வினேஷ் போகத் வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை எழுதி இருக்கிறது நூறு கிராம் எடை. விளையாட்டில் சறுக்கல் ஏற்பட்டாலும் கூட அரசியலில் சாதித்து காட்டிவிட்டார். ஹரியானா மாநிலத்தின் ஜூலானா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆகி இருக்கிறார்.
நூறு கிராம் எடை அதிகம் என்று சொல்லி ஒலிம்பிக்கின் இறுதிச்சுற்றில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத். இதனால் தங்கப்பதக்கம் பறிப்போனது.
இந்த விவகாரத்தில் பாஜக பழிவாங்கியதாக கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து இனி மல்யுத்த போட்டியில் பங்கேற்க மாட்டேன் என்று உறுதியாக அறிவித்தார். அதன் பின்னர் அவர் ராகுல்காந்தியை சந்தித்து காங்கிரசில் இணைந்தார். முன்னதாக அவர் ரயில்வே பணியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். காங்கிரஸில் இணைந்த அன்று இரவே ஹரியானா சட்டமன்ற தேர்தலில் வினேஷ் போகத் போட்டியிடுவதாக காங்கிரஸ் அறிவித்தது.
ஹரியானாவில் ஜூலானா தொகுதியில் போட்டியிட்டார். நட்சத்திர வேட்பாளரான இவருக்கு நல்ல ஆதரவு இருந்தது. பாஜக, ஜனநாயக் ஜனதா கட்சிகளுடன் வினேஷ் போகத் ஒரு மல்யுத்த வீராங்கனை என்பதால் ஆம் ஆத்மி சார்பில் மல்யுத்த வீராங்கனை கவிதா தலால் போட்டியிட்டார்.
இன்று காலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதற்கொண்டே வினேஷ் போகத் முன்னிலை வகித்து வந்தார். ஆனால் திடீரென்று பாஜக வேட்பாளர் யோகேஷ் குமார் முன்னிலை வகித்து அதிர்ச்சியை கொடுத்தார். ஆனாலும் கடைசியில் பாஜக வேட்பாளர் யோகேஷ் குமாரை வீழ்த்தி 5,909 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் வினேஷ் போகத்.
நூறு கிராம் எடை விவகாரம்தான் வினேஷ் போகத் வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை எழுதி இருக்கிறது. வினேஷ் போகத்தின் வெற்றியின் மூலமாக 19 ஆண்டுகளுக்கு ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் கட்சி வென்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.