
எப்பவுமே ஒரு படி அல்ல பல படிகள் மேலே ஏறிப்போவதுதான் மதுரை ரசிகர்களின் வழக்கம். விஜய் தேர்தலில் நின்று வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப்போவதாக முன்பு மதுரை தெற்கு தொகுதி தவெகவினர் போஸ்டர் அடித்து ஒட்டினர். இப்போது மதுரை மேற்கு தொகுதியில் 1,10,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தமிழக முதல்வர் ஆனார்’’ என்று விஜய்க்கு தவெகவினர் போஸ்டர் ஒட்டியிருக்கிறார்கள்.
இது விஜய்யின் எண்ணமா? இல்லை தவெகவினரின் விருப்பமா? என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.
மதுரை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் இருந்தாலும் மதுரை மேற்கு தொகுதியை குறிப்பிட்டுத்தான், அந்த போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கிறது.

இந்த மதுரை மேற்கு தொகுதி தவெகவினர், ‘’மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் தளபதி எந்த தொகுதியில் நின்றாலும் வெற்றி பெறுவார். அதிலும் மதுரை மேற்கு தொகுதியில் நின்றால் அமோக வெற்றி பெறுவார். இது எங்களின் விருப்பம்தான். இந்த விருப்பத்தை கோரிக்கையாக வைத்திருக்கிறோம். தளபதி மதுரை மேற்கு தொகுதியில் நின்றால் எங்களுக்கு மகிழ்ச்சி. இல்லையேல், தமிழ்நாட்டில் எந்த தொகுதியில் அவர் நின்றாலும் அவரை வெற்றி பெறச்செய்ய அந்த தொகுதிக்குச் சென்று வேலைபார்ப்போம்.
மதுர படத்தில் கலெக்டராக நடித்துள்ளார் விஜய். கில்லி படத்தில் மதுரைதான் கதைக்களம். வேலாயுதம் படத்திற்காக மதுரை புதூரில் ஒரு லட்சம் ரசிகர்களை திரட்டி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. இப்படி விஜய்க்கும் மதுரைக்குமான பந்தம் உள்ளது.

மதுரைக்கு பல சிறப்புகள் உள்ளன. அதில் மதுரை மேற்கு தொகுதிக்கும் பல சிறப்புகள் உள்ளன. அதில் ஒன்றுதான் இது எம்.ஜி.ஆர். போட்யிட்டு வென்ற தொகுதி. அதை மனதில் வைத்து தளபதி கண்டிப்பாக இந்த தொகுதியில் போட்டியிடுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இந்த தொகுதிக்கு பல சிறப்புகள் உள்ளன. பெரிய பெரிய ஆட்கள் எல்லோரும் இந்த தொகுதியில் போட்டியிட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக எம்.ஜி.ஆர். 1980 தேர்தலில் போட்டியிட்டு வென்று முதலமைச்சர் ஆனார். அதே கணக்கை தொடங்க உள்ளார் விஜய்’’என்கிறார்கள்.
விஜய் ஒருவேளை மதுரை மேற்கு தொகுதியில் நிற்பது உறுதியானால் அந்த தொகுதியின் திமுக பொறுப்பாளராக இருக்கும் மூர்த்திக்கும், அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் செல்லூர்ராஜூவுக்கும் சிக்கலாக அமைய வாய்ப்பிருக்கிறது என்ற பேச்சு எழுந்திருக்கிறது.