தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சொந்த ஊர் புதுச்சேரி மாநிலம். இவர் முதன் முதலாக ரங்கசாமி ஆதரவில் புஸ்சி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். தற்போது ரங்கசாமி ஆதரவில் புதுச்சேரியில் தவெகவை ஆட்சிக்கட்டிலில் அமரவைக்கலாம் என்று கணக்கு போட்டு வேலைகள் செய்து வருகிறார்.
இதற்காக புதுச்சேரியில் விஜயை வைத்து ரோடு ஷோ நடத்தி மாஸ் காட்ட நினைத்தார். ஆனால், ரோடு ஷோவுக்கு அனுமதி அளித்தால் கரூர் வேலுச்சாமிபுரத்தில் ஏற்பட்ட துயரம் நிகழ வாய்ப்பிருக்கிறது என்பதை உனர்ந்த போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். இதையடுத்து பொதுக்கூட்டம் நடத்த மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை தவெக பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

இந்த பொதுக்கூட்டத்தில் புதுச்சேரியை சேர்ந்தவர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது தமிழ்நாட்டில் இருந்து வருவோருக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. கர்ப்பிணிகள், முதியோர்கள், குழந்தைகளுக்கும் அனுமதி இல்லை.
5000 பேர் மட்டுமே இக்கூட்டத்தில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், கியூர் ஆர் கோடு முறையில் கூட்டத்திற்கு வருபவர்கள் அனுமதிக்கப் படுகின்றனர்.
இதுகுறித்து புதுச்சேரி காவல்துறை எஸ்.எஸ்.பி.கலைவாணன் அளித்துள்ள விளக்கத்தில், ‘’புதுச்சேரி சாலைகள் குறுகலான சாலைகள் என்பதால் புதுசேரி மட்டுமல்லாது தமிழ்நாட்டில் இருந்தும் ஏராளமானோர் வருவார்கள். இதனால்தான் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்று தெரிவித்திருக்கிறார். மேலும், விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர் மாவட்ட மக்கள் வரவேண்டாம். அதை மீறி வந்தாலும் அனுமதி கிடைக்காது’’ என்று தெரிவித்திருக்கிறார்.
