
தமிழக வெற்றிக்கழகம் கட்சியை தொடங்கி மாநாடு நடத்திய விஜய், பொது நிகழ்வுகளுக்கு இரண்டு முறை மட்டுமே வெளியே வந்திருக்கிறார். மற்றபடி பனையூர் கட்சி அலுவலகத்திற்கு உள்ளேயே இருந்துகொண்டு அரசியல் செய்கிறார். மழை வெள்ளத்தில் பாதித்தவர்களை கூட கட்சி அலுவலகத்திற்கு வரவழைத்தே நிவாரணம் கொடுத்தார் விஜய்.
தற்போது நடித்து வரும் படம் முடிந்த பின்னரே தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார் விஜய் என்று கூறப்படுகிறது.
தற்போது பொது நிகழ்வுகளுக்கு எதுவும் விஜய் செல்லாமல் இருக்கும் நிலையில், அவருக்கு மத்திய அரசு ‘Y’ பிரிவு பாதுகாப்பு அளித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

’’எந்த அடிப்படையில் விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு அளித்திருக்கிறது மத்திய அரசு?’’என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் அதிமுக மூத்த நிர்வாகி கே.பி.முனுசாமி.
அவர் மேலும், ‘’அரசியல் ரீதியாக சுயநலத்தோடு விஜய்யை தங்கள் பக்கம் இழுப்பதற்காக , அவரை திருப்திப்படுத்தவே பாஜக இப்படிச் செய்துள்ளது . பாஜகவின் கடந்த கால அரசியல் வரலாற்றை திரும்பிப் பார்த்தாலே விஜய்க்கு எதற்காக பாதுகாப்பு தந்திருக்கிறார்கள் என்கிற உண்மை தெரியும்’’ என்கிறார்.
அதிமுக எழுப்பிய இந்த கேள்வி தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.