பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா இதுவரை ஒரு வெள்ளி, நான்கு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. தங்கம் வெல்வதற்கான வாய்ப்பு இனிக் குறைவு என்பதையே போட்டி நிறைவுக் கட்டத்தை எட்டும் நிலையில் அறியமுடிகிறது.
மல்யுத்தப் போட்டியில் நிச்சயம் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட வினேஷ் போகத், இறுதிப் போட்டிக்கு முன்பாக 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டது இந்திய ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது.
நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்றவரும் 80 போட்டிகளுக்கு மேல் தோல்வியே காணாதவருமான ஜப்பாயின் யுய் சுசாகியை விசான் போகத் வென்றபோது ஒலிம்பிக் அரங்கமே அதிர்ந்து ஆர்ப்பரித்தது. அரை இறுதியில் கியூபா வீராங்கனையையும் போகத் வீழ்த்தினார். வலுவான ஆட்டக்காரர்களை வென்றதால் நிச்சயம் தங்கப்பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்ப்புடன் மறுநாள் இறுதிப் போட்டியில் பங்கேற்க இருந்த நிலையில்தான் அவரது எடை, போட்டிக்கு வரையறுக்கப்பட்ட எடையைவிட 100 கிராம் கூடுதலாக உள்ளது என்று தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ஜனாதிபதி, பிரதமர், அரசியல் தலைவர்கள், பிற விளையாட்டு வீரர்கள் எனப் பலரும் போகத்துக்கு ஆறுதல் தெரிவித்து ட்வீட் செய்தார்கள். ஆனால், உண்மையான ஆறுதல் என்பது கடந்த ஆண்டே கிடைத்திருக்க வேண்டும்.
இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவராக இருந்த அப்போதைய பா.ஜ.க. எம்.பி. பிரிஜ்பூஷன் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் கடுமையானக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து நியாயம் கேட்டுப் போராடினர். மல்யுத்த வீராங்கனைகளின் கண்ணீருடனான பேட்டியைப் பார்த்து இந்தியா அதிர்ந்தது. ஆனால், மத்திய அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காஷ்மீர் கோவிலில் சிறுமியை சீரழித்த குற்றவாளிகளை விடுவிக்கக் கோரி, கொடியேந்தி போராடியவர்கள்தான் பா.ஜ.க.வினர்.
உத்தரபிரதேசத்தில் பல பாலியல் புகார்களுக்கு உள்ளான கட்சிக்காரர்களைக் காப்பாற்றுவதே பா.ஜ.க முதல்வர் யோகியின் வேலையாக இருக்கிறது. தமிழ்நாட்டில் பாலியல் பா.ஜ.க பிரிவு என்ற அணி இல்லையே தவிர, வார் ரூம் வீடியோக்கள் இங்குள்ள நிலைமையைக் காட்டுகின்றன. குற்றவாளிகளின் கூடாரமாக இருக்கும் பா.ஜ.க. அரசிடம் மல்யுத்த வீராங்கனைகள் நியாயத்தைப் பெற முடியாத நிலையில், உச்சநீதிமன்றம் வரை சென்றுதான் முதல் தகவல் அறிக்கைப் பதிவுசெய்ய முடிந்தது. அதன்பிறகும், விசாரணையில் முன்னேற்றமோ நீதி கிடைப்பதற்கான வாய்ப்போ அமையவில்லை.
மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்தை முன்னெடுத்ததில் விசான் போகத் முக்கியமானவர் என்ற நிலையிலும், “தங்கப் பதக்கத்தை வென்று அவருக்கு (பிரிஜ் பூஷன்) பதில் சொல்வேன்” என்று போகத் சொல்லியிருந்ததாலும், 100 கிராம் எடைக் கூடுதலைக் காட்டி அவரைத் தகுதி நீக்கம் செய்ததில் அரசியல் சித்து விளையாட்டுகள் இருக்குமோ என்ற சந்தேகம் எல்லார் மனதிலும் உள்ளது. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் நிறைய நிபந்தனைகளும் நெறிமுறைகளும் உண்டு. அதன்படி, 1 கிராம் எடை கூடுதலாக இருந்தாலும் தகுதி நீக்கம் செய்யும் உரிமை விளைட்டுப் போட்டிகளை நடத்துபவர்களுக்கு உண்டு.
அதே நேரத்தில், போகத்தின் பயிற்சியாளர்கள், மருத்துவர்கள் அவருக்கு எடை பார்க்கும்போது, அதிகமாக இருந்திருந்ததைக் கவனித்து, அதனைக் குறைக்கும் முயற்சிகள் சாதகமாக இல்லாத நிலையில், அவரை இறுதிப் போட்டியிலிருந்து விலகச் செய்திருந்தால், எதிர்த்துப் போட்டியிடவிருந்த வீராங்கனைக்குத் தங்கமும், வினேஷ் போகத்துக்கு வெள்ளியும் கிடைத்திருக்கும். தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், போகத்துக்கு எந்தப் பதக்கமும் கிடைக்கவில்லை. வெள்ளிப் பதக்கம் யாருக்கும் வழங்கப்படாமல் அந்த மல்யுத்தப் போட்டி நிறைவு பெற்றுள்ளது.
கடந்த முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா இந்த முறை வெள்ளிப் பதக்கம் பெற்றார். தங்கப்பதக்கத்தை வென்றவர் பாகிஸ்தான் வீரர் நதீம். தன் மகன் வெள்ளிப் பதக்கம் பெற்றிருந்தாலும் மகிழ்ச்சிதான் என்ற சோப்ராவின் தாயார், “தங்கப் பதக்கம் வென்ற பையனும் எனக்கு குழந்தைதான். ஒவ்வொருவரும் கடுமையானப் பல பயிற்சிகளுக்குப் பிறகே போட்டிக்களத்திற்கு வருகிறார்கள். அந்தப் பையன் விரும்பிய உணவை நான் சமைத்து தருவேன்” என்று தங்கம் வென்ற பாகிஸ்தான் வீரரை தாயுள்ளத்தோடு வாழ்த்தியிருக்கிறார்.
தங்கத்தைத் தவறவிட்டாலும் வெள்ளிப் பதக்கம் பெற்று, இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த தன் மகனின் திறமையில் மகிழ்ந்து, அவரைவிட கூடுதல் திறமை காட்டிய வீரரையும் போற்றிய அந்தத் தாயுள்ளம்தான் உண்மையான தேசபக்தி-மனிதநேயம்.
அரசியலுக்காகத் தேசபக்தி வேடம் போடுகிற ஆட்சியாளர்களின் காழ்ப்புணர்சியினாலும், ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்ட விளையாட்டுக் குழுவின் போக்கினாலும், இந்தியாவுக்கு கிடைக்க வேண்டிய தங்கப்பதக்கத்தில் அரசியல் செய்து, மல்யுத்தத்தில் வெள்ளியும்கூட கிடைக்காமல் சதி செய்து, பாரீஸ் ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் பாகிஸ்தானை முன்னேற வைத்த ‘சாதனை’யை நிகழ்த்தியிருக்கிறார்கள்.