சேலத்தில் வரும் டிசம்பர் மாதம் 4ம் தேதி அன்று விஜய் பரப்புரை செய்ய அனுமதி கோரி தவெக சார்பில் காவல்நிலையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக சேலத்தில் கோட்டை மைதானம், போஸ் மைதானம், சீலநாயக்கன்பட்டி ஆகிய 3 இடங்களை பட்டியலிட்டு இவற்றில் ஒன்றில் அனுமதி வழங்க கோரிக்கை வைத்துள்ளது தவெக.
வழக்கமாக சனிக்கிழமை பரப்புரை செய்து வந்த விஜய், இந்த முறை வியாழக்கிழமை பரப்புரை செய்ய அனுமதி கோரியிருக்கிறார்.
போஸ் மைதானம்

சிக்கல் என்ன? தவெக கேட்ட 3 இடங்களில் போஸ் மைதானம் தான் பெரிய இடம். அரசு பொருட்காட்சி எல்லாம் நடக்கும் இடம். சீலநாயக்கன் பட்டி மற்றும் கோட்டை மைதானம் ஆகிய 2 இடங்களுமே கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரம் போன்று சிறிய பகுதிகள்.
கரூர் சம்பவத்திற்கு பின்னர் அரசியல் கட்சி கூட்டங்களுக்கு எவ்வாறு அனுமதி வழங்க வேண்டும்? எவ்வாறு வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்? என்று கெடுபிடிகள் அதிகமாகி இருக்கும் நிலையில், தவெக அனுமதி கேட்டிருக்கும் அந்த 3 இடங்களில் கோட்டை மைதானம், சீலநாயக்கன்பட்டி பகுதிகள் நெருக்கடியான இடம் என்பதால் அங்கே அனுமதி தர வாய்ப்பில்லை என்கிறது சேலம் மாவட்ட காவல்துறை வட்டாரத்தில் இருந்து வரும் தகவல். அதே நேரம் போஸ் மைதானம் பெரிய இடம் என்றாலும் அங்கே தற்போது அனுமதி அளிப்பதில் இருக்கும் சிக்கல்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறது காவல்துறை. பொதுவாகவே கார்த்திகை மாத தீப திருவிழா என்பதால் அதுவும் பவுர்ணமி நாள் என்பதால் காவல்துறை அனுமதி வழங்குவதில் சிக்கல் உள்ளது என்றே தெரிகிறது.
சீலநாயக்கன் பட்டி

வேலுச்சாமிபுரம் பெரும் துயர சம்பவத்திற்குப் பின்னர் ஒரு மாதத்திற்கு மேல் அமைதியாக இருந்த விஜய், தவெக பொதுக்குழு , செயற்குழு கூட்டத்தில் பேசும்போது, தனது அரசியல் பயணம் இனிமேல் இன்னும் வேகமாக இருக்கும் என்றும் அறிவித்திருந்தார்.
அந்த பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றிருந்த நிர்வாகிகள் பலரும், நாமக்கல் – கரூர் மாவட்டத்தில் பரப்புரை மேற்கொண்டிருப்பதால் அடுத்ததாக இவ்விரு மாவட்டங்களுக்கு அருகே உள்ள சேலம் மாவட்டத்தில் இருந்து மறுபடியும் பிரச்சாரத்தை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர். அதன்படியே சேலம் மாவட்டத்தில் இருந்து மீண்டும் பரப்புரை பயணத்தை மேற்கொள்ள முடிவெடுத்துள்ளார் விஜய்.
கோட்டை மைதானம்

யார் காரணம்? வழக்கமாக சனிக்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார் விஜய். இதனாலேயே தமிழக அரசியலில் ‘சனிக்கிழமை’ என்ற வார்த்தையும், தவெகவின் பரப்புரையும் அதிகம் விமர்சனத்திற்கு உள்ளானது. விஜயின் ஆஸ்த்தான சோதிடர்தான் சனிக்கிழமை பரப்புரை மேற்கொள்ள அறிவுறுத்தி இருந்தார் என்று கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது டிசம்பர் 4ம் தேதி பவுர்ணமியில் வியாழக்கிழமை அன்று பரப்புரை மேற்கொள்ள அறிவுறுத்தி இருக்கிறார் என்கிறது பனையூர் வட்டாரத்தில் இருந்து வரும் தகவல்.
