விக்கிரவாண்டியில் மாநில மாநாட்டை நடத்தி விட்டதால் அடுத்து மண்டல மாநாடுகளை நடத்த வேண்டும் என்று தவெக மாநில நிர்வாகிகள் வலியுறுத்தி வந்த நிலையில் அவர்களை அழைத்து கடந்த வாரம் ஆலோசனை நடத்தி உள்ளார் விஜய்.
மண்டல மாநாடுகளை நடத்தினால்தான் கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்று நிர்வாகிகள் ஆலோசனை சொல்லி இருக்கிறார்கள். அதற்கு விஜய், முக்கிய நகரங்களில் நடத்துவோம் என்று சொல்லி இருக்கிறார்.
அதற்கு, ‘’இது போதாது . மண்டலந்தோறும் நடத்தியே ஆக வேண்டும் ‘’ என்று சொல்லி இருக்கிறார்கள். உடனே விஜய், ‘’எப்படியும் ஒரு மாநாட்டிற்கு இரண்டு மாத இடைவெளியாவது தேவைப்படும். இப்படி மாநாடு மட்டுமே நடத்திக் கொண்டிருந்தால் அதற்குள் தேர்தல் வந்துவிடும் . தேர்தல் வேலைகளை இதில் எங்கே செய்ய நேரம் இருக்கும்?’’ என்று கேட்டிருக்கிறார்.
இதனால், தலைமை என்ன முடிவு செய்கிறதோ அதன்படி நடக்கிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள் நிர்வாகிகள்.
இதன் பின்னர் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.ஆக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானதால் ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஜனவரி மாதம் அல்லது பிப்ரவரி மாதம் அங்கே இடைத்தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது.
திமுக கூட்டணியில் மீண்டும் காங்கிரசுக்குத்தான் மீண்டும் சீட் ஒதுக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலை போல் புறக்கணிக்கலாமா? புறக்கணித்தால் கட்சிக்கு பின்னடைவு ஏற்படுமா? என்று ஆலோசித்து வருகின்றனர் அக்கட்சியினர்.
2026 தேர்தலுக்கு முன்னோட்டமாக இருக்கும் என்பதால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடலாம் என்று நிர்வாகிகள் சொல்லி வருவதால் அந்த தொகுதியில் தவெகவுக்கு செல்வாக்கு எப்படி இருக்கிறது என்பதை அறிய சர்வே எடுக்கச் சொல்லி இருக்கிறார் விஜய்.
சர்வே முடிவுகள் வந்த பின்னர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவுக்கலாம் என்று நிர்வாகிகளிடம் சொல்லி இருந்தார் விஜய்.
இந்நிலையில் சர்வே முடிவுகள் விஜய் பார்வைக்கு போயிருக்கிறது. அதைப்பார்த்து அவர் கடும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார். தவெகவுக்கு போதிய ஆதரவு இல்லை என்கிறது அந்த சர்வே முடிவுகள்.
2026ல் முதல்வர் நாற்காலியை குறிவைத்திருக்கும் தனக்கு இந்த ரிசல்ட் ரொம்பவே பலவீனப்படுத்திவிடும் என்பதை உணர்ந்து, இதே நிலைமையுடன் இடைத்தேர்தலில் போட்டியிட்டு சொற்ப வாக்குகளை பெற்றால், சட்டமன்ற தேர்தலில் மக்களிடையே தனது பிரச்சாரம் எடுபடாது. இடைத்தேர்தலின் ரிசல்ட் சட்டமன்ற தேர்தலில் ரொம்பவே பலவீனத்தை கொடுக்கும் என்பதை உணர்ந்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தவெக போட்டியிடாது என்று முடிவெடுத்துள்ளார் விஜய். அதே நேரம், இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்றும் முடிவெடுத்துள்ளார் விஜய்.