ஜெய்பீம் போலவே வேட்டையனும் பல விவாதங்களை தொடங்கி வைத்திருக்கிறது. வேறு ஒரு ஹீரோவை மனதில் வைத்து முதலில் ஜெய்பீம் போலவே கமர்சியல் இல்லாமல் செய்த கதையில் ரஜினிக்காக கமர்சியல் கலந்து செய்திருக்கிறார் ஞானவேல். அதனால்தான் இப்படம் மாஸ் + க்ளாஸ் என்கிறார்கள் ரசிகர்கள்.
தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக என்கவுன்டர்கள் நடந்து வரும் நிலையில் என்கவுன்டர் சரியா? தவறா? என்பது குறித்த படமாக வந்திருக்கிறது வேட்டையன்.
’’இருக்குற போலீஸ்காரங்க எல்லாம் இந்த படத்தைப் பார்த்து கத்துக்கோங்க…’’ என்கிறார்கள் படம் பார்த்த பல ரசிகர்கள்.
ஆரம்பத்தில் அநீதிக்கு நீதி தீர்வல்ல; அநீதிக்கு அநீதிதான் என்று அபிதாப்புடன் வாக்குவாதம் செய்தாலும் கூட, க்ளைமாக்ஸில் ரஜினியும், ‘’போலீஸ் மக்களுக்கு வேட்டையனாக இருக்கக்கூடாது. பாதுகாவலனாக இருக்கணும்’’ என்கிறார்.
என்கவுன்டர் மட்டுமல்லாது நீட் பிரச்சனை குறித்தும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகிக்கிடப்பது குறித்தும், நமக்கு தேவை தரமான கல்வி மட்டுமில்ல சமமான கல்வி கூட என்றும் இப்படம் பேசுவதால், பள்ளி – கல்லூரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இப்படத்தைப் பார்க்க வேண்டும் என்கிறார்கள் பல ரசிகர்கள்.
’’இது மக்களுக்கு மட்டுமல்ல அரசாங்கத்திற்கும் மெசேஜ் சொல்லும் படமாக இருக்கிறது’’ என்று ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.
ஒரே டிக்கெட்டில் ரஜினி படம் பார்த்த திருப்தியும், ஒரு மெசேஜ் சொல்லும் படம் பார்த்த திருப்தியும் கிடைத்திருக்கிறது ரசிகர்களுக்கு.
’’வேட்டையன் ஒரு தீவிரமான சமூக சிந்தனையுள்ள படம். நீதித்துறை பற்றிய வலுவான காட்சிகள் நிரம்பி இருக்கின்றன. படத்தின் முதல் பிரேமில் இருந்தே தலைவர் சூப்பர். படத்தில் தலைவரையும் அவருடன் அமிதாப்பச்சன் சாரையும் பார்த்தது மகிழ்ச்சியாக இருந்தது. பகத் பாசில் வெடித்திருக்கிறார். வழக்கம்போலவே அனிருத் இசையால் எல்லோரையும் உலுக்கி இருக்கிறார். இவ்வளவு தீவிரமான நுட்பமான தலைவர் படத்தை வழங்கியதற்காக ஒட்டுமொத்த குழுவுக்கும் நன்றி’’ என்று விமர்சித்திருக்கிறார் இயக்குநர் கார்த்தி சுப்புராஜ்.