
விஜய் ஒரு நடிகன் தான். அவர் என்றைக்கும் தலைவனாக முடியாது என்று கடுமையாக விமர்சித்துள்ளார் முன்னாள் மத்திய அமைச்சரும், நடிகருமான நெப்போலியன்.
அமெரிக்காவில் வசித்து வரும் நெப்போலியன் வீடியோ கால் மூலமாக யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருக்கிறார்.
தனக்கும் விஜய்க்கும் 18 வருடங்களுக்கு பிரச்சனை நடந்தது. அதை மனதில் வைத்துக்கொண்டு இப்போது பேசவில்லை என்றும் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார் நெப்போலியன்.
’’விஜய்க்கு மட்டுமல்ல, நடிகைகளுக்கு கூட கூட்டம் கூடும். ரஜினி, கமல், விஜயகாந்துக்கு எல்லாம் கூடாத கூட்டமா? ஏன் எனக்கும்தான் கூட்டம் கூடியது. அப்போதெல்லாம் சோசியல் மீடியா இல்லாததால இது எல்லாம் வெளியெ தெரியல. மக்களை சந்திக்க வேண்டும்னா நடைபயணம் போங்க. கூட்டம் கூடும்னு சொல்லி சமாளிக்காதீங்க. கூட்டத்தை சமாளிக்கத் தெரியணும்.

எல்லாத்துக்கும் அரசாங்கத்தையே எதிர்பார்த்துக் கொண்டிருக்க முடியாது. உங்க பாதுகாப்புக்குக் பவுன்சர்ஸ் வைத்துக் கொள்வது மாதிரி தொண்டரணி வைத்துக்கொண்டு கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். மக்களை பாதுகாக்க வேண்டும்.
காலையில 8.45 மணிக்கு நாமக்கல் கூட்டத்துக்கு வர்றேன்னு சொல்லிட்டு 8.45மணிக்குத்தான் சென்னையில் இருந்து தனி விமானத்தில் கிளம்பியிருக்கிறார் விஜய். எதுக்கு தனி விமானம்? மக்களோடு மக்களாக பயணிக்க மாட்டாரா? இத்தனை வருசமும் அப்படித்தானே பயணம் செஞ்சீங்க? பெரிய பெரிய நடிகர்களும், தலைவர்களும் மக்களோடு மக்களாகத்தான் பயணம் செய்யுறாங்க. முதலவராக இருக்கும் போது கலைஞரும், ஜெயலலிதாவும் மக்களோடு மக்களாகத்தான் பயணம் செஞ்சாங்க. இதை நானே கண்கூடாக பார்த்திருக்கிறேன்.
நான் மத்திய அமைச்சராக இருக்கும் போது பெரம்பலூரில் ஒருவர் விபத்தில் அடிபட்டு கிடந்த போது காரில் இருந்து இறங்கி என் காரில் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தேன். அதுதான் சரியானது. அதை விட்டுவிட்டு, நான் அங்கிருந்து வீட்டுக்கு போனதும், போன் செய்து அடிபட்டு கிடக்கும் அவரை காப்பாற்றுங்கள் என்று சொல்லுவது நியாயமா?

கரூரில் அப்படி ஒரு சம்பவம் நடந்ததுமே பஸ்சுல இருந்து குதிச்சு கூட இருக்குறவங்கள வச்சிக்கிட்டு அவுங்களை காப்பாத்தி இருக்கலாம். இல்லேன்னா, திருச்சியில் இருந்துகிட்டு, கட்சிக்காரங்களை அனுப்பி பாதிக்கப்பட்ட மக்களை பார்க்கச் சொல்லி இருக்கலாம். அவர்களை காப்பாற்றி இருக்கலாம். ஆனால் இதை எதையுமே செய்யாமல், நேராக திருச்சி வந்து அங்கிருந்து சென்னை வந்து வீட்டுக்கு போய்விட்டார்.
மூணு நாள் கழிச்சு ஒரு வீடியோ போட்டுவிட்டு , 15 நாளுக்கு மேல் ஆகியும் இன்னும் ஸ்பாட்டுக்கே போகாம, வீடியோ கால்ல பேசுனா அந்த 41 பேர் குடும்பத்த வேணும்னா திருப்திப் படுத்திடலாம். ஆனா, ஒட்டும்கொத்த மக்களையும் திருப்திப்படுத்த முடியாது. உலகம் பூரா விஜய்யோட பேர் கெட்டுப்போச்சு. மக்களை விட்டுவிட்டு ஓடிவிட்டார் என்று விஜய் இமேஜ் டேமேஜ் ஆச்சு. அதை களத்துல போய் நின்னாத்தான் சரி செய்ய முடியும்.
அதைவிட்டுவிட்டு, சிஎம்க்கே சவால் விட்டுக்கொண்டிருக்கிறார். நான் வீட்டுலதான் இருக்குறேன், ஆபீஸ்லதான் இருக்குறேன்னு சினிமா வசனம் போல பேசி சிஎம்க்கு சவால் விட்டுக்கொண்டிருக்கிறார்.
இது என்ன சினிமாவா? வசனம் பேசிக்கிட்டு இருக்குறதுக்கு? முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்படும் அவரே அந்த பதவியை கிண்டலடிக்கிறார். அந்த பதவிக்கு ஆசைப்படும் நீங்க முதலில் அதற்கான தகுதியை வளர்த்துக் கொள்ளுங்கள். நிறைய விசயங்களை விஜய் கற்றுக்கொள்ள வேண்டும்

யாரிடமும் சகஜமாக விஜய் பழகமாட்டார். அவருடைய சுபாவமே இதுதான். அவருடைய தாய் , தகப்பனையே சேர்த்துக்கொள்ளாமல் இருக்கிறார். மனைவியையும் கிட்ட சேர்த்துக்கொள்ளவில்லை. மகனையும் சேர்த்துக்கொள்ளவில்லை என்கிறார்கள். இதெல்லாம் உண்மையாக இருந்தால் சொந்த குடும்பத்தையே கவனிக்காத இவர் நாளைக்கு மக்களை எப்படி கவனித்துக்கொள்வார்? என்ற கேள்வி வரத்தான் செய்யும்.
மக்கள் தன்னைப்பற்றி தவறாக நினைக்கக்கூடாது என்பதற்காக மேடையில் பெற்றோர்களை அமரவைக்கிறார். உண்மையான அன்போடு அவர் அதைச் செய்யவில்லை.
பெற்று, வளர்த்து, சொந்தக் காசைப் போட்டு ஹீரோவாக போட்டு படம் எடுத்து ஆளாக்கி விட்டவர் சந்திரசேகர். அவரையே வீட்டுக்குள் சேர்க்க மாட்டேன் என்று சொல்லுவது எந்தவிதத்தில் நியாயம்?.

சினிமாவில் பஞ்ச் டயலாக் பேசுவது மாதிரி இங்கேயும் வந்து பேசிவிட்டு போவதா? இங்கே உன் கொள்கை என்ன? கோட்பாடு என்ன?
நடிகனாக இருக்கும் வரை குணாதியசங்களை மாற்றிக்கொள்ளத் தேவையில்லை. பொதுவாழ்க்கைக்கு வந்து விட்ட பின்னர் குணாதியசங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.
மக்களை நேரடியாக சந்தித்து மனுக்களை வாங்கி அதற்கு தீர்வளிப்பவன் தான் தலைவன். அது இல்லாமல் வண்டி மேலேயே நின்று கை காட்டுவது நடிகன். விஜய் என்றைக்குமே தலைவனாக முடியாது’’என்று விளாசி எடுத்திருக்கிறார் நெப்போலியன்.