நடிகர் விஜய் தொடங்கி இருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தில் சேர நடிகர்கள் ராகவா லாரன்ஸும், KPY பாலாவும் தவெக பொ.செ. புஸ்லி ஆனந்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் கசிகின்றன.
ஸ்டண்ட் மாஸ்டரிடம் வேலை பார்த்து வந்த ராகவா லாரன்ஸ்சை ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்த்து, அப்போது அவரது திறமையை அறிந்து அவரை நடன இயக்குநர் ஆக்கி அழகுபார்த்தவர் ரஜினி. இதனால் தலைவா… தலைவா… என்று ரஜினி மீது உயிரையே வைத்துள்ளார் லாரன்ஸ். ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதாக இருந்த நிலையில், அதில் ரொம்பவே ஆர்வமாக இருந்து வந்தார் லாரன்ஸ். ரஜினி கட்சியில் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படுகிறது என்றெல்லாம் அப்போது தகவல் பரவின.
கடைசியில் ரஜினி கட்சியே தொடங்கவில்லை என்றாகிவிட்டது. ஆனாலும் வழக்கம் போலவே தனது சமூக சேவைகளை தொடர்ந்து வருகிறார் லாரன்ஸ். இயன்றவரை இல்லாதோருக்கு உதவிகள் செய்து வருகிறார். இதற்காகவே இப்போது ‘மாற்றம்’ என்ற அமைப்பை தொடங்கி அதன் மூலமும் சமூக சேவைகள் செய்து வருகிறார்.
இந்த மாற்றம் அமைப்பை அரசியல் கட்சியாக பின்னாளில் மாற்றுவாரா லாரன்ஸ்? என்ற பேச்சு இருந்து வந்த நிலையில், தான் விஜய்யின் அரசியல் கட்சி தவெகவில் இணைய அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்லி ஆனந்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் கசிகிறது.
விஜய் டிவியில் ‘கலக்கப்போவது யாரு?(KPY) நிகழ்ச்சின் மூலம் பிரபலமான KPY பாலா, மிகவும் ஏழ்மை நிலையில் வந்திருந்தாலும் தற்போது தான் சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பாலானவற்றை சமூக சேவைகளுக்கு செலவிட்டு வருகிறார். ஆம்புலன்ஸ் வசதி இல்லாத கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்து வருகிறார். மிக்ஜாம் புயலில் பாதித்த பகுதி மக்களுக்கு தன்னால் முடிந்த அளவுக்கு சாப்பாடு, தண்ணீர் மற்றும் நிதி உதவிகள் செய்தார். இந்த சமூக சேவையினை அவர் தொடர்கிறார்.
வளர்ந்து வரும் நடிகராக இருந்தாலும் இந்த அளவுக்கு அவர் செய்து வரும் உதவிகளால் சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமாக உள்ளார். இந்த சமூக சேவை மூலம் அரசியலுகு வரப்போகிறீர்களா? என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, ‘’எனக்கு பதவி ஆசை எல்லாம் கிடையாது. என் சேவையில் அரசியல் நோக்கமும் கிடையாது. இதை தொடர்ந்து செய்து வந்தாலே போதும் என்று நினைக்கிறேன்’’ என்று கூறியிருந்தார்.
ஆனால் அவர் இப்போது விஜய்யின் தவெகவில் இணைந்துவிட புஸ்லி ஆனந்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்.
சமூக சேவைகள் மூலம் லாரன்ஸும், பாலாவும் மக்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளனர். இந்த பிரபலத்தை பயன்படுத்தி இருவரும் அரசியலுக்கு நுழைகிறார்களா? இல்லை, அரசியலுக்கு செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் இவர்கள் இருவரும் சமூக சேவைகள் செய்து மக்களிடையே நன்மதிப்பை பெற்றார்களா? என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழ ஆரம்பித்துவிட்டன.