விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுவென்று நடந்து வருகிறது. தொகுதியில் உள்ள 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 வாக்காளர்கள் வாக்களிக்க 276 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு தொடங்கிய 2 மணி நேரத்திலேயே 13 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
வெற்றி நிலவரம்:
இன்று மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைபெற்றதும், 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 16 மேஜைகளில் 20 சுற்றுகளாக வாக்குகள் எண்ணி முடிக்கப்படும். காலை 11 மணி அளவில் வெற்றி நிலவரம் தெரியக்கூடும்.
களத்தில் நிற்கும் 29 வேட்பாளர்கள்:
விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி(71) உடல்நலக்குறைவால் கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி காலமானார். இதையடுத்து காலியாக இருந்த விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜுலை 10ல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா , பாமக வேட்பாளர் சி.அன்புமணி , நாதக வேட்பாளர் அபிநயா உள்பட 56 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்தனர்.
இந்த வேட்புமனுக்கள் மீது பரிசீலைனை நடந்தது. விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலகமான விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் இந்த பரிசீலனை நடந்தது. அதில், 35 சுயேட்சை வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா , பாமக வேட்பாளர் சி.அன்புமணி , நாதக வேட்பாளர் அபிநயா மற்றும் பத்மராஜன் உள்பட 29 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.
அன்னியூர் சிவா: இதுவரை மக்களால் தேர்தெடுக்கப்படும் எந்த தேர்தலையும் சந்திக்காக அன்னியூர் சிவா, நேரடியாக சட்டமன்ற தேர்தலை, விக்கிரவாண்டி இடைத்தேர்தலை சந்திக்கிறார். 1971ல் பிறந்த அன்னியூர் சிவா, வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர். வனிதா என்ற மனைவியும், மகனும் மகளும் உள்ளனர். 1987ல் திமுகவில் இணைந்து, 1988ல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கைதாகி சிறை சென்றவர். 89ல் இளைஞர் அணி துணை அமைப்பாளராகவும், 96ல் அன்னியூர் கூட்டுறவு வங்கி தலைவராகவும், 2002ல் ஒன்றுபட்ட விழுப்புரம் மாவட்ட பொதுக்குழு உறுப்பினராகவும், 2020ல் மாநில விவசாய அணி துணை அமைப்பாளராகவும் , தற்போது விவசாய தொழிலாளர் அணி செயலாளர் பொறுப்பிலும் உள்ளார்.
சி.அன்புமணி : இளங்கலை மற்றும் தொழிலாளர் சட்டத்தில் டிப்ளமோ முடித்தவர் சி.அன்புமணி (58) . மனைவி ஜெயலட்சுமி பள்ளி தலைமை ஆசிரியர். வன்னியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவராக உள்ளார் அன்புமணி. விக்கிரவாண்டி தொகுதிக்கு நன்கு பரிச்சயமானவர். இதே தொகுதியில் முன்னர் போட்டியிட்டு வன்னியர் வாக்குகளை பெற்றவர்.
1982ல் வன்னியர் சங்க கிளை செயலாளர், 86ல் ஒன்றிய செயலாளர், 92ல் மாவட்ட தலைவர் மற்றும் பாமக மாவட்ட துணை செயலாளர், 2001ல் முண்டியம்பாக்கம் ஒன்றிய கவுன்சிலர், 2000 முதல் 2024 வரை வன்னியர் சங்க மாநில துணை தலைவர். 2016ல் விக்கிரவாண்டி சட்டமன்ற வேட்பாளர். 41 ஆயிரத்து 428 வாக்குகள் பெற்றிருந்தார்.
அபிநயா: முதுகலை ஓமியோபதி மருத்துவம் படித்தவர் அபிநயா. தடகள வீராங்கனை. தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றுள்ளார். மேடைப்பேச்சு, விவாத அறிவில் ஆர்வம் உள்ளவர். 28 வயதாகும் அபிநயாவின் சொந்த ஊர் விழுப்புரம் பில்லூர் கிராமம். கணவர் பொன்னிவளவன்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் நாதக சார்பில் தருமபுரி தொகுதியில் போட்டியிட்டு 65,381 வாக்குகள் பெற்று 4வது இடம்பிடித்தவர் அபிநயா. தர்மபுரியில் சவுமியா அன்புமணியை எதிர்த்தவர், விக்கிரவாண்டியில் சி.அன்புமணிக்கு எதிராக களமிறக்கப்பட்டுள்ளாரா அபிநயா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
தவிர, தேர்தல் மன்னன் பத்மராஜன் உள்ளிட்ட 29 பேர் களத்தில் உள்ளனர்.