விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. தொகுதியில் உள்ள 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 வாக்காளர்கள் வாக்களிக்க 276 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, பாமக வேட்பாளர் சி.அன்புமணி, நாதக வேட்பாளர் அபிநயா உள்ளிட்ட 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
12.94% வாக்குப்பதிவு:
காலை 9 மணி நிலவரப்படி 12.94 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளன.
குழவி கொட்டியதால் வாக்குப்பதிவு பாதிப்பு:
விக்கிரவாண்டி நகரப்பகுதியில் அரசுப்பள்ளியில் அமைந்துள்ள 229வது வாக்குச்சாவடியில் குழவி கொட்டியதால் வாக்காளர் ஒருவருக்கு பாடிப்பு ஏற்பட்டது. இதனால் வாக்குப்பதிவு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து வாக்குச்சாவடியில் மருந்து அடித்து தேன்கூட்டை அப்புறப்படுத்தினர். அதன் பின்னர் நிலைமை சீரானது.
கடைகள் அடைப்பு – சாலை மறியல்:
இடைத்தேர்தலை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக விக்கிரவாண்டியில் பால் விநியோகம், மருந்து கடைகளை தவிர்த்து மற்ற கடைகளை போலீசார் மூடச்சொல்லிவிட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
வாக்குப்பதிவு இயந்திரம் பழுது:
68வது வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால் 1 மணி நேரத்திற்கு மேலாக பழுது பார்க்கும் பணி நடந்தது. இதனால் பொதுமக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தனர்.
அன்னியூர் சிவா வாக்குப்பதிவு:
திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, 42வது வாக்குச்சாவடியில் இன்று காலையில் 7 மணிக்கே தனது வாக்கினை பதிவு செய்தார். வாக்களித்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘’முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்’’ என்றார்.
சி.அன்புமணி வாக்குப்பதிவு:
பாமக வேட்பாளர் சி.அன்புமணி பனையபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.