கள் இறக்குமதி மற்றும் விற்பனைக்கு தமிழ்நாட்டில் தடை இருந்து வருகிறது. டாஸ்மாக்கை மட்டும் அரசே ஏற்று நடத்தலாம் ஆனால் தமிழ்தேசிய மதுபானம் கள்’ளுக்கு மட்டும் தடை ஏன் என்று பனைமரத் தொழிலாளர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
தமிழ்நாடு பனையேறும் தொழிலாளர்கள் பாதுகாப்பு இயக்கமும், தமிழ்நாடு கள் இயக்கமும் ‘கள்’ளுக்கு அனுமதி கோரி தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது.
கள்ளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் இன்று விழுப்புரத்தில் தமிழ்நாடு பனையேறும் தொழிலாளர்கள் பாதுகாப்பு இயக்கம் – தமிழ்நாடு கள் இயக்கம் இணைந்து தடையை மீறி கள் இறக்கும் போராட்டம் மற்றும் ’கள் விடுதலை மாநாடு’ நடத்தின.
’’கள்ளில் கலப்படம் உள்ளது என்று தடை போடுகிறார்களே, டாஸ்மாக் சரக்கில் கலப்படம் இல்லாமலா கொடுக்கிறார்கள்?’’ என்று தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் சீமான், இந்த மாநாட்டு மேடையிலும் அதே கேள்வியை எழுப்பினார்.
’கள்’ உணவுப்பொருள். இது மூலிகைச்சாறு என்று முழக்கம் எழுப்பி இந்த மாநாட்டில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு மேடையில் பனைமட்டையில் கள் ஊற்றி கொடுக்க, அவர் கள் குடித்து மாநாட்டிற்கு ஆதரவு தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சியின் ஆண்கள், பெண்கள் என அனைவரும் கள் ஒரு உணவுப்பொருள் என்று முழக்கமிட்டு கள் குடித்தனர்.
அப்போது ஒரு பனைமர விவசாயி, தன் கையில் இருந்த குழந்தைக்கு கள்ளினை விரலால் தொட்டுத் தொட்டு ஊட்டி விட்டார். பின்னர் பனை மட்டையில் ஊற்றி கள் குடிக்க வைத்தார்.
கள் உணவுப்பொருள், மூலிகைச்சாறு என்று சொன்னாலும் குழந்தையை குடிக்க வைத்தது கொடுமை என்று கடும் விமர்சனம் எழுந்திருக்கிறது.