ஒரு தமிழர் ஒடிசாவை ஆள்வதா? என்று ஒட்டுமொத்த பாஜகவினரும் ஆடிப்போயிருக்கிறார்கள். இவர்களை ஆட்டம் காண வைத்த அந்த தமிழர் வி.கே.பாண்டியன்.
ஒடிசாவில் வாரிசு இல்லாத நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசாக உள்ளார் வி.கே.பாண்டியன். 6வது முறையாக நவீன் பட்நாயக் முதல்வராவதற்கு பாண்டியனின் உழைப்பு அதிகமாக உள்ளது. ஒடிசாவை பிடித்துவிடலாம் என்கிற பாஜகவின் கனவிற்கு முட்டுக்கட்டையாக இருக்கிறார் பாண்டியன். அதனால்தான், பாண்டியனை பார்த்து அலறுகிறது பாஜக. பிஜேடி கட்சி வெற்றி பெற்றால் பாண்டியன் முதல்வராவார் என்று பாஜகவினர் கதறும் அளவிற்கு ஒடிசாவில் ஓங்கி அடிக்கிறது ஒரு தமிழரின் அரசியல் புயல்.
ஒரு தமிழர் ஒடிசாவின் அடுத்த முதல்வர் என்று சொல்லும் அளவிற்கு உயர்ந்தது எப்படி?
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கூத்தப்பன்பட்டி கிராமத்தில் பிறந்தவர் பாண்டியன். 29.5.1974ல் பிறந்த பாண்டியன், தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நெய்வேலி விளையாட்டு விடுதியில் தங்கியிருந்து படித்தவர். மதுரை ஒத்தக்கடை வேளாண் கல்லூரி ஆராய்ச்சி நிறுவனத்தில் இளங்கலை, டெல்லி இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் முதுகலை முடித்தவர். 2000ம் ஆண்டில் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று பஞ்சாப் மாநிலத்தில் ஐஏஎஸ் ஆனார்.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சுஜாதாவை திருமணம் செய்த பின்னர் ஒடிசா மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரி ஆனார். 2002ம் ஆண்டில் ஒடிசா தரம்கர் மாவட்ட உதவி ஆட்சியராக பணிபுரிந்த பாண்டியன், விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தினார். 2004ம் ஆண்டில் இவர் ஒடிசாவின் ரூர்கேலா கூடுதல் ஆட்சியராக பதவி உயர்வு பெற்றார். 20 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வந்த ரூர்கேலா மேம்பாட்டு ஆணையத்தினை 5 மாதங்களில் மீட்டெடுத்தார் பாண்டியன். 2005ம் ஆண்டில் மயூர்பஞ்சு மாவட்டத்தின் ஆட்சியராக நியமிக்கப்பட்ட பாண்டியன் மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ் வழங்குவதற்காக ஒற்றை சாளர முறையினை கொண்டு வந்தார்.
கஞ்சம் மாவட்டத்தின் ஆட்சியராக பணிபுரிந்தபோது, தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தினை வெற்றிகரமாக செயல்படுத்தினார். இத்திட்டத்தில் 1.2 லட்சம் நபர்களுக்கு வங்கிக் கணக்குகளை தொடங்கி கொடுத்தார் பாண்டியன். இதன் மூலமாக தொழிலாளர்களின் ஊதியத்தினை நேரடியாகவே அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தினார். இது நேரடி மானிய உதவி திட்டத்திற்கு முன் உதாரணமாக அமைந்தது.
நவீன் பட்நாயக்கின் வலதுகரம் ஆனது எப்படி?
2011ம் ஆண்டில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச்செயலாளர் ஆனார் பாண்டியன். 2012ம் ஆண்டில் நவீன் பட்நாயக் இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றார். அந்த நேரத்தில் ஆளும் பிஜூ ஜனதா தளத்தின் சீனியர் பியாரிமோகன் மகாபோத்ரா ஒரு சதித்திட்டம் தீட்டினார். அதன்படி பிஜூ ஜனதா தளத்தின் ஆட்சியை அவர் கவிழ்ப்பதற்கான வேலைகளைச் செய்தார். அந்த நேரத்தில் பாண்டியன் தான் அந்த சதித்திட்டத்தை முறியடித்தார். இதனால் நவீன் பட்நாயம் மனதில் அசைக்க முடியாத இடத்தை பிடித்து அவரின் வலது கரம் ஆனார் பாண்டியன். நவீன் பட்நாயக்கிற்கு வாரிசு இல்லாததால் பாண்டியனே அவரின் அரசியல் வாரிசாக கருதப்படுகிறார்.
நவீன் பட்நாயக்கின் வலது கரம் ஆனபின்னர் பாண்டியன் கொடுத்த ஆலோசனையின் பேரில் ஒடிசாவில் பல நலத்திட்டங்கள் அமல்படுத்து வந்தன. உணவு தட்டுப்பாடு நிலவிய ஒடிசா இன்று தேசிய அளவிலான உணவு தானிய உற்பத்தியில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது என்றால் அது பாண்டியனின் முன்னெடுப்பகள்தான் காரணம். இதன் மூலம் நவீன் பட்நாயக் மனதில் மட்டுமல்ல; ஒடிசா மக்களிடமும் அசைக்க முடியாத இடம் பிடித்துள்ளார் பாண்டியன்.
இதனால் கடந்த ஆண்டு தனது ஐஏஎஸ் பணியை ராஜினாமா செய்துவிட்டு பிஜூ ஜனதா தள கட்சியிலேயே சேர்ந்து முழு நேர அரசியலில் இறங்கிவிட்டார்.
ஒடிசாவின் மண்ணின் மைந்தர் இல்லை என்றாலும் ஒடிசா மொழியில் அழகுற பேசி வருகிறார் பாண்டியன். ஒடிசாவில் இவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் கொண்டாடித் தீர்க்கிறார்கள். இவரின் செல்வாக்கை பார்த்து சொந்த கட்சியினரே அதிருப்தி அடைந்துள்ளனர். இதில் எதிர்க்கட்சியினர் பற்றி சொல்லவும் வேண்டுமா என்ன? இதனால்தான் பாஜகவினரும், காங்கிரசாரும் இவரை எதிர்த்தே பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
பூரி ஜெகன்நாதர் கோயில் கஜானாவின் சாவி பி.கே.பாண்டியனிடம் உள்ளது என்று சாடுகிறார் பிரதமர் மோடி. ஒரு தமிழர் ஒடிசாவை ஆள்வதா? திரைமறைவில் இருந்து தமிழர் ஆட்சி செய்வதை நீங்கள் விரும்புகீர்களா? ஆத்திரத்தை கொட்டித்தீர்க்கிறார் அமித்ஷா. ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி ராணியும், ஒடிசாவுக்கு ஒன்றிய அரசு கொடுக்கும் நிதியை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் கொள்ளையடிக்கிறார் என்று கதறுகிறார்.
மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்றத்திற்கு தேர்தல் நடைபெறும் ஒடிசாவில் 6வது முறையாக நவீன் பட்நாயக் முதல்வர் ஆவதற்கு ஓடி ஓடி உழைத்து வருகிறார் பாண்டியன். அதற்கு பரிசாக, ஒடிசாவின் முதல்வர் பதவியையே பாண்டியனுக்கு விட்டுத்தரப்போகிறார் நவீன் பட்நாயக் என்ற பேச்சு உள்ளது.