
இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று.. எனும் பாடல்தான் பல சினிமாக்களுக்கும் பின்னணியில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
யார் யாருக்கோ கதை சொல்லப்பட்டு யார் யாரோ நடிப்பதாக இருந்து கடைசியில் ஒருவர் நடித்து அந்தப் படம் வெளிவந்த பின் அந்தப் படத்தில் முதலில் நடிப்பதாக இருந்தவர்களின் பெயர்கள் வெளிவரும்போது ஒரு சுவாரஷ்யம்தான்.
சேது படத்தில் முதலில் நடித்தவர் விக்னேஷ். அதற்கு முன்பு அப்படத்தில் நடிக்க இருந்தவர் முரளி. அதே போன்றுதான் ‘பூவே உனக்காக’ படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் பிரசாந்த். ’காதலுக்கு மரியாதை’ படத்திலும் முதலில் நடிக்க இருந்தவர் பிரசாந்த்.

’துள்ளாத மனமும் துள்ளும்’ படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் வடிவேலு. அவரை ஹீரோவாக வைத்து படமெடுக்க தயாரிப்பாளர்கள் முன் வராததால் முரளியை வைத்து இயக்க முன் வந்தார் எழில். கதையைக் கேட்டுவிட்டு தனக்கு பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டார் முரளி. ஆர்.பி.சவுத்ரிதான் கதை சொல்ல எழிலை அனுப்பி இருந்தார். முரளி கதை பிடிக்கவில்லை என்று சொன்னதால் விஜய் உள்ளே வந்துவிட்டார்.
’கஜினி’ படத்தில் முதலில் நடித்தவர் அஜித். ’மிரட்டல்’ என்ற பெயரில் அப்படத்தின் ஆரம்பக் கட்ட காட்சிகள் எடுக்கப்பட்டன. ’குஷி’ படத்தில் முதலில் கமிட் ஆனவர் பிரபுதேவா.

’ரன்’ படத்தின் கதையை முதலில் ஸ்ரீகாந்திடம்தான் சொன்னார் லிங்குசாமி. ஸ்ரீகாந்த்துக்கு அந்தக் கதை ஏனோ ஈடுபாடு இல்லாததால் அதில் மாதவன் உள்ளே வந்தார். படம் படு ஹிட்.
பூவே உனக்காக படத்தில் மட்டுமல்லா காதலன் படத்திலும் முதலில் கமிட் ஆனவர் பிரசாந்த். கால்ஷீட் பிரச்சனையால் அப்படத்தில் அவரால் நடிக்க முடியாமல் போய்விட்டது. இப்படி பல பிரபலமான படங்களுக்குப் பின்னால் பல சுவாரஷ்யக் கதைகள் இருக்கின்றன.
அப்படித்தான் ‘என் ராசாவின் மனசிலே..’ படத்திற்குப் பின்னாலும் பல கதைகள் இருக்கின்றன. இப்படத்திற்கு முதலில் கமிட் ஆனவர் ராமராஜன்.
ராஜ்கிரணின் அந்த முரட்டுத்தனமான கேரக்டரைப் பார்த்துவிட்டு அதில் முதலில் நடித்தவர் ராமராஜனா? என்ற ஆச்சரியம் பலருக்கும் வரும்.

பட விநியோகத்தில் இருந்த ராஜ்கிரணை, ‘ராசாவே உன்னை நம்பி’ படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆக்கினார் ராமராஜன். அந்தப்படத்தில் ‘சீதைக்கு ஒரு ராவணன் தீக்குளிக்க தேதி வச்சான்’ பாடலுக்கு ராஜ்கிரண் நடித்திருப்பார்.
அடுத்து ‘என்னப் பெத்த ராசா’ படத்தை ராமராஜனை வைத்தே தயாரித்தார் ராஜ்கிரண். இப்படத்திலும் ராஜ்கிரண் நடித்திருந்தார். இதற்கு அடுத்து மீண்டும் இந்த வெற்றிக்கூட்டணி ‘பெத்தவ மனசு’ படத்தின் மூலம் இணைந்தது. அந்தப்படத்தில் ராஜ்கிரண் இயக்குநர் அவதாரம் எடுத்தார். இணை இயக்குநராக கே.எஸ்.ரவிக்குமார் இருந்தார். அந்தப்படம் பாதியில் நின்றுவிட்டது.
பிறகு அந்தப் படத்தை கஸ்தூரி ராஜா இயக்கினார். ராமராஜன் நடிப்பில் அந்தப்படத்தைப் பார்த்துவிட்டு இளையராஜாவும் பாராட்டினார். ஆனால் அந்தப் படத்தை ராஜ்கிரண் ரிலீஸ் செய்யவே இல்லை.

ராசாவே உன்னை நம்பி, என்னப் பெத்த ராசா படங்களில் நடித்த ராஜ்கிரணுக்கு தானே அந்தக் கதையில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது. இதனால் எடுத்த படத்தில் பணம் வீணாகப் போனாலும் பரவாயில்லை என்று நினைத்து மீண்டும் தானே நடித்து தயாரித்தார்.
இது ஒரு பக்கம் இருக்க, ‘என் ராசாவின் மனசிலே..’ படத்தில் நடிக்க விஜயகாந்தை அணுகி இருக்கிறார் கஸ்தூரி ராஜா. அவரோ தனது மைத்துனர் சுதீஷை ஹீரோவாக வைத்து அந்தப் படத்தை இயக்கச் சொன்னார். இந்த விசயம் சுதீஷுக்கே தெரியாது. முதற்கட்ட பேச்சுவார்த்தையில் இருந்த போது ராமராஜன், ராஜ்கிரண் அந்தக் கதையில் உள்ளே வந்துவிட்டார்கள்.

ராஜ்கிரணை தயாரிக்கச் சொல்லி கஸ்தூரி ராஜா கதை சொன்னபோது, ராமராஜன் கால்ஷீட் இருக்குது. இந்தக் கதையை அவரிடம் சொல்லுங்க என்று கஸ்தூரி ராஜாவை அனுப்பி வைத்தவர் ராஜ்கிரண். ஆனாலும் பின்னர் அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு ராஜ்கிரணுக்கு அதில் நடிக்க ஆசை வந்துவிட்டது.
என் ராசாவின் மனசிலே படத்தில் சுதீசை நடிக்க வைக்க நடந்த முயற்சியை நேற்று நடந்த படைத்தலைவன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் போட்டு உடைத்தார் கஸ்தூரி ராஜா. இதைக்கேட்டு சுதீஷின் சகோதரி பிரேமலதா விஜயகாந்த், சண்முகப்பாண்டியன்( விஜயகாந்தின் மகன்) உள்ளிட்டோருக்கு ஆச்சரியம். அந்த ஆச்சரியத்தை மேடையிலேயே பகிர்ந்து கொண்டார்கள். இதில் ஒரு பெரிய சுவாரஷ்யம் என்னவென்றால் சுதீஷுக்கே ஆச்சரியம். கஸ்தூரி ராஜா அப்படிச் சொன்னதும் தேமுதிக பொருளாளர் சுதீஷ் விழித்துக் கொண்டிருந்தார். விஜயகாந்துடன் அன்று நடந்த பேச்சுவார்த்தை சுதீஷுக்கே தெரியாது என்பதால்தான் சுதிஷ் அப்படி விழித்துக் கொண்டிருந்தார்.
சுதீஷ் மட்டும் மீனாவுக்கு ஜோடியாக அந்தப்படத்தில் நடித்திருந்தால் தமிழ் சினிமாவில் ஒரு பெரிய ஹீரோவாக வலம் வந்திருப்பார்.
tcl2hw