந்து வருகிறது. இதில் இயக்குநர் பிரவீன்காந்தி எந்த ரகம் என்று தெரியவில்லை.
சாதி குறித்த படங்கள் வரக்கூடாது என்று பேசுகிறார். ஆனாலும் அவர் ஒரு சாதிய படத்திற்கு ஆதரவு தெரிவிக்கிறார். இது ஒரு புறம் இருக்கட்டும்.
டிக்கெட் எடுத்தும் நரிக்குறவர் இன பெண்ணை தியேட்டருக்குள் உள்ளே விடாத ரோகிணி திரையங்கம், அந்த விவகாரம் பெரிதானதும் மன்னிப்பு கேட்டுக்கொண்டது. ஆனால், பக்கத்தில் இருப்பர் யார் என்றே தெரியாமல் தியேட்டருக்குள் எல்லோரும் ஒன்றாக இருக்கிறோம் என்கிறார்.
குழந்தை c/o கவுண்டம்பாளையம் படத்தின் விழாவில் பேசிய பிரவீன்காந்தி, ‘’சாதிய ரீதியாக படம் எடுப்பவர்களுக்கு எதிராக எப்போதும் நான் கண்டனம் தெரிவித்துக் கொண்டே இருப்பேன். சாதி பேசக்கூடாது; சாதியை சொல்லவே கூடாது. சினிமாவில் சாதியை சொல்லவே கூடாது. திரையரங்கில் என் பக்கத்தில் யார் உட்கார்ந்திருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியாது. எல்லோரும் சேர்ந்து விசில் அடிக்கிறோம். அதனால் சினிமாவில் சாதி பேசக்கூடாது’’ என்றவர்,
’’பா.ரஞ்சித், வெற்றிமாறன் போன்ற இயக்குநர்கள் அவர்கள் வளர்ச்சி கண்ட பிறகு, தமிழ் சினிமா தளர்ச்சி அடைந்துவிட்டது என்று சொல்கிறார்கள். சினிமாவில் சாதியை சொல்பவன் சமுதாயத்தில் ஒதுக்கப்பட வேண்டியவன்’’என்றார். அதாவது, சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்பது மாதிரியே அவரின் பேச்சு இருந்தது. அதனால்தான் ஏற்றத்தாழ்வுகள் இருப்பது படம் எடுக்கும் வெற்றிமாறனும் பா.ரஞ்சித்தும் சமுத்தில் ஒதுக்கப்பட வேண்டியவர்கள் என்று பொங்கியெழுந்தார்.
அத்தோடு அவர் நிற்காமல், ‘’திட்டம் போட்டு நாடகக்காதல் செய்யும் எவரையும் தண்டிக்கும் உரிமை நல்லவர்களுக்கு உண்டு. அந்த நல்லவர்கள் லிஸ்டில் நடிகர் ரஞ்சித் உள்ளார் என்ற நம்பிக்கை இருக்கிறது. பொன்விலங்கு படத்தின் மூலம் அறிமுகமான அவர் சாதிய விலங்கை உடைத்து எறிவார். அதை ரஞ்சித் செய்வார்’’ என்றார்.
அதுமட்டுமல்லாமல், பெரிய இயக்குநராக வளந்த பின்னர், சினிமா தளர்ச்சி அடைந்துவிட்டது என்று சொல்லுவதாக அவர் கடும் ஆத்திரத்துடன் பதிவு செய்திருந்தார்.
அதே விழாவில் பேசிய இயக்குநர் பேரரசு, ’’பிரச்சனைக்கு தீர்வு சொல்ல வேண்டுமே தவிர, பிரச்சனையை வளர்த்துவிடுவது போன்று சினிமா எடுக்க கூடாது. பிரச்சனைக்கு தீர்வு சொன்னால் மட்டுமே அவன் படைப்பாளி. அதைவிடுத்து சாதியையும், மதத்தையும் வைத்து பிரச்சனையை வளர்த்து வியாபாரியாக இருக்காதீர்கள். சமூக அக்கறை இருந்தால் சமூகப்படங்கள் எடுங்கள். இல்லாவிட்டால் காமெடி படம், குடும்ப படங்கள் எடுத்துவிட்டு போங்க’’என்று ஆத்திரப்பட்டார்.
அதாவது, வெற்றிமாறன், பா.ரஞ்சித், முத்தையா, மாரி செல்வராஜ், மோகன் ஜி போன்ற இயக்குநர்களை அவர் மறைமுகமாக சாடினார் என்றே சலசலப்புகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் ‘உயிர் தமிழுக்கு’ படம் பாத்துவிட்டு வெளியே வந்த இயக்குநர் வெற்றிமாறனிடம் இது குறித்த கேள்வியினை செய்தியாளர்கள் முன்வைக்க,
‘’இந்தியாவில் சாதிய ரீதியான ஒடுக்குமுறை இன்றைக்கு இல்லை என்று சொல்கிறார்கள் என்றால், அல்லது சமூக ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்று சொல்கிறார்கள் என்றால், அவர்கள் எங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இந்தியாவில் ஏற்றத்தாழ்வுகள் இருந்துகொண்டே இருக்கின்றன’’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.
இந்த விவகாரம் இத்துடன் முடிந்துவிடுவதாக தெரியவில்லை.