வியட்நாம் நாட்டைச் சேர்ந்த VinFast மின்வாகன உற்பத்தி நிறுவனம் தமிழ்நாட்டில் சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர்(₹16,000 கோடி) மதிப்பில் புதிய உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க தமிழ்நாடு அரசுடன் கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.
ஒப்பந்தத்தின் படி, வருகிற பிப்ரவரி 25-ம் தேதி தூத்துக்குடியில் தொழிற்சாலை கட்டுமானப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவை நடத்த VinFast நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக, The Economic Times செய்தி வெளியிட்டுள்ளது.
திட்டத்தின் முதல் கட்டமாக 500 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்யும் VinFast நிறுவனம், 400 ஏக்கர் பரப்பளவில் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டுள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளில், படிப்படியாக தொழிற்சாலை விரிவாக்கம் செய்யப்படும் என VinFast நிறுவனம் கூறியுள்ளது.
VinFast நிறுவனத்தின் இந்த ஒருங்கிணைந்த மின் வாகனங்கள் மற்றும் பேட்டரி உற்பத்தி தொழிற்சாலையில், முதற்கட்டமாக 150,000 கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாகவும், சுமார் 3,500 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் உற்பத்தி தொழிற்சாலையை அமைப்பதுடன், நாடு தழுவிய டீலர்ஷிப் வலையமைப்பையும் தொடங்க உத்தேசித்துள்ளதாக VinFast நிறுவனம் கூறியுள்ளது.
VinFast நிறுவனத்தின் பசுமைப் போக்குவரத்து மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தூத்துக்குடியில் அமைய உள்ள இந்த புதிய தொழிற்சாலை உலகளவில் அதன் மூன்றாவது பெரிய உற்பத்தித் திட்டமாகும்.
அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க்கின் TESLA, மற்றும் சீனாவின் BYD போன்ற கார் உற்பத்தி நிறுவனங்களுடன் போட்டியிடும் VinFast, உலகளவில் மின் வாகன தயாரிப்புகளில் முதன்மையான நிறுவனங்களுள் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.