நியாயமான முறையில் தேர்தல் நடைபெறாது என்ற காரணத்தைச் சொல்லி விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்திருக்கிறது அதிமுக. இதனால் அதிமுகவின் வாக்குகள் அங்கே போட்டியிடும் திமுக, பாமக, நாதக கட்சிகளில் எந்த கட்சிக்கு செல்லும் என்ற பேச்சு இருக்கிறது.
மூன்று கட்சிகளுமே அதிமுகவை வாக்குகளை தங்கள் பக்கம் இழுக்க முயன்று வருகின்றனர். இதில் பாமக பல படிகள் மேலே சென்று பாமகவின் பிரச்சார பேனர்கள், போஸ்டர்களில் மறைந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் புகைப்படத்தையே அச்சிட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர். பாப்பனப்பட்டு, பனையபுரம், கெடார், காணை உள்ளிட்ட கிராமங்களில் ஜெயலலிதா படத்துடன் பாமகவினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அதிமுகவினர் பாமகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணியும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஆனால், மக்களவை தேர்தலில் கடைசி நேரத்தில் கழற்றி விட்டதால் பாமக மீது கடும் ஆத்திரத்தில் இருக்கும் அதிமுக தலைமை, பாமகவுக்கு ஆதரவு அளிக்க கூடாது என்று நிர்வாகிகளுக்கு உத்தரவு போட்டிருக்கிறதாம்.
தவிர, ஜெயலலிதாவின் புகைப்படத்தை யார் யாரோ எல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்று சசிகலா விமர்சித்துள்ளார். ஜெயலலிதாவின் புகைப்படத்தை பயன்படுத்த கூடாது என்று அதிமுக தரப்பில் இருந்து அறிக்கைகள் வரலாம் என்கின்றனர் சிலர்.
இந்த நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அன்புமணி, ‘’தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் ஓபிஎஸ், டிடிவி தினகரன், பிரதமர் மோடி ஆகியோரின் படங்களுடன் தான் பிரச்சாரம் செய்ய முடிவெத்தோம். ஆனால், ஜெயலலிதாவின் புகைப்படத்தை நாங்கள் பயன்படுத்த கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை என்கிறார் அதிரடியாக.