
நன்றி, விசுவாசம் என்றால் என்ன விலை? என்று கேட்பார் போலிருக்கிறது விஜய். பாதிக்கப்பட்டோரைத் தேடிச்சென்று ஆறுதல் சொல்லும் விஜய், தனக்காக பாடுபட்ட தன்னை வளர்த்தெடுத்தவர்களின் மறைவுக்கு சென்று ஆறுதல் சொல்லாதது தொடர் கதையாகிறது.
தவெகவில் இன்றைக்கு புஸ்ஸி ஆனந்த் இருக்கும் இடத்தில் இருக்க வேண்டியவர் சி.ஜெயசீலன். அவர்தான் விஜய் ரசிகர் மன்றத்தின் மாநில தலைவராக 20 ஆண்டுகள் பாடுபட்டார்.
அப்போது விஜய் ரசிகர் மன்றத்தின் தலைமை அலுவலகம் சாலிகிராமத்தில் இருந்தது. திருவொற்றியூரில் வசித்து வந்த சி.ஜெயசீலன் தினமும் சாலிகிராமம் வந்து ரசிகர் மன்ற பணிகளை கவனித்து வந்தார்.

விஜய் வளர்ச்சிக்கு காரணமானவர்களில் ஜெயசீலனும் ஒருவர். விஜய்க்கு இன்றைக்கு ரசிகர் மன்றங்கள் இத்தனை இருக்கிறது என்றால் அவற்றை ஒருங்கிணைத்து, வளர்த்து வந்தவர் ஜெயசீலன்.
ஒரு நேரத்தில் விஜய் ரசிகர் மன்றம், மக்கள் இயக்கமாக மாறியது. அப்போது தனிக்கட்சி தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தார் எஸ்.ஏ.சந்திரசேகர். அவரின் எண்ணத்திற்கு ஏற்ப வேலைகளை செய்து வந்தார் ஜெயசீலன். ஆனால் அந்த நேரத்தில் ஆளும் தரப்பில் இருந்து வந்த நெருக்கடிகளால் தனிக்கட்சி முடிவை மாற்றிக்கொண்டு, திடீரென்று ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்தார் எஸ்.ஏ.சந்திரசேகர்.
ஆனால், அதிமுகவுக்கு ஆதரவு என்பதை ஜெயசீலன் ஏற்றுக்கொள்ளவில்லை. தனித்து போட்டி என்றால் சரி, அப்படி இல்லை என்றால் திமுகவுக்கு ஆதரவு கொடுக்கலாம் என்பது ஜெயசீலனின் முடிவு. இந்த கருத்து வேறுபாட்டை பயன்படுத்தி விஜய் மன்றத்தின் உள்ளே புகுந்து விட்டார் புஸ்ஸி ஆனந்த்.

தான் சொல்வதுதான் முடிவு. அதை மாற்ற யாருக்கும் உரிமையில்லை என்று பிடிவாதமாக இருந்த விஜய், ஜெயசீலனை மன்றத்தில் இருந்து வெளியேற்றிவிட்டார். ஜெயசீலன் தனது ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவாலயம் சென்று திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தார். இதனால் ஆத்திரம் கொண்ட புஸ்ஸி ஆனந்த், தனது ஆதரவாளர்களை ஏவி, ஜெயசீலன் படத்தின் மேல் எச்சில் துப்பும் போராட்டம் அறிவித்து அதை நிறைவேற்றியும் காட்டினார்.
விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து வெளியேறிய பின்னர் நடிகர் விஷால் ரசிகர் மன்றத்தின் மாநில தலைவராக செயல்பட்டு வந்தார்.
அண்மைக்காலமாக நோய்வாய்ப்பட்டு சாகும் தருவாயில் இருந்தவரை விஜய்யும், எஸ்.ஏ.சந்திரசேகரும் சென்று சந்தித்து எந்த உதவிகளும் செய்யவில்லை. சிகிச்சை பலனின்றி கடந்த சனிக்கிழமை 2.8.2025அன்று ஜெயசீலன் உயிரிழந்த பின்னர், விஷால் சென்று அஞ்சலி செலுத்தினார். எஸ்.ஏ.சந்திரசேகர் சென்று அஞ்சலி செலுத்தினார். ஆனால், தனது வளர்ச்சிக்கு பாடுபட்ட ஜெயசீலனுக்கு இறுதி மரியாதை செலுத்த வரவே இல்லை விஜய்.

தவெகவின் முதல் மாநாட்டிற்கு வந்த தவெகவின் நிர்வாகிகள் சிலர் விபத்தில் இறந்தபோது இரங்கல் அறிக்கை கூட வெளியிடவில்லை விஜய். மாநாட்டில் அவர்களுக்கு மவுன அஞ்சலியும் செலுத்தவில்லை. இது தவெகவில் பூதாகரமாக வெடித்தது. விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினர் விஜய்யின் நன்றிக்கெட்டத்தனத்தை சொல்லி அழுது புலம்பி மீடியாக்களில் பேட்டி கொடுத்த பின்னர் உயிரிழந்த நிர்வாகிகளுக்கு ஆறுதல் தெரிவித்தார் விஜய்.
தனக்காக பாடுபட்ட ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகளின் இறப்புக்கு இரங்கல் தெரிவிக்காத விஜய், அஜித்குமார் உள்ளிட்டோரின் இறப்புக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி ஆறுதல் சொல்லுவதெல்லாம் அப்பட்டமான அரசியல் என்று அம்பலப்படுத்துகிறார்கள் ஜெயசீலன் ஆதரவாளர்கள்.

தனி விமானத்தில் பறந்து நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணத்திற்கு செல்லும் விஜய், தான் இன்றைக்கு முதல்வர் நாற்காலியில் உட்கார நினைக்கின்ற அளவுக்கு விஜய் ரசிகர் மன்றத்தை வளர்த்து, அதை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி, பின்னர் அது தவெகவாக உருவெடுப்பதற்கும் ஆணி வேராக இருந்த ஜெயசீலன் மரணத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தாவிட்டாலும் கூட, சமூக வலைத்தளத்திலாவது இரங்கல் தெரிவிக்காமல் போன அலட்சியத்தை பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.