தவெக தலைவர் விஜயினால் அரசியலில் திமுக மற்றும் அதிமுகவுக்கு இணையாக செயல்பட முடியாது என்கிறார் அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி.
இது குறித்து அவரது பார்வை:
’’விஜய்யின் தவெக கட்சியை கரூர் சம்பவத்திற்கு முன், கரூர் சம்பவத்திற்கு பின் என்று இரண்டாக பிரிக்கலாம். கரூர் சம்பவத்திற்கு முன் விஜய் செல்கிற இடமெல்லாம் மக்கள் ஆதரவு, மீடியாக்களின் ஆதரவு என பெரும் எழுச்சியை விஜய்யால் உருவாக்க முடிந்தது. ஆனால் கரூர் சம்பவத்திற்கு பின் தற்போது பாண்டிசேரி சென்று வந்த போது விஜய் ஏற்படுத்திய தாக்கமும், வீரியமும் பெருமளவில் குறைந்துள்ளது.

பூத் அளவிலும் அனுபவம் வாய்ந்தவர்கள் யாரும் தவெகவில் இல்லை. எம்.ஜி.ஆரை விஜய் தன்னோடு ஒப்பிடுகிறார். ஆனால் எம்.ஜி.ஆர். 1977ல் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியபோது திமுகவின் அங்கீகரிக்கப்பட்ட துணை அமைப்பாக எம்.ஜி.ஆர். மன்றம் இருந்தது. எம்.ஜி.ஆர். ரசிகர்கள் ரசிகர்களாக மட்டும் இல்லாமல் அரசியலிலும் தன்னை வளர்த்துக்கொண்டு எம்.ஜி.ஆரின் தொண்டர்களாக இருந்தார்கள். ஆனால் விஜய் ரசிகர்கள் இன்னும் ரசிகர்களாக மட்டுமே இருக்கிறார்கள்.

தவெகவினர் இன்னும் மக்களிடத்தில் சரியாக அடையாளப் படுத்தப் படவில்லை. விஜய் என்கிற ஒரே ஒரு பிம்பம் மட்டுமே அடையாளமாக இருக்கிறது. இந்த அடையாளத்தை வாக்குகளாக மாற்றும் கட்டமைப்பும் இன்னும் உருவாகவில்லை. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கிறது. “வேட்பாளர்கள், தேர்தல் அறிக்கை, சுற்றுப்பயணம்” என இதில் கவனம் செலுத்தும் வேளையில் இவர்களால் கள அரசியலில் திமுக, அதிமுக கட்சிகளுக்கு இணையாக செயல்பட முடியாது’’ என்கிறார் கே.சி.பழனிசாமி.
