ஆகஸ்ட் 22ல் தவெகவின் கொடியை அறிமுகப்படுத்துகிறார் அக்கட்சியின் தலைவர் விஜய். செப்டம்பர் 22ம் தேதி விக்கிரவாண்டியில் மாநாடு தொடங்குகிறது என்றெல்லாம் செய்திகள் வந்தாலும் விஜய் தரப்பில் இருந்து முறையாக அறிவிப்பு எதுவுமே இல்லை. இதற்கிடையில் மாநாட்டிற்கு ஸ்பான்சர் தேடிக்கொண்டிருக்கிறார் விஜய் என்று வேறு செய்திகள் வருகின்றன.
இது ஒரு புறமிருக்க, கோட் படத்திற்கு ஆடியோ லான்ச் இல்லை என்று தகவல் பரவுகிறது. ஆடியோ லான்ச்’சில் மட்டுமே தொடர்ந்து அரசியல் பேசி வந்ததால் ‘ஆடியோ லான்ச்’ அரசியல்வாதி என்ற பெயர் வந்துவிட்டது விஜய்க்கு. அப்படி இருக்கும்போது கட்சி தொடங்கி மாநாடு நடைபெற இருக்கும் நிலையில் வெளிவரும் திரைப்படத்தின் ஆடியோ லான்ச் ஏன் நடைபெறவில்லை? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
விஜய் படத்தின் ஆடியோ லான்ச் என்றாலே அரசியல் பேச்சு என்றாகிவிட்டதால் ரசிகர்கள் அந்த எதிர்ப்பார்ப்புக்கு தள்ளப்பட்டு விட்டார்கள். முதல் மாநாட்டு நேரம் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் எகிறிக்கிடக்கிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு தகுந்த மாதிரி விஜய்யும் உணர்ச்சிவசப்பட்டு எதைப்பேசினாலும் எப்படி பேசினாலும் அது கோட் படத்திற்கு பாதகமாக வந்து முடிந்துவிட்டால் என்னாவது? என்று யோசித்திருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம்.
மேலும், கோட் பட ரிலீசுக்கு முன்பு மாநாடு குறித்த அறிவிப்பினை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுவிட்டால் தவெகவினர் ஒட்டுமொத்த பேரும் கட்சி வேலைகளைச் செய்ய கிளம்பிவிடுவார்கள். கோட் படத்தின் மீதான அவர்கள் கவனம் திரும்பி கட்சி மீது போய்விடும். பெரிய முதலீட்டி எடுக்கப்பட்டிருக்கும் கோட் படம் கேள்விக் குறியாகிவிடும் என்று நினைத்த அகோரம், அதையே விஜய்யிடம் சொல்லி இருக்கிறார்.
அகோரத்திற்கு வந்த அச்சம் நியாயமானதுதான் என்பதை புரிந்துகொண்டதால்தான் விஜய்யும், இப்போதைக்கு மாநாடு குறித்து எந்த அறிவிப்பும் செய்யாமல் உள்ளார் என்கிறது தவெக தரப்பு.
ஒருவேளை கட்சிக் கொடியை வேண்டுமானால் முன்கூட்டியே வெளியிட வாய்ப்பிருக்கிறது. கோட் படம் ரிலீசாகும் தியேட்டர்களில் பேனர் , கட் அவுட்களில் அது இடம்பெறும் என்பதால் அதை மட்டும் முன்கூட்டியே வெளியிட வாய்ப்பிருக்கிறது. மற்றபடி மாநாடு குறித்த எந்த அறிவிப்பும் கோட் பட ரிலீசுக்கு அப்புறம்தான் என்பதில் உறுதியாக உள்ளாராம் விஜய்.