எடப்பாடி பழனிச்சாமியும் விஜய்யும் சந்திக்க ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல்கள் பரவும் நிலையில், விஜய் அதிமுக கூட்டணிக்கு வந்தால் நல்லதுதான் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜூ சொல்லி அந்த தகவலை உறுதிப்படுத்துகிறார்.
கட்சியின் பெயரை மட்டுமே அறிவித்திருக்கும் விஜய், இன்னமும் கொள்கை, சின்னம் எதையும் அறிமுகப்படுத்தவில்லை. ஆனாலும் அவரின் அரசியல் குறித்து பல்வேறு செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன.
2026 சட்டமன்ற தேர்தல்தான் இலக்கு என்று சொல்லும் விஜய், கோட் பட ரிலீசுக்கு பின்னர் கட்சி மாநாட்டை நடத்தி அதில் கொள்கை, கோட்பாடுகள், செயல்திட்டங்களை வெளியிட உள்ளார். இதற்குள் நடக்கும் தேர்தல்களில் விஜய் எந்த கட்சிக்கு ஆதரவு? என்ற சலசலப்புகளும் எழும் என்றுதான், 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக, இடைப்பட்ட காலத்தில் தமிழக வெற்றிக்கழகம் தேர்தலில் போட்டியிடாது. எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தல் நேரத்தில் கோட் படத்தின் பாடலில் மைக் காட்டப்பட்டதால் அது தங்களது கட்சிக்கான விஜய்யின் மறைமுக ஆதரவு என்று நாம் தமிழர் கட்சி எடுத்துக்கொண்டது. தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் விஜய்யும் சீமான் பெற்ற வெற்றிக்கும், விசிக திருமாவளவன் பெற்ற வெற்றிக்கும் வாழ்த்து தெரிவித்தார்.
இதையடுத்து விஜய் – திருமாவளவன் – சீமான் இணைந்து 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க இருப்பதாக செய்திகள் பரவின. ஆனால், சீமானும் விஜய் கூட்டணி அமைக்க இருப்பதாகவும், முதல்வர் – துணை முதல்வர் என்று இருவரும் கூட்டணி ஒப்பந்தம் செய்ய இருப்பதாகவும் செய்திகள் பரவின. இந்த செய்திகளை உறுதிப்படுத்துகின்ற வகையில், விஜய் வீட்டிற்கு சென்று சீமான் சந்தித்து பேசினார் என்றும், சீமான் வீடு வரைக்கும் விஜய் சென்றார் என்றும் செய்திகள் பரவின.
விஜய்யை பொறுத்தவரையிலும் கூட்டணி அமைத்து போட்டியிடுவார் என்றே தோன்றுகிறது என திருமாவளவனும் சொல்லி இருக்கும் நிலையில், விஜய்யுடன் அவருடன் கூட்டணி, இவருடன் கூட்டணி என்ற செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன.
அதிமுகவுடன் கூட்டணி அமைக்க விஜய் தரப்பு முயன்று வருவதாகவும் தகவல் பரவுகிறது. விஜயகாந்த், அதிமுகவுடன் கூட்டணி அமைத்து எதிர்க்கட்சி தலைவர் ஆனதை கருத்தில் கொண்டு, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை சந்தித்தால் நல்லதாக அமையும் என்று விஜய்க்கு அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் அறிவிறுத்தியதாக தகவல் முன்பு பரவி இருந்த நிலையில், அதிமுகவுடன் விஜய் கூட்டணி அமைக்க இருப்பதாகவும், இதற்காக இபிஎஸ் -விஜய் சந்திப்பு நிகழ இருக்கிறது என்றும் தகவல் பரவுகிறது. அதே போல், முதல்வர் – துணை முதல்வர் என்று சீமானுடன் ஒப்பந்தம் செய்ய ஆலோசனை நடந்து வருவதாக தகவல் பரவியது போன்றே, முதல்வர் – துணை முதல்வர் என்று இபிஎஸ்சுடன் கூட்டணி ஒப்பந்தம் போட உள்ளார் விஜய் என்றும் தகவல் பரவுகிறது.
இந்த தகவல்களை உறுதிப்படுத்துகின்ற மாதிரிதான் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜூவின் பேச்சும் அமைந்திருக்கிறது. ’’ எம்.ஜி.ஆர் போல் மக்களுக்கு கொடுக்க நினைக்கும் விஜய் அதிமுகவுடன் கூட்டணிக்கு வந்தால் நல்லதுதான்’’ என்கிறார் செல்லூர் ராஜூ.
விஜய் அரசியலுக்கு வருவதாக செய்திகள் வந்ததில் இருந்தே அவர் நல்லவர்; அவர் அதிமுகவுக்கு வந்தால் நல்லது என்று சொல்லி வருவதால், ஒருவேளை தவெகவில் சேர செல்லூர் ராஜூ துண்டு போடுகிறாரா? என்றும் சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.
அஜித்குமாரை அதிமுகவிற்குள் கொண்டு வந்து முக்கிய பொறுப்பில் அமரவைக்க ஜெயலலிதா விரும்பினார் என்று தகவல் உண்டு. அதை மெய்ப்பிக்கும் வகையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் அடிக்கடி, அஜித்குமாரை அதிமுக வசம் கொண்டு வரும் விதமாகவே பேசி வருகிறார். செல்லூர் ராஜூவோ விஜய்யை அதிமுக வசம் கொண்டு வர பேசி வருகிறார்.
தலைவா படத்தின் போது நடந்த பிரச்சனைகளை எல்லாம் மனதில் கொண்டு விஜய் அதிமுக பக்கம் செல்ல வாய்ப்பே இல்லை என்கிறார்கள் சீமான் தரப்பினர் சிலர்.