2023-24 கல்வியாண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் தமிழகம் முழுவதும் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது தமிழக வெற்றிக்கழகம். முதற்கட்டமாக ஜூன் 28ம் தேதி நடந்த விழாவில் பேசிய விஜய் மாணவர்களின் முக்கிய பிரச்சனையான நீட் தேர்வு குறித்து எதுவும் பேசவில்லை என்ற விமர்சனம் எழுந்தது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற 2ம் கட்ட விழாவில் நீட் தேர்வு குறித்து மட்டுமே பேசினார் விஜய். இன்றைய விழாவில் பேச்சு இல்லை. விருது வழங்குவது மட்டும்தான் என்று முடிவெடுத்திருந்த விஜய், தொடர் விமர்சனங்களால் நீட் தேர்வு குறித்த தனது கருத்தை வெளிப்படுத்தினார்.
*நான் இன்றைக்கு எதுவும் பேச வேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஆனால், முக்கியமான ஒன்றை பேசாமல் போவது சரியல்ல என்று நினைக்கிறேன். அது என்னவாக இருக்கும் என்பதை நீங்கள் நினைத்திருப்பீர்கள். ஆமாம், அது நீட்.
*தமிழ்நாட்டு மாணவ , மாணவிகள், குறிப்பாக கிராமப்புறங்களில் இருக்கும் ஏழை,எளிய மாணவ, மாணவிகள் , பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட , தாழ்த்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் எல்லோரும் நீட் தேர்வால் ரொம்பவும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதே சத்தியமான ஒரு உண்மை.
நீட் தேர்வால் எழும் 3 பிரச்சனைகள்:
*நீட்டால் மூன்று பிரச்சனைகள் உள்ளன என்று நான் பார்க்கிறேன்.
1. மாநில உரிமைகளுக்கு எதிரானதாக உள்ளது நீட் 1975க்கு முன்னாள் நீட் தேர்வு மாநில பட்டியலில் இருந்தது. ஒன்றிய பாஜக அரசு வந்த பின்னர்தான் இதை பொதுப்பட்டியலில் சேர்ந்தது. எனக்குத்தெரிந்து, முதல் பிரச்சனையாக இதுதான் ஆரம்பமானது.
2. ஒரே நாடு – ஒரே பாடத்திட்டம் – ஒரே தேர்வு. இது அடிப்படையிலேயே கல்விகற்கும் நோக்கத்திற்கு எதிரானது என்றே நான் பார்க்கிறேன். அந்தந்த மாநிலத்திற்கு ஏற்றமாதிரியே பாடத்திட்டங்கள் இருக்கணும். மாநில உரிமைகளுக்காக மட்டுமே நான் இதை கேட்கல. கல்வி முறையில பல்வேறு பார்வைகள் உள்ளன.
மாநில மொழியில் படித்த மாணவர்களுக்கு NCERT SYLLABUSல் தேர்வு வைப்பது என்ன நியாயம்? கிராமப்புறத்தில் இருக்கும் மாணவர்களின் மருத்துவ படிப்பிற்கு இது எவ்வளவு கடினமானதாக இருக்கும். கல்வி என்பது பல்வேறு கண்ணோட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இருக்க வேண்டும். பன்முகத்தன்மை என்பது பலமே தவிர பலவீனம் என்று சொல்ல முடியாது.
3.கடந்த மே-5ம் தேதி அன்று நடந்த நீட் தேர்வில் நடந்த முறைகேடுகளால் நீட் தேர்வில் உள்ள நம்பகத்தன்மையே சுத்தமாக போய்விட்டது.
நீட் பிரச்சனைக்கு என்னதான் தீர்வு?
*இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் என்னதான் தீர்வு என்றால்? நீட் விலக்குதான் உடனடி தீர்வு.
*நீட் விலக்கு கோரி தமிழக சட்டமன்றம் கொண்டுவந்துள்ள தீர்மானத்தை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன்.
*தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து ஒன்றிய அரசு இந்த பிரச்சனையை விரைந்து முடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
*நீட் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுதான் என்ன? கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும். ஒருவேளை அதில் ஏதாவது சிக்கல்கள் இருந்தால் இடைக்கால தீர்வாக இந்திய அரசியலமைப்பு சட்டத்தை திருத்தி ஒரு சிறப்பு பொதுப்பட்டியல் ஒன்றை உருவாக்கி அதில் கல்வி மற்றும் சுகாதாரத்தை சேர்க்க வேண்டும்.
*இப்போது இருக்கும் அந்த பொதுப்பட்டியலில் உள்ள பிரச்சனை என்னவென்றால்? மாநில அரசுக்கு என்னதான் அதிகாரம் இருந்தாலும் அது முழுக்க முழுக்க ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. மாநில அரசுகளுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்பதே எனது தாழ்மையான வேண்டுகோள்.
*எய்ம்ஸ், ஜிப்மர் மாதிரி ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனைகளுக்கு வேண்டுமானால் நீட் தேர்வு நடத்திக்கொள்ளலாம்.
இது என்னோட ஆலோசனைதான். இது நடக்குமா என்பது தெரியாது. நடந்தாலும் அதை நடக்க விட மாட்டாங்க என்பதும் தெரியும். ஆனால், எனது ஆலோசனையை சொல்கிறேன்.
*இதுதான் நீட் பற்றி தனிப்பட்ட எனது கருத்து.
*மற்றபடி மாணவர்கள் ஜாலியாக படிங்க. இந்த உலகம் ரொம்ப பெரிசு. வாய்ப்புகள் அவ்வளவு கொட்டிக்கிடக்குது. ஒன்ணு ரெண்டு தவறவிட்டாலும் கவலைப்படாதீர்கள். இன்னொரு வாய்ப்பை கடவுல் வைத்துக்கொண்டு காத்திருக்கிறார் என்று அர்த்தம். நம்பிக்கையுடன் இருங்கள். வெற்றி நிச்சயம்! வெற்றி நிச்சயம்!!