
அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் இருவர் தவெக தலைவர் விஜய்யை ரகசியமாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். அந்த பேச்சுவார்த்தையில் 90 சதவிகிதம் டீல் ஓகே ஆகி இருக்கிறது. அதனால்தான் அதிமுக – தவெக கூட்டணி என்பது 90 சதவிகிதம் உறுதியாகிவிட்டது என்று தகவல் பரவியது. ஆனாலும் கூட்டணி ஒப்பந்தம் இன்னமும் இறுதி செய்யப்படாமல் இருப்பதற்கு காரணம் அந்த முட்டுக்கட்டைதான்.
அது எந்த முட்டுக்கட்டை? அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பதுதான் சாதகமானது என்று ஆரம்பத்திலேயே முடிவெடுத்துதான் மாநாட்டில் அதிமுகவை விமர்சிக்கவில்லை விஜய். மாநாட்டிற்கு பிறகும் அதிமுக – தவெக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றும், இபிஎஸ் மகன் மிதுன் தவெகவினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்று தகவல் கசிந்தது.
அதற்கேற்றார் போல் தவெக மாநாட்டினை வரவேற்று பேசி வந்தனர் அதிமுக சீனியர்கள். ஆனால், தவெக சார்பில் ஊடகங்களில் பேசி வந்த அய்யநாதனுக்கு இது தெரியாததால், அவர் அதிமுகவுடன் கூட்டணி வைப்பதற்காகவா விஜய் கட்சி தொடங்கினார். தவெக ஒருபோதும் அதிமுகவுடன் கூட்டணி வைக்காது என்று சொன்னார்.

ஆட்சியில் பங்கு; அதிகாரத்தில் பங்கு என்ற கொள்கையில் இருப்பதால், அதிகாரப்பகிர்வை விரும்பி தவெகவை தலைமையாகக் கொண்டு தேர்தலை சந்திக்க நினைக்கும் கட்சிகளுடன் தான் கூட்டணி. இல்லையேல் தவெக தனித்து போட்டியிடும் என்று சொன்னார்.
அய்யநாதன் சொன்னதை தவெக ரசிக்கவில்லை. தவெக தேர்தல் வியூக நிபுணர் ஜான் ஆரோக்கியசாமி, அய்யநாதனை அழைத்து கண்டித்ததாக அய்யநாதனே இப்போது ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஜான் ஆரோக்கியசாமி கண்டித்ததால் விஜய்யை நேரில் சந்தித்து, ‘அதிமுகவுடன் தவெக கூட்டணி அமைக்காதுதானே? ’என்று கேட்டிருக்கிறார் அய்யநாதன். அதற்கு விஜய், ஆமாம் என்று சொல்லாமல், ‘அப்படி ஒரு முயற்சி போய்க்கொண்டிருக்கிறது’ என்று சொல்லி இருக்கிறார்.
விஜய் இப்படி வெளிப்படையாகச் சொன்னதைக் கேட்டு அதிர்ந்த அய்யநாதன், ‘’தவெகவுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. ஏன் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும். அது தேவையில்லை ’’என்று சொன்னதை விஜய் ரசிக்கவில்லையாம். அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் முடிவில் விஜய் இருப்பது புரிந்ததும் அங்கிருந்து வெளியேறி இருக்கிறார் அய்யநாதன்.

தற்போதும் அதிமுக – தவெக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்கிறார் அய்யநாதன். தவெகவில் அய்யநாதன் இருக்கும் வரை கூட்டணி பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை போட்டுவிடுவார் என்று நினைத்து அவராகவே வெளியேறும்படி அவருக்கான முக்கியத்துவத்தை குறைத்து வந்திருக்கிறது தவெக. அதன்படியே அய்யநாதன், ‘இனி தவெகவை ஆதரவித்து பேசமாட்டேன்’ என்று அறிவித்து வெளியேறிவிட்டார்.
அதிமுக – தவெக கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறிக்குப் காரணம் அதிகாரப்பகிர்வுதான் என்கிறார் அய்யநாதன். அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் முதல்வர் வேட்பாளர் விஜய்தான் என்று சொல்கிறதாம் தவெக தரப்பு. இதற்கு அதிமுக தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்ததாம். விஜய்யை முதல்வர் ஆக்குவதற்காகவா 53 வருடங்களாக அதிமுக இயங்கிக்கொண்டிருக்கிறது என்று கேட்டிருக்கிறது அதிமுக தரப்பு.

