
பெரும்பாலானோருக்கு அவர்களுக்கும் அவர்களின் பெயருக்கும் கொஞ்சமும் சம்பந்தம் இருக்காது. இதனால் அவர்கள் காலம் முழுவதும் சமூகத்திடம் வறுபடுவார்கள்.
வித்தியாசம் என்கிற பெயரில் சிலர் ஏதேதோ பெயர்களை வைத்துவிடுவதால் அவர்கள் மட்டுமல்லாமல் பின்னாளில் அந்த பிள்ளைகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவார்கள். அப்படித்தான் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும், பாடலாசிரியர் சினேகனுக்கும் நேர்ந்திருக்கிறது.
விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதி, தங்களின் குழந்தைகளுக்கு ‘உயிர்’, ‘உலக்’ என்று பெயர் வைத்துள்ளனர்.

இதனால் சமூக வலைத்தளங்களில் ஏகத்துக்கும் வறுபடுகிறது இந்த உயிர், உலக்கு பெயர்கள். குழந்தையுடன் சென்று விஜய்யை விக்னேஷ் சிவன் சந்தித்தது குறித்து செய்திக்கு, ‘உயிருடன் விஜயை சந்தித்த விக்னேஷ் சிவன்’, ‘உயிரை கையில் பிடித்துக்கொண்டு விஜயை சந்தித்த விக்னேஷ் சிவன், ‘விக்னேஷ் சிவன் உயிரோடு விளையாடிய விஜய்’, ’விஜயை சந்தித்துவிட்டு உயிருடன் திரும்பிய விக்னேஷ்சிவன்’ என்று நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளிவிட்டனர். அதே மாதிரிதான் வீட்டில் குழந்தையுடன் காத்திருக்கும் நயன்தாரா என்று செய்தி போடுவதற்கு, ‘உலக்குடன் காத்திருக்கும் நயன்தாரா’ என்று தலைப்பு போடுகிறார்கள். சட்டென்று இந்த தலைப்பு பார்வையில் படும்போது திக்கென்று இருக்கிறது.

அண்மையில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதி தங்கள் குழந்தைகளுடன் பழனி கோவிலுக்கு சென்று வந்தனர். அந்தக்கோவிலில் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு, ‘உயிரை கையில் பிடித்துக்கொண்டு பழனிக்கு சென்று வந்த நயன்தாரா’, ‘உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு விழுந்து வணங்கிய விக்னேஷ் சிவன்’ என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

அதே போன்று பாடலாசிரியரும், மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகியுமான சினேகன் தனது இரட்டைக்குழந்தைகளுக்கு ‘காதல்’, ‘கவிதை’ என்று பெயர் வைத்துள்ளார். இதில் கவிதை நல்ல பெயர்தான். ஆனால், காதல் என்று வைத்துள்ளாரே. இப்போது சின்ன வயதில் பரவாயில்லை. எதிர்காலத்தில் அந்த பெண் வரும்போது, ‘காதல் வருகிறது’, ‘ காதல் வந்துடுச்சு’ என்று கிண்டல் செய்வார்களே…இதை அந்தப்பெண் எப்படி எல்லாம் எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். வித்தியாசம் என்கிற பெயரில் ஏன் இப்படி தொலை நோக்கு சிந்தனை இல்லாமல் பெயர் வைக்கிறார்கள்? என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.