தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் எம்.ஜி.ஆர். பாணியில் ஏதாவது ஒரு காட்சியில் வந்துவிடுவதை விஜய் வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த அளவிற்கு அவர் மீது ஈடுபாடு கொண்டவர் விஜய் என்று அவரது தாயார் ஷோபா சந்திரசேகரே சொல்லி இருக்கிறார். தவெக மாநாட்டு மேடையிலும் கூட எம்.ஜி.ஆர். குறித்து பெருமையாகப் பேசினார் விஜய். ஆனால், கடந்த 24.12.2024 அன்று எம்.ஜி.ஆரின் நினைவு நாள் அன்று அவருக்கு மரியாதை செலுத்தவில்லை விஜய்.
அன்றைய தினம் தந்தை பெரியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு தனது பனையூர் இல்லத்தில் பெரியாரின் புகைப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார் விஜய். அதிமுகவின் நிறுவன தலைவர் எம்.ஜி.ஆர். அதனால் அவரின் நினைவுநாளில் மரியாதை செலுத்தவில்லை விஜய் என்று சில பத்திரிகையாளர்கள் விஜய்க்கு முட்டு கொடுத்தனர்.
அப்படிப் பார்த்தால் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 100ஆவது ஆண்டு பிறந்த நாளுக்கு மட்டும் வாழ்த்து சொல்வது என்ன கணக்கு? என்ற கேள்வி எழுந்தபோது, அது அரசியல் கணக்கு என்று சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
தான் நடித்த முதல் படம் நாளைய தீர்ப்பு படம் தோல்விப்படமாக அமைந்ததால், அப்போது உச்சத்தில் இருந்த விஜயகாந்துடன் தன் மகன் நடித்தால் பிரபலமடைந்துவிடுவார் என்று நினைத்த எஸ்.ஏ.சந்திரசேகர், விஜயகாந்திடம் கேட்க, அவரும் அந்த வானத்தை போல மனம் படைத்து சம்மதித்து நடித்துக் கொடுத்தார்.
அப்படிப்பட்ட விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியனுடன் ஒரு படத்தில் நடித்துக்கொடுக்கும்படி அக்குடும்பத்தினர் கேட்டும் விஜய் சம்மதம் தெரிவிக்கவில்லை. அன்றைக்கு விஜயகாந்துக்கு இருந்த மனசு இன்றைக்கு விஜய்க்கு இல்லாதது கண்டு ரசிகர்கள் விஜய்க்கு கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், விஜயகாந்தின் மறைவு.
விஜயகாந்த் உடல்நலம் குறைந்து வீட்டில் இருந்தபோது திரைத்துறையினர் பலரும் நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்து வந்தனர். கடைசி வரையிலும் விஜய் சென்று பார்க்கவே இல்லை. இதனால் விஜயகாந்து மறைவுக்கு அஞ்சலி செலுத்த விஜய் வந்தபோது, அவர் மீது ஆத்திரத்தில் காலணியை வீசினர். ‘’வெளியே போ..வெளியே போ..’’ என்று விஜயகாந்த் ரசிகர்கள் ஆவேசமாக சத்தம் போட்டுக்கொண்டே இருந்தனர்.
இந்நிலையில் விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினம் நேற்று முன் தினம் 28.12.2024. விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு நாள் விழாவுக்கு கலந்துகொள்ள முறைப்படி விஜயகாந்தின் மகனும், மைத்துனர் சுதீஷும் நேரில் சென்று விஜய்க்கு அழைப்பு விடுத்தனர். அப்படி இருந்தும் விஜயகாந்தின் நினைவு தினத்திற்கு நேரில் செல்லவில்லை விஜய்.
ஓபிஎஸ், தமிழிசை சவுந்தரராஜன், சீமான், அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நேரில் சென்று விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். சம்பிரதாயத்திற்கு கூட விஜயகாந்திற்கு எக்ஸ் தளத்தில் பதிவிட வில்லை விஜய்.
தவெகவின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மட்டும் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு வந்திருக்கிறார். அவரிடம், ‘’விஜய் சார் ஏன் வரல?’’ என்று தேமுதிகவினர் கேட்டபோது, அது குறித்து எந்த காரணமும் சொல்லாமல், ‘’எப்படி பேரைச்சொல்லலாம்’’ என்று கொந்தளித்துள்ளனர் புஸ்ஸி ஆனந்தும் அவருடன் வந்தவர்களும். இத்தனைக்கும் ‘விஜய்’ என்று கூட சொல்லவில்லை தேமுதிகவினர். ‘விஜய் சார்’ என்றுதான் சொல்லி இருக்கிறார்கள். அப்படி இருந்தும் ஆவேசப்பட்டுள்ளனர் தவெகவினர்.
எம்.ஜி.ஆர்., விஜயகாந்தை விடுங்கள். பெற்று ஆளாக்கிய தந்தைக்கே அவர் நன்றி மறந்தவராக உள்ளார் என்கின்றனர் திரையுலகினர்.
படங்களில் சிகரட் புகைக்கக்கூடாது என்பது உள்பட பல்வேறு காரணங்களுக்காக விஜய்யின் படங்களுக்கு கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்தவர் அன்புமணி ராமதாஸ். அப்படி இருந்தும் அன்புமணியின் மகள் சங்கமித்ரா தயாரித்த ‘அலங்கு ‘ திரைப்படம் வெற்றியடைய வேண்டும் என்று சங்கமித்ராவுக்கும் படக்குழுவினருக்கும் வாழ்த்து சொல்லி, அப்படத்திற்கு விளம்பரம் செய்தார் விஜய்.
தன்னை எதிர்த்த அன்புமணியின் மகள் படத்திற்கு இப்படி விளம்பரம் செய்யும் விஜய், தன்னை ஆளாக்கிய தந்தை சந்திரசேகர் கதையின் நாயகனாக நடித்திருக்கும்’கூரன்’ படத்திற்கு எந்த விளம்பரமும் செய்யவில்லை விஜய் என்று சொல்கிறார்கள்.
’அலங்கு’, ‘கூரன்’ இரு படங்களுமே நாயை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படங்கள். அன்புமணி தன்னை எதிர்த்தவர் என்றாலும், பாமக ஓட்டு வங்கியை கணக்கில் கொண்டுதான் சங்கமித்ரா படத்திற்கு விளம்பரம் செய்தார் விஜய். அது ஒரு ஓட்டுக்கணக்கு. சந்திரசேகர் படத்திற்கு அந்த ஓட்டுக்கணக்கு வராது என்பதால்தான் விஜய் கூரன் படத்தை கண்டுகொள்ளவில்லை என்கிறார்கள்.