உடனே, இபிஎஸ்சை முதல்வர் ஆக்குவதற்காகவா விஜய் கட்சி தொடங்கி இருக்கிறார் என்று கேட்டிருக்கிறது தவெக தரப்பு. இந்த அதிகாரப்பகிர்வு போட்டியால்தான் அதிமுக – தவெக கூட்டணி ஒப்பந்தம் இன்னமும் இறுதி செய்யப்படாமல் உள்ளதாம்.
விஜய்க்கு துணை முதல்வர் பொறுப்பு கொடுக்கலாம் என்று இருதரப்புக்கும் இடையில் சிலர் பேசி கூட்டணியை முடித்து வைக்க முயற்சித்து வருகிறார்களாம்.
அதிமுகவும் விஜய்யுடன் கூட்டணி அமைக்கவே விரும்புகிறது. நாமக்கல்லில் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்ற கூட்டத்தில் திடீரென்று மேடையேறிய போதை நபர், ‘’விஜய்யுடன் கூட்டணி சேர்ந்தே ஆகணும்’’ என்று முழக்கம் எழுப்பினார். இது திட்டமிட்ட நாடகம் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

நத்தம் விஸ்வநாதன், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலரும் தவெகவுடன் கூட்டணி இல்லை என்று சொல்லவே இல்லை. 2026இல் வலுவான கூட்டணி அமையும் என்றே சொல்லி வருகின்றனர். விஜய்யுடன் கூட்டணியா? என்ற கேள்விக்கு, ‘’தேர்தல் அறிவுப்புக்கு இன்னும் 13 மாத காலங்கள் உள்ளன. தேர்தல் நேரத்தில் அதிமுக வலுவான கூட்டணியை அமைக்கும்’’ என்கிறார் எடப்பாடி பழனிசாமி. தவெகவுடன் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று அதிமுக மாஜி அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்திருக்கிறார்.
அதிமுக – தவெக கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவித்திருக்கிறார் அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி. அவர், ‘’அதிமுக முன்னாள் அமைச்சர்கள் இரண்டு பேர் விஜய்யை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். அந்த சந்திப்பில் நடந்தது என்ன? என்பது குறித்து சொல்ல விரும்பவில்லை’’ என்கிறார்.
அவர் மேலும், ‘’தனித்து களம் காண முடியாது என்கிற நிலையில் இருக்கிறது இபிஎஸ் தலைமையிலான அதிமுக. அதே நேரம், அதிமுகவுக்கு இருக்கும் வாக்கு சதவிகிதத்தில் 10 சதவிகிதம்தான் தவெகவுக்கு உள்ளது. தவெகவுக்கு இருக்கும் வாக்கு சதவிகிதம் என்பது 4 சதவிகிதம்தான். ஆனால், கூட்டம் சேர்க்கும் ஆளுமை விஜய்யிடம் உள்ளது. அதற்காகத்தான், ‘’விஜய்க்கு துணை முதல்வர் பதவி கொடுக்கலாமா? இல்லை, 1000 கோடி ரூபாய் கொடுக்கலாமா? இல்லை, 60 சீட் கொடுக்கலாமா? என்கிற மனநிலைக்கு வந்துவிட்டார் பழனிசாமி’’ என்கிறார்.

அதிமுக – தவெக கூட்டணி பேச்சுவார்த்தை ரகசியமாக நடந்து வரும் நிலையில் இந்த கூட்டணி இணையக்கூடாது என்று அய்யநாதன் வெளிப்படையாகப் பேசி வரும் நிலையில், அதை வைத்து, முதலமைச்சர் வேட்பாளராக அதிமுக விஜய்யை ஏற்காது, ஏற்கக்கூடாது என்று பலரும் சொல்லி வரும் நிலையில், தற்போது இதை திசைதிருப்பும் விதமாக 2026இல் விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன் தான் கூட்டணி என்று தவெக தரப்பில் தகவல் வெளியாகி இருக்கிறது.