லைகா நிறுவனம் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியிருக்கும் திரைப்படம் வேட்டையன். இப்படத்தில் ரஜினிகாந்த்துடன் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், அபிராமி, துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
வேட்டையன் படமானது அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸாகவிருக்கும் நிலையில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
விழாவில் பேசிய ரஜினிகாந்த் ‘வேட்டையன் பட ஷூட்டிங் தொடங்க இரண்டு நாட்கள் இருக்கும். அப்போது இயக்குநர் ஞானவேல் என்னிடம் வந்து, சார் உங்களிடம் 20 நிமிடம் பேச வேண்டும் என்று சொன்னார். என்ன இப்போ வந்து பேச வேண்டும் என்கிறாரே என நினைத்துக்கொண்டு,சொல்லுங்க சார் என்றேன். உடனே அவர், சார் நீங்கள் நடித்த தளபதி படத்தை 17 முறை பார்த்திருக்கிறேன். நீங்கள் எவ்வளவு பெரிய நடிகர் தெரியுமா சார், புவனா ஒரு கேள்விக்குறி, ஆறிலிருந்து அறுபதுவரை படங்கள் எல்லாம் எனது ஃபேவரைட். அந்த மாதிரி ஒரு படம் செய்ய வேண்டும் என்று சொன்னார்.
உடனே நான் அவரிடம் ஒரு கதை சொன்னேன். அதாவது ‘உத்திரகாசில (ஹிமாலயாஸ்) டோபி ஒருத்தர் இருந்தார். அவர் துணியை துவைக்க வேண்டுமென்றால் கீழே ஓடும் ஆறுக்குத்தான் வர வேண்டும். அவரிடம் இருக்கும் கழுதையில் துணி மூட்டையை வைத்துக்கொண்டு கீழே வந்து துணி துவைப்பார். அப்படி ஒருநாள் வந்து துணியை துவைத்துவிட்டு பார்க்கும்போது கழுதையை காணவில்லை. அந்த கழுதைதான் அவருக்கு உயிர், மூச்சு எல்லாமே. உடனே அவர் ஒருமாதிரி விரக்தி ஆகிவிட்டார். அதற்கு பிறகு அவரிடம் எதை கேட்டாலும் சிரிக்க ஆரம்பித்துவிட்டார். மனைவி, குழந்தைகள் எல்லாம் விட்டு போக ஆரம்பிச்சிட்டாங்க. அவர் தனியாகிட்டார். ஒருகட்டத்தில் மரத்தடியில் அமர்ந்துட்டார். உடனே அந்த வழியாக வந்தவர்கள் எல்லாம் இந்த டோபியை பார்த்து சாமியார்னு நினைத்து அவரிடம் பலன்கள் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். அவருக்கென்று சிஷ்யர்களும் சேர ஆரம்பித்துவிட்டார்கள். ஒருகட்டத்தில் அந்த டோபிக்கு பழைய நினைவுகள் எல்லாம் திரும்பவும் வர ஆர்மபித்துவிட்டது. அப்போ ஒரு கழுதை கத்தியது. உடனே அவர், எங்கே என் கழுதை எங்கே என் கழுதைனு கேட்க ஆரம்பித்தார். உடனே அவரது சிஷ்யர்களோ, ஏங்க இப்படி பேசுறீங்க நீங்க ஒரு சாமியார் இப்படிலாம் பேசாதீங்கனு சொன்னாங்க. உடனே இவர், யோவ் நான் டோபியா. என் கழுதையை காணவில்லைனுதான் இப்படி ஆகிட்டேன். வெளியே சொன்னால் கதை கந்தலாகிடும் சொல்லாதீங்க என்று சொன்னார்.
இதை கேட்டுவிட்டு ஞானவேல் என்னிடம், ஏன் சார் இதை என்னிடம் சொல்றீங்க என்று கேட்டார். உடனே நான் அவரிடம், ‘சார் அந்த டோபியே நான்தான்’ என்றேன். தளபதில ஓகேயான ஷாட்டை மட்டும்தான் நீங்க பார்ப்பீங்க. அதுக்கு பின்னாடி எத்தனை டேக் போச்சுனு எனக்கு மட்டும்தான் தெரியும். அதே மாதிரி முள்ளும் மலரும் படத்தில் மகேந்திரனும் பாலுமகேந்திராவும் சேர்ந்துதான் என்னை அப்படி செய்ய வைத்தார்கள். புவனா ஒரு கேள்விக்குறி படத்தில் 16 பக்க டயலாக்கை ஒருநாளுக்கு கொடுப்பார்கள். நான் மிரண்டுவிட்டேன். அப்போ முத்துராமன் என்னை கூப்பிட்டு உன்னால் பேச முடிந்த அளவு பேசு என்று சொல்லி தேற்றினார். அதேபோல் ஆறிலிருந்து அறுபதுவரை படத்திலிருந்து பாதியிலேயே வெளியேறிட்டேன். அதுக்கு பிறகு எல்லோரும் சேர்ந்து பேசி என்னை நடிக்க வைத்தார்கள். அந்தப் படம் ஓடாது என்று நினைத்தேன். ஆனால் அந்தப் படம் எப்படியோ ஹிட்டடித்தது.
பிறகு முரட்டுக்காளை, போக்கிரி ராஜா அப்டிங்ற லைன்ல போய் ஸ்டைல மாத்தி பிழைத்துக்கொண்டேன். அதனால் என்னை புவனா ஒரு கேள்விக்குறி, ஆறிலிருந்து அறுபதுவரை மாதிரி நடிக்க வைக்க எதிர்பார்க்காதீங்க. வழக்கமா எப்படி நடிக்கிறேனோ அப்படியே நடிக்கிறேன். பழையபடி நடிச்சா கந்தலாகிடும் என்று சொன்னேன்” என்றார்.