கடந்த அக்டோபர் மாதம் 27ம் தேதி அன்று இரவில் கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் நடந்த தவெக கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தில் ஆளுங்கட்சி உள்பட அனைத்துக்கட்சியினரும் பாதிக்கப்பட்டோர் உடன் இருந்தனர். ஆனால் சம்பந்தப்பட்ட தவெக தரப்பில் இருந்து ஒரு ஆளைக்கூட காணவில்லை.
சம்பவம் நடந்ததை அறிந்ததும் கட்சியின் தலைவர் விஜய் சென்னைக்கு வந்துவிட்டார். பொதுச்செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளும் தலைமறைவாகிவிட்டனர்.

ஒரு மாதம் கழித்துதான் பாதிக்கப்பட்டோரை கரூரில் இருந்து சென்னைக்கு வரவைத்து துக்கம் விசாரித்தார் விஜய். இது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. பல்வேறு தரப்பினரை இதை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அரசியல் சரித்திரத்தில் தவெகவுக்கு இது ஒரு கரும்புள்ளியாக அமைந்துவிடும் என்று பலரும் எச்சரித்தும், கரூருக்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்டோரை நேரில் சந்திக்காமல், சென்னைக்கு வரவைத்தே துக்கம் விசாரித்ததை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடுமையாக சாடி இருக்கிறார்.
’’கரூர் சம்பவத்தில் விஜய் பற்றி முதலமைச்சர் எதுவும் பேசவில்லை. சம்பவத்திற்கு பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்று மட்டும்தான் பேசினார். அதற்காக அவரை சகட்டுமேனிக்கு திட்டுகிறார். அடுத்து நாங்கதான் வருவோம். எங்களுக்கு திமுகதான் போட்டி என்று சொல்கிறார் விஜய்.
கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியான நிலையில் துக்கம் விசாரிக்காமல், திருச்சியில் கூட தங்காமல் ஒரே ஓட்டமாக சென்னைக்கு ஓடி வந்துவிட்டார் விஜய்
அதன்பிறகு கரூர் பக்கமே போகாமல், அதைப்பற்றிய குற்ற உணர்ச்சியும் இல்லாமல், வருத்தப்படாமல், கையில் ரூபாய் இருக்கிறது என்பதற்காக ,நிதி கொடுக்கிறேன் எல்லோரும் என்னைப்பார்க்க வாங்க என்று உயிரிழந்தவர்களின் உறவுகளிடம் சொன்னார்

துக்கம் கேட்கப்போகிறவன் அந்த வீட்டில் போய்தான் கேட்பானே தவிர, என் வீட்டுக்கு வா துக்கம் விசாரிக்க வேண்டும் என்று சொல்வது தமிழ்நாட்டு சரித்திரத்திலேயே யாரும் செய்யாத பித்தலாட்டுத்தனம்.
அரசியலில் ஆத்திச்சூடி கூட தெரியாத விஜய், ஆட்சிக்கு வந்துவிட்ட மாதிரி கனவுலகில் மிதந்துகொண்டு, காகிதக்கப்பலில் கடல் தாண்ட முனைகிறார். ஆகாய வெளியில் கோட்டை கட்டுகிறார். அவர் கனவுகள் அனைத்தும் கானல் நீராக போய்விடும்’’என்று மதிமுக நிர்வாகக்குழுவில் பேசிய வைகோ விஜயை சரமாரியாக விளாசித்தள்ளி இருக்கிறார்.
முன்னதாக நேற்று 6.11.2025ல் வெளியிட்ட தனது அறிக்கையில், ‘’75 ஆண்டுகளை கடந்து வந்த தியாகிகள் கோட்டை திராவிட முன்னேற்றக் கழகத்தை சற்றும் மான வெட்கம் இன்றி எள்ளி நகையாட முனைகின்ற விஜய் நிலைமை கண்டனத்திற்கு உரியது. இனிமேலாவது அவர் நிதானம் இழக்காமல் அரசியல் நாகரிகத்தை கடைப்பிடிக்க வேண்டும்’’ என்று கடுமையாக சாடி இருந்தார் வைகோ
