அறிவியல் செய்முறைகள் முதல் கதைகள் வரை அனைத்துப் பள்ளிப் பாடங்களும் விர்ச்சுவல் ரியாலிட்டி (Virtual Reality) மற்றும் செயற்கை நுண்ணறிவு(AI) மூலம் டிஜிட்டல் மயமாக்கப்படும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
நேற்று (05/02/2024) சென்னையில் உள்ள பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தின் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் மெய்நிகர் ஒளிப்பதிவுக் கூடம் (Virtual Studio) உள்ளிட்ட 5 தொழில்நுட்பப் படப்பதிவுக் கூடங்களை திறந்து வைத்து அமைச்சர் அன்பில் மகேஷ் உரையாற்றினார்.
இந்த படப்பதிவுக் கூடங்கள் மூலம் மாணவர்களும் ஆசிரியர்களும் விர்ச்சுவல் ரியாலிட்டி(VR) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பள்ளிப் பாடங்களை வீடியோ பதிப்புகளாக உருவாக்கலாம்.
மாணவர்கள் தங்கள் பாடப் புத்தகங்களை படிப்பது மட்டுமல்லாமல், தங்களை ஈடுபடுத்திக் கொண்டு பல்வேறு நாடகங்களை/வீடியோக்களை விர்ச்சுவல் ரியாலிட்டி மூலம் உருவாக்கலாம், என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
இந்த படப்பதிவுக் கூடங்கள் மூலம் மாநிலத்தில் உள்ள 1.23 கோடி மாணவர்கள் மற்றும் 58,721 பள்ளிகள் பயன்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விர்ச்சுவல் ரியாலிட்டி ஸ்டுடியோ மூலம் மாணவர்களின் கற்றல் அனுபவங்களை அதிகரிக்க பயன்படும் என்றும் கல்வியாளர்கள் இந்த ஸ்டுடியோக்களைப் பயன்படுத்தி போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவோருக்கு பல்வேறு பாடங்களை உருவாக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் உள்ள பள்ளிப் பாடங்களை விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பம் மூலம் டிஜிட்டல் வீடியோ வடிவில் உருவாக்க, 15 ஆசிரியர்களைக் கொண்ட குழுவை தேர்வு செய்து தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைத்துள்ளது.