சீமானின் நாம் தமிழர் கட்சி கொடுத்த நெருக்கடியாலும்தான் ராமதாசையும் அன்புமணியையும் இந்த முடிவை எடுக்க தள்ளியிருக்கிறது. கூட்டணியில் இருக்கும் பாஜக தரப்பு என்ன முடிவெடுத்திறது என்பதையும் நினைக்க முடியாத அளவுக்கு நெருக்கடிக்கு தள்ளியிருக்கிறது. இதை உணர்ந்து, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கட்சி தலைவர்கள் ஒருமனதாக எடுத்த முடிவின் படி பாமக போட்டியிடும் என்று அண்ணாமலையே அறிவித்துவிட்டார்.
திமுக எம்.எல்.ஏ புகழேந்தி மறைவை அடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியாக அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே, இடைத்தேர்தலில் பாமக போட்டியிட வேண்டும் என்று பாமகவினர் கோரிக்கை வைத்து வருவதாக சொல்லி இருந்தார் பாமக நிறுவனர் ராமதாஸ். ஆனால், கூட்டணியின் முடிவை பொறுத்துதான் அது அமையும் என்கிற நிலை இருந்தது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாஜக நிற்பதாக முடிவெடுத்திருப்பதாக தகவல் பரவி வந்த நிலையில் கள்ளக்குறிச்சி தந்த நெருக்கடியின் காரணமாக கூட்டணியிடம் சம்மதம் பெறாமலேயே, சம்மதம் பெற்றுவிடலாம் என்கிற நினைப்பில் பாமக அதிரடி முடிவை எடுத்தது.
பாமக இந்த முடிவை எடுத்ததற்கு சில காரணங்கள் உள்ளன. விக்கிரவாண்டியில் 20%க்கும் அதிகமான வாக்குகள் பாமகவுக்கு உள்ளன. அதனால்தான் கடந்த சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட பாமகவுக்கு விக்கிரவாண்டி தொகுதியில் 41,428(23.19%) வாக்குகள் கிடைத்தன.
அதே போன்று 2009 மக்களவை தேர்தலில் பாமக பெரும் தோல்வியை சந்தித்தது. 2010ல் நடந்த பென்னாகரம் இடைத்தேர்தலில் 41,285 வாக்குகளை பெற்ற பாமக, அதிமுகவை முந்திக்கொண்டு 2ம் இடம் பிடித்தது. இந்த செல்வாக்குதான் 2011 சட்டமன்ற தேர்தலில் பாமகவுடன் திமுக கூட்டணி அமைத்தது.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் விக்கிரவாண்டியில் 32,198 வாக்குகளை பெற்றுள்ளது பாமக. ஆனால், விழுப்புரம், சிதம்பரம் , கள்ளக்குறிச்சியில் பாமகவின் வாக்குகள் அதிமுகவுக்கு சென்றிருப்பதாலும், அதிலும் கள்ளக்குறிச்சியில் நாம் தமிழர் கட்சிக்கு அடுத்து 4வது இடத்திற்கு பாமக தள்ளப்பட்டுள்ளது அக்கட்சியினரை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
நாம் தமிழர் கட்சியை விடவும் பின்னே சென்றுவிட்டதால் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது பாமகவுக்கு. இதற்கு இப்போது இருக்கும் ஒரே வழி விக்கிரவாண்டி இடைத்தேர்தல்தான். இந்த தேர்தலில் போட்டியிட்டு 50 ஆயிரம் வாக்குகளை பெற்றுவிட வேண்டும் என்று பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
தைலாபுரம் தோட்டத்தில் நடந்த அந்த ஆலோசனைக்கூட்டத்தில் ராமதாஸ், ஜி.கே.மணி, அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலரும் பங்கேற்று பேசியுள்ளனர். விக்கிரவாண்டி இடைத்தேர்தலை பொறுத்தவரைக்கும் பாஜகவின் முடிவு என்னவாக இருந்தாலும் சரி, நாம் போட்டியிட்டே ஆகவேண்டும் என்று உறுதியாக முடிவெடுத்துள்ளனர். அண்ணாமலையிடம் இது தொடர்பாக பேசி அவரை சம்மதிக்க வைத்துவிடலாம் என்றும் நம்பி இருந்தது பாமக தலைமை.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பற்றி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தோம். கூட்டணி கட்சி தலைவர்களுடன் பேசிவிட்டு பாமகவின் முடிவை அறிவிப்போம் என்று அன்புமணி ராமதாஸ் சொன்னாலும், பாமக முடிவு எடுத்து அதில் உறுதியாக இருக்கிறது என்பது அண்ணாமலையும் அறிவார் என்றார்கள் கட்சியினர்.
பாமகவின் நிலையை உணர்ந்த அண்ணாமலையும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கட்சி தலைவர்கள் ஒருமனதாக எடுத்த முடிவின் படி பாமக போட்டியிடும் என்று அறிவித்துள்ளார்.
இந்தியா கூட்டணியில் திமுகவும், தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமகவும், அதிமுகவும் களமிறங்குவதால் திகுதிகுவென்றிருக்கிறது விக்கிரவாண்டி.