சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது.
ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடந்த இக்கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எஸ்.ஐ.ஆர். பணிகளில் கட்சியினர் சரியாக செயல்படவில்லை. மாவட்டச் செயலாளர்கள் இந்த விவகாரத்தை முறையாக கையாளவில்லை என்று கடுமை காட்டிய எடப்பாடி, அதிமுகவினர் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தால் அந்த பெயர்களை மீண்டும் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.

அதிமுக – பாஜக கூட்டணி மீது கிராமப்புற மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். அதனால் அதிருப்தியில் இருக்கும் கிராம மக்களை சந்தித்து கூட்டணி குறித்து நல்லவிதமாக அவர்களிடம் கருத்தெ தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார்.

கள நிலவரத்தை ஆராய்ந்து வேட்பாளர்கள் பட்டியலை தரவேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறார். பாஜக கூடுதல் இடங்களை கேட்கிறது. அதிமுகவின் செல்வாக்கான இடங்களை கேட்கிறது. அதனால் கூட்டணி கட்சிகளுக்கு அதிமுகவுக்கு சாதகமான இடங்கள் வழங்க வாய்ப்பிருக்கிறது. அப்படி நிகழும் போது அதை ஏற்க வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார். கூட்டணி இன்னும் நிறைவு செய்யப்படவில்லை. மேலும் சில கட்சிகள் கூட்டணிக்கு வருகிறது என்பதையும் தெரிவித்திருக்கிறார்.
