தவெகவுக்கு முன்னும் பின்னும் விஜய்யின் நடவடிக்கைகள் தலைகீழ் மாற்றங்கள் கொண்டுள்ளன.
திருப்பாச்சி படம் பார்க்க டிக்கெட் கிடைக்காத விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மதுரை ரசிகரின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் சொல்லி, நிதி அளித்தார் விஜய்.
2014ஆம் ஆண்டில் சேலம், மதுரை, நெல்லை ரசிகர்கள் விஜய்யை சந்தித்துவிட்டு திரும்பி போகும் வழியில் விபத்தில் உயிரிழந்த நெல்லை ரசிகரின் படத்திற்கு அஞ்சலி செலுத்தினார் விஜய்.
தனது படத்திற்காக தியேட்டரில் கட் – அவுட் வைத்துவிட்டு வீடு திரும்பும்போது உயிரிழந்த ரசிகரின் குடும்பத்திற்கும் நேரில் சென்று ஆறுதல் கூறியவர் விஜய்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறியவர் விஜய்.
நீட் தேர்வு எழுத முடியாததால் உயிரிழந்த அரியலூர் அனிதாவின் குடும்பத்தினருக்கும் நேரில் சென்று ஆறுதல் கூறியவர் விஜய்.
சுனாமி பாதிப்பினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உண்டியல் குலுக்கி வசுல் செய்தவர் விஜய். சக நடிகர்கள் முதல்வர் நிவாரண நிதிக்கு பணம் கொடுத்தபோது, புதுச்சேரி , கடலூருக்கு நேரில் சென்று அம்மக்களுக்கு நிவாரணம் அளித்தவர் விஜய்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மக்களுக்கு நேரில் சென்று நிவாரணம் அளித்தவர் விஜய்.
அப்படிப்பட்ட விஜய் தவெக கட்சி தொடங்கிய பின்னர் தலைகீழாக மாறிப் போயிருக்கிறார்.
தவெக முதல் மாநில மாநாட்டிற்கு வந்த தொண்டர்கள் உயிரிழந்தபோது அது குறித்து மாநாட்டு மேடையில் பேசவே இல்லை. விபரத்தை சொல்லி, ஒரு நிமிடமாவது மவுன அஞ்சலி செலுத்தி இருக்கலாம். விஜய் அதைச் செய்யவில்லை. உயிரிழந்த தொண்டர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதலும் கூறவில்லை. இரங்கலும் தெரிவிக்கவில்லை.
இதனால் தொண்டர்கள் கொதித்தெழுந்து போராட்டங்களில் இறங்கியபோதும் கூட விஜய் மவுனமாகவே இருந்தார். கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்லி ஆனந்த் சென்று இரங்கல் தெரிவித்தபோது தலைவர் ஏன் இதைப்பற்றி பேசவே இல்லை என்றே ஆவேசக் கேள்விகளை அள்ளி வீசினர்.
கடைசியாக பனையூரில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில்தான் உயிரிழந்த தொண்டர்களுக்கு இரங்கல் தெரிவித்தார் விஜய்.
தனது கட்சியின் கொள்கைத்தலைவர் பெரியார் என்று சொல்லும் விஜய், பெரியார் திடலுக்கு நேரில் சென்று பெரியார் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ‘’சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, சமத்துவம் மலர, பெண்களுக்குச் சமஉரிமை கிடைக்க வாழ்நாள் முழுவதும் பெரும்பாடுபட்ட சுயமரியாதைச் சுடர் எங்கள் கொள்கைத் தலைவர் தந்தை பெரியாரின் 51ஆவது நினைவு தினத்தையொட்டி, எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன். அறிவார்ந்த, சமத்துவச் சமுதாயம் அமைக்க, தந்தை பெரியார் வழிகாட்டிய உண்மையான சமூக நீதிப் பாதையில் பயணிக்க அனைவரும் உறுதியேற்போம்’’ என்று எக்ஸ் தளத்திலும் பதிவு செய்தார்.
அதே விஜய் இன்று தவெக மாநாட்டிற்கு பிறகு, பெரியார் நினைவு நாளில் பெரியார் திடலுக்கு போகாமல், பெரியார் சிலைக்கும் மாலை அணிவிக்காமல், பனையூர் கட்சி அலுவலகத்திலேயே பெரியார் படத்திற்கு மாலை அணித்து மரியாதை செலுத்துகிறார். இதனால், கொள்கை தலைவரின் சிலைக்கு கூட நேரில் சென்று மரியாதை செலுத்தவில்லை விஜய் என்று விமர்சனம் சேர்ந்துள்ளது.
தனது கொள்கைத்தலைவர்களில் அம்பேத்கரையும் குறிப்பிட்டுள்ளார் விஜய். ஆனால், மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கரை அவதூறாக பேசிய போது, எல்லோரும் கண்டனம் தெரிவித்த பின்னரே கடைசியாக கண்டனம் தெரிவித்தார். ’’யாரோ சிலருக்கு வேண்டுமானால் அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம். சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் இந்திய மக்கள் அனைவருக்கும் அவர்கள் உயரத்தில் வைத்துப் போற்றும் ஒப்பற்ற அரசியல் மற்றும் அறிவுலக ஆளுமை, அவர்.
அம்பேத்கர்…அம்பேத்கர்… அம்பேத்கர்…அவர் பெயரை உள்ளமும் உதடுகளும் மகிழஉச்சரித்துக்கொண்டே இருப்போம். எங்கள் கொள்கைத் தலைவரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அண்ணலை அவமதித்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரை, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்.’’ என்றார். இதனால், கொள்கைத்தலைவரை அவதூறு செய்தவருக்கு முதல் ஆளாக கண்டனம் தெரிவிக்க வேண்டியம் விஜய், ஏன் காலம் தாழ்த்தி கண்டனம் தெரிவித்தார்? என்ற விமர்சனம் எழுந்தது.
அதுவும் அந்த கண்டனத்தில் ‘அமித்ஷா’ பெயரை ஏன் குறிப்பிடவில்லை. என்ன காரணம்? என்று வலைத்தளங்களில் போட்டு வறுத்தெடுத்து விட்டனர்.
கொள்கைத் தலைவர்கள் பெரியார், அம்பேத்கருக்கு கட்சி அலுவலகத்தில் சிலை வைத்தாவது மரியாதை செய்யலாமே என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.
’ஒர்க் ப்ரம் ஹோம்’ என்பது மாதிரி எல்லாவற்றையும் வீட்டிலேயே இருந்து கொண்டு வீட்டு அரசியல் செய்வதால், விஜய்க்கு என்ன கொரோனாவா? என்று கேட்க ஆரம்பித்து விட்டனர்.
வெளியே சென்றால் கூட்டம் கூடிவிடும். சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு விடும் என்று வெளியே போக முடியாததற்கு காரணம் சொல்லி வீட்டுக்குள்ளேயே இருந்து கொண்டு அரசியல் செய்யும் விஜய், வீட்டுக்குள்ளேயே இருந்து கொண்டுதான் வீடியோ மூலமாக பிரச்சாரம் செய்யப்போகிறாரா? என்ற கேட்க தொடங்க விட்டனர்.
தலைவர்களின் படங்களுக்கு வீட்டிலேயே படம் வைத்து மரியாதை செலுத்துவது ஜெயலலிதாவின் வழக்கம். அதுகூட வயது முதிர்வு மற்றும் உடல்நிலை காரணத்தால் அவர் அப்படிச்செய்தார் என்று சொல்லப்படுகிறது. இன்னமும் சினிமாவில் ஆடிப்பாடும் விஜய் இப்படிச் செய்வது சரியா?
நாகப்பட்டினம் சென்று மீனவர்களை சந்தித்து விஜய் பேசியது ஒரு மாநாடு போலவே இருந்தது. புதுச்சேரி, கடலூர் சென்று மீனவர்களை சந்தித்து உதவியபோதும் மாநாடு போலவே கூட்டம் கூடியது. அப்போதெல்லாம் கூட்டம் கூடுவதை பற்றி யோசிக்காத விஜய், இப்போது வெளியே செல்ல யோசிப்பதுதான், அதுவும் அரசியல் கட்சி தொடங்கிவிட்டு இப்படி தலைகீழாக மாறிப்போயிருப்பதுதான் பல விமர்சனங்களுக்கு காரணமாகி இருக்கிறது.