விஜய்யிடம் 27 வருடங்கள் மக்கள் தொடர்பாளராக இருந்தவர் பி.டி.செல்வகுமார். விஜய் நடித்த ‘புலி’ படத்தை சிபு தமீனுடன் இணைந்து தயாரித்தார் செல்வகுமார். இந்தப்படத்தின் ரிலீசுக்கு முதல் நாள் வருமான வரித்துறையினர் பி.டி.செல்வகுமாரின் வீடு மற்றும் அலுவலகங்களில் ரெய்டு நடத்தினர்.
இந்த ரெய்டுக்கு காரணமே விஜய் உடன் இருக்கும் நிர்வாகிகள்தான் என்பது வருமான வரித்துறை அதிகாரிகள் மூலமே செல்வகுமாருக்கு தெரியவந்தது. இதை விஜயிடம் சொல்வதற்கு முன்பாகவே, பி.ஆர்.ஓ. பொறுப்பில் இருந்து விலகி இருங்கள் என்று விஜய் தகவல் சொல்லி அனுப்பி இருக்கிறார்.
பட ரிலீஸ் – ரெய்டு எல்லா அழுத்தத்தாலும் நெஞ்சுவலி வந்து மருத்துனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில் வந்த அந்த தகவலை கேட்டு அதிர்ந்தார் செல்வகுமார்.

அன்று முதல் சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சென்று ‘கலப்பை மக்கள் இயக்கம்’ தொடங்கி சமூக சேவைகள் செய்து அம்மாவட்ட மக்களிடையே நன்மதிப்பை பெற்றிருக்கிறார். இதன் மூலம் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் நடத்திய அனைத்துக்கட்சி ஆலோசனைக்கூட்டத்தில் இரண்டு முறை பங்கேற்று ஆலோசனைகள் வழங்கி இருக்கிறார்.
தென்னகத்தில் மிகப்பெரிய ஆளுமையுடன் பல சமூகப் பணிகளை செய்து வரும் கலப்பை மக்கள் இயக்க தலைவர் செல்வகுமாரை தமிழக வெற்றி கழகத்திற்கு கொண்டு வந்தால் இன்னும் கூடுதல் பெரும்பான்மை பலம் கிடைக்கும் என்பதால் விஜயின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் விஜய்யுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
இது ஒருபுறமிருக்க, தங்கள் கூட்டணியில் இணையவும், தங்கள் கட்சியில் இணையவும் பல கட்சிகள் செல்வகுமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
விஜய் அழைத்தால் தவெகவுக்கு சென்றுவிடுவேன். அது இல்லாத பட்சத்தில் எந்த கட்சி தன்னை அழைக்கிறதே அந்த கட்சிக்கு சென்று கடைசி வரை விசுவாசமாக இருப்பேன் என்கிற முடிவுக்கு வந்துவிட்டார் செல்வகுமார்.

பல கட்சிகள் செல்வகுமாருடன் பேசி வருகின்ற நிலையில் திமுக, அதிமுக இரு கட்சிகளிடமும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல். அநேகமாக அவர் திமுகவில் இணையவே அதிகம் வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள். திமுக அரசின் திட்டங்களையும், ஆட்சியையும் தொடர்ந்து பாராட்டி வருகிறார் செல்வகுமார். விஜயிடம் பி.ஆர்.ஓவாக இருந்தாலும் கரூர் சம்பவத்தில் நடுநிலையில் நின்று தவெகவின் தவறுகளை சுட்டிக்காட்டினார் செல்வகுமார். அரசின் நடவடிக்கைகளை பாராட்டினார் செல்வகுமார்.
கட்சியில் இணைந்தால் தனக்கு சில முக்கியத்தும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் செல்வகுமார், அது தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். விரைவில் அவர் திமுகவில் இணைவார் என்கிறது கலப்பை மக்கள் இயக்க வட்டாரம்.
