ஆளுநர் பதவியை அகற்ற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிய விஜய் இன்று ஆளுநரை சந்தித்து புகார் தெரிவித்திருப்பது பல்வேறு விமர்சனங்களை எழுப்பி இருக்கிறது.
‘கொள்கைக்திருவிழா’ என்று தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாட்டை நடத்திய விஜய், பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் செயற்குழு கூட்டத்தினை கூட்டி 28 தீர்மானங்களை நிறைவேற்றினார்.
அதில் ஒன்றுதான், ஆளுநருக்கு எதிரான தீர்மானம். ’’எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களின் செயல்பாடுகள் அரசியல் சாசன சட்டத்திற்குப் புறம்பாக நீடிப்பதால், ஆளுநர் பதவி என்பது தேவையா என்ற கேள்விகளை எழுப்பி உள்ளது. மாநில அரசுகளின் சுயமரியாதையை சீண்டும் ஆளுநர் பதவியை அகற்ற வலியுறுத்தப்படும்’’ என்பதுதான் அந்தத் தீர்மானம்.
ஆளுநர் பதவியை அகற்ற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிய விஜய் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து 15 நிமிடங்கள் பேசினார். இந்த சந்திப்பின் போது அவர் ஆளுநரிடம் கோரிக்கை மனு அளித்தார்.
அது குறித்து தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ‘’ இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தலைமையில் ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களைச் சந்தித்து மனு அளித்தோம்.
எங்கள் மனுவில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்றும், அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம்.
மேலும், தமிழகம் முழுவதும் அண்மையில் பெய்த பருவமழை மற்றும் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் உரிய நிவாரணம் கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தில் மாநில அரசு கேட்கும் நிவாரணத் தொகையை ஒன்றிய அரசு முழுமையாக வழங்க வேண்டும் என மனுவில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
எங்கள் கோரிக்கைகளைக் கேட்ட ஆளுநர் அவர்கள் அவற்றைப் பரிசீலிப்பதாகக் கூறினார்’’ என்று தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக விஜய் காலையிலேயே ஒரு கடிதம் வெளியிட்டிருந்தார். அக்கடிதத்தில், ‘’அன்புத் தங்கைகளே! கல்வி வளாகம் முதற்கொண்டு, ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் தாய்மார்கள் என்னருமைத் தங்கைகள், பெண் குழந்தைகளை அனைத்து தரப்பு பெண்களுக்கும் எதிராக நடக்கும் சமுக அவலங்கள், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டு அவலங்கள், பாலியல் குற்றங்கள் என்று பல்வேறு வன்கொடுமைகளைக் கண்டு, உங்கள் அண்ணனாக மன அழுத்தத்திற்கும் சொல்லொணா வேதனைக்கும் ஆளாகிறேன்.
யாரிடம் உங்கள் பாதுகாப்பை கேட்பது? நம்மை ஆளும் ஆட்சியாளர்களை எத்தனை முறை கேட்டாலும் எந்தப் பயனுமில்லை என்பது தெரிந்ததே. அதற்காகவே இக்கடிதம்.
எல்லா சூழல்களிலும், நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன், அண்ணனாகவும், அரணாகவும். எனவே எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள். பாதுகாப்பான தமிழகத்தைப் படைத்தே தீருவோம். அதற்கான உத்திரவாதத்தை நாம் அனைவரும் இணைந்தே விரைவில் சாத்தியப்படுத்துவோம்’’ என்று எழுதி இருந்தார்.
ஆளுநர் தேவை இல்லை என்று சொல்லிவிட்டு ஆளுநரிடமே சென்று புகார் அளித்திருப்பது குறித்து அரசியல் கட்சியினர் பல்வேறு விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.
’’ஆளுனரை சந்தித்து முறையிடுவதை ’சாட்டை புகழ்’ அண்ணாமலை மற்றும் பாஜக ஆதரவாளர்களை வைத்து தான் தில்லி பாஜக அரசியல் செய்வது வழக்கம்.
இப்போது தவெக தலைவர் நடிகர் விஜய்யை வைத்து அரசியல் செய்கிறது.
ஆளுனர் ரவியை விஜய் 15 நிமிடம் சந்தித்தார். ஊடகவியலாளர்களை கண்டு கையசைத்தார். ஆனால், ஊடகத்தினருக்கு பேட்டி கொடுக்காமலே சென்றுவிட்டார்.
இதற்கு பெயர் தான் Elite அரசியல்’’ என்று விமர்சித்துள்ளார் விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு.
’’வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று ஆளுநரை சந்தித்தார். ஆளுநர் பதவியே கூடாது என்று தனது கட்சி நிறைவேற்றிய தீர்மானத்தை ஆளுநரிடம் நேரில் கையளிக்கவே இந்த அவசர அவசரமான சந்திப்பு போலும்’’என்று விமர்சித்துள்ளார் திராவிட விடுதலை கழக பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன்.
விஜய் மனு அளித்தது குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘ஜோசப் விஜய்’ மனு அளித்தார் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.