அதிமுவில் எப்போதாவதுதான் எம்.ஜி.ஆர். நினைக்கப்படுகிறார். அவரின் புகைப்படத்தை எந்த நிர்வாகியும் தன் பாக்கெட்டில் வைத்திருக்கவில்லை. அதனால் அவரை விஜய் வாரிச்சுருட்டிக்கொண்டதில் அக்கட்சி நிர்வாகிகளுக்கு அதிர்ச்சி இருக்க வாய்ப்பில்லை. ஆனால், ஜெயலலிதா புகைப்படத்தை எல்லோரும் சட்டைப்பையில் வைத்துக்கொண்டு வலம் வரும் நிலையில் அவரையும் விஜய் வாரி சுருட்டிக்கொண்ட தால் அதிர்ந்து நிற்கின்றனர் அதிமுகவினர்.
கட்சியின் முதல் மாநாட்டிலேயே எம்.ஜி.ஆர். குறித்துப் பேசி அவரது ஆதரவாளர்களை தன் வசம் இழுக்கப் பார்த்தார் விஜய். தனது பிரச்சார வாகனத்திலும் எம்.ஜி.ஆரின் படத்தினை வரைந்துள்ளார் விஜய்.

இப்போது ஜெயலலிதாவையும் தவெக வசமாக்கிக் கொண்டிருக்கிறார் விஜய். ஜெயலலிதாவின் பேச்சுக்களில் முக்கியமானது, ‘’சொன்னார்களே…செய்தீர்களா?’’, ‘’தீயசக்தி திமுக’’ என்பதுதான். எம்ஜிஆரும் சொன்னதுதான் ‘’தீயசக்தி திமுக’’ டயலாக். இதை நேற்றைய ஈரோடு தவெக மாநாட்டில் பேசி இருக்கிறார் விஜய். எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் தவெக வசமாக்கிக்கொண்டு, இன்னொரு பக்கம் செங்கோட்டையன் தயவில் அதிமுகவின் மாஜிக்கள் பலரையும் தவெக பக்கம் நகர்த்திக் கொண்டிருக்கிறார் விஜய்.
இதற்கெல்லாம் ஓங்கி பதிலடி கொடுக்க வேண்டிய பழனிசாமி, மவுனியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்.
ஜெயக்குமார் மட்டும், ‘’ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு தனித்தன்மை வேண்டும். தவெக தலைவர் விஜய், எம்.ஜி.ஆரின் முகமூடியை போட்டுக்கொண்டு வருகிறார். அந்த முகமூடியை போட்டுக்கொண்டு வந்தால்தான் மக்களை சந்திக்க முடியும் என்கிற நிலைமை இருக்கிறது என்றால், விஜய்க்கு தனித்தன்மை இல்லை என்றுதானே அர்த்தம்?

முளைத்து மூன்று இலை கூட விடாதவர்கள், அரசியல் ஆத்திச்சூடி கூட அறியாதவர்கள், ஆலமர நிழல் தருகின்ற அதிமுகவை விமர்சிக்கிறார்கள். ஊர்க்குருவி உயர உயர பறந்தாலும் பருந்தாகாது’’ என்று கொஞ்சம் பேசி இருக்கிறார். அதையும் தயங்கித்தயங்கி பேசி இருக்கிறார். ஜெயக்குமாரை தவிர செம்மலையும் இலேசாக எதிர்ப்பினை பதிவு செய்திருக்கிறார்.
எதிர்க்க வேண்டிய எடப்பாடி வேடிக்கை பார்ப்பதால்தான், ‘’அண்ணாவும், எம்.ஜி.ஆரும் பொதுச்சொத்து. இவர்களை யாரும் கொண்டாடக்கூடாது என்று யாரும் பேசமுடியாது’’ என்று எகிறி அடித்துவிட்டு போகிறார் விஜய்.

களத்தில் இல்லாத கட்சி என்றும் அதிமுகவை எகிறி அடித்தும் ஏன் மவுனியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். என்னதான் செய்யப்போகிறார் எடப்பாடி? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது ர.ர.க்கள் மத்தியில்.
