ஆசிரியர் தினமாக இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது செப்டம்பர் 5ஆம் நாள். தத்துவ அறிஞராகப் போற்றப்பட்ட இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் ஆசிரியர் பணியில் ஈடுபட்டவர் என்பதால் அவரது பிறந்தநாளை ஆசிரியர் தினமாக சுதந்திர இந்தியா கொண்டாடுகிறது.
இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே, இந்த மண்ணின் சாதிப்படிநிலை சமுதாயத்தில் உள்ள ஒடுக்குமுறைகளினால் கல்வி கற்க முடியாமல் போன தலைமுறையினருக்கும், பெண்களுக்கும் கல்வியை அளிப்பதற்காகப் பாடுபட்டவர்கள் பலர் உண்டு. மராட்டியத்தில் சமூக சீர்திருத்தவாதி ஜோதிபா பூலே ஒடுக்குமுறைக்குள்ளான சமுதாயத்தினரின் குரலாக ஒலித்தார். அவரது மனைவி சாவித்ரிபாய் பூலே பெண்களுக்காகவும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினருக்காகவும் கல்வி வழங்கும் அரும்பணியை மேற்கொண்டார். அதற்காக அவர் எதிர்கொண்ட நெருக்கடிகள் அதிகம்.
சுதந்திர இந்தியா பிறந்தபிறகு, முந்தைய பல நிகழ்வுகள் மறந்துபோயின. மறக்கடிக்கப்பட்டதும், மறைக்கப்பட்டதுமான நிகழ்வுகளும் உண்டு. இந்தியா சுதந்திரம் பெறுவதற்குப் பாடுபட்ட பலரின் முழுமையான வரலாறும்கூட, சுதந்திர இந்தியாவில் பிறந்த தலைமுறையினர் பலர் அறிவதில்லை. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பை வடஇந்தியா வரலாற்றுப் பார்வையுடன் திரும்பிப் பார்ப்பது அரிதாகவே உள்ளது.
வாணிபம் செய்ய வந்த வெள்ளைக்காரன் இந்த நாட்டை அடிமைப்படுத்தி ஆண்டான். அவனது ஆட்சியில், அவனுக்கு எதிராக வாணிபம் செய்யும் துணிச்சலுடன் சுதேசி கப்பல் கம்பெனியைத் தொடங்கியவர் சிதம்பரனார் என்ற தமிழர். அதனால் அவர் சிறைப்பட்டார். தண்டனைக் கைதியாக அங்கே செக்கிழுத்தார். கல் உடைத்தார். அந்தத் தியாகியின் பிறந்தநாளும் செப்டம்பர் 5ஆம்நாள்தான்.
கப்பலோட்டிய தமிழர் எனப் போற்றப்படும் வ.உ.சி தனது சிறைவாசத்துக்குப் பிறகு எத்தகைய வாழ்க்கையை வாழ்ந்தார் என்கிற வரலாறு உரக்கப் பேசப்படுவதில்லை. சிறையில் இருந்தபோது, ஆங்கிலேயர்களின் நெருக்கடியினாலும், பங்குதாரர்களின் செயல்பாடுகளினாலும் அவரது சுதேசி கப்பல் கம்பெனி நட்டமடைந்தது. செல்வந்தரான வ.உ.சி., சிறையிலிருந்து விடுதலை அடைந்தபோது வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டார்.
குடும்பத்தைக் காப்பாற்ற அரிசிக் கடை வைத்தார். மண்ணெண்ணெய் வியாபாரம் செய்தார். புத்தகங்கள் எழுதினார். இன்னும் பல தொழில்களை செய்து சொற்ப வருமானத்தில் குடும்பத்தைக் காப்பாற்றினார். வ.உசி. வழக்கறிஞர் பட்டம் பெற்றவர். பல வழக்குகளில் சிறப்பாக வாதாடியவர். ராஜதுரோக குற்றச்சாட்டால் அவரது வழக்கறிஞர் உரிமத்தை வெள்ளைக்கார அரசு பறித்துவிட்டது. விடுதலையடைந்துவிட்ட நிலையில், அந்த உரிமம் கிடைத்தால் வழக்கறிஞர் பணியை மீண்டும் தொடர்ந்து வருமானம் ஈட்ட முடியும் என நினைத்தார். உரிமத்தை மீட்டுத் தருமாறு, அன்றைய காங்கிரஸ் தலைவர்களிடம் வேண்டுகோள் வைத்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்குள் நிலவிய சாதிய மனப்போக்குத் தன்மை வ.உ.சி.க்கு உதவிட முன்வரவில்லை.
வெள்ளைக்காரர்களை துணிவுடன் எதிர்த்து ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகக் சுதேசி கப்பல் கம்பெனி நடத்திய வ.உ.சிதம்பரானாரின் வாழ்க்கை நிலையைப் பற்றி ஒரு வெள்ளைக்கார நீதிபதி தெரிந்து கொண்டு வருந்துகிறார். வ.உ.சி.யின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை உணர்கிறார். அந்த வெள்ளைக்கார நீதிபதியின் முயற்சியால், அவருக்கு வழக்கறிஞர் உரிமம் திரும்பக் கிடைக்கிறது. அதன்பின், வ.உ.சி.தம்பதியருக்கு ஒரு மகன் பிறக்கிறான். உரிமம் பெற்றுத் தந்த நீதிபதியின் பெயர் வாலேஸ். வ.உ.சி. தன் மகனுக்கு வைத்த பெயர் வாலேஸ்வரன்.
திருக்குறள், சிவஞானபோதம் போன்ற தமிழ் நூல்களுக்கு விளக்கவுரை எழுதிய இலக்கியவாதி வ.உ.சிதம்பரானார். பல நூல்களையும் எழுதியுள்ளார். தொழிற்சங்கவாதியாக செயல்பட்டவர். சுதந்திரப் போராட்ட வீரர். இந்திய விடுதலைப் போராட்டத்தில் மிகக் கடுமையான தண்டனைகளை எதிர்கொண்டவர். ஆசிரியர் தினமான செப்டம்பர் 5ஆம் நாளில் பிறந்தவரான வ.உ.சி.யின் வாழ்க்கை நமக்குப் பல பாடங்களைப் போதிக்கிறது.