தலையங்கம்: தமிழர்களை நேசித்த பிரதமர்
அவருக்கும் தமிழ்நாட்டிற்கும் எந்த தொடர்பும் இல்லை. தமிழ்நாட்டு வாக்காளர்கள் அவருக்கு நேரடியாக வாக்களிக்கும் வாய்ப்பு அமையவில்லை. ஆனால் அவரைப் போல தமிழ்நாட்டின் மீதும் தமிழ் மக்கள் மீதும் அத்தனை அன்பு காட்டி தமிழ்நாட்டின் நலன்களையும் உரிமைகளையும் காப்பதற்கு துணை நின்றவர் வேறு யாரும் இல்லை.
இந்தயாவின் பிரதமர், உத்தரபிரதேச முதலமைச்சர், மத்திய நிதியமைச்சர் என அவர் வகித்த பதவிகள் குறுகிய காலங்களே நீடித்தன. ஆனால், வரலாற்றில் அவருக்கான இடம் நிரந்தரமானது.
சமூக நீதி என எந்த அரசியல் மேடையில் பேசினாலும் அந்த சொல்லுக்குள் பொதிந்திருக்கும் அர்த்தகமாகத் திகழ்பவர் வி.பி.சிங்.
11 மாதங்களே அவர் இந்தியாவின் பிரதமராக இருந்தார். ஆனால், ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நிலவி வந்த சாதி ஒடுக்குமுறைகளிலிருந்து பிற்படுத்தப்பட்டவர்களை மீட்டெடுக்கும் வகையில் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தினார். பட்டியல் இன மக்களின் தோழனாக இருந்து, புத்த சமயத்தைத் தழுவியோருக்கும் இடஒதுக்கீட்டினை உறுதி செய்தார். சிறுபான்மை மக்களின் பாதுகாவலனாக நின்று, மதவெறி சக்திகளை எதிர்த்துப் போராடி, ஆட்சியையும் பறிகொடுத்தார். அத்தகைய மகத்தான தலைவர் வி.பி சிங்கின் நினைவு நாள் நவம்பர் 27.
இந்திய ஊடகங்களால் திட்டமிட்டு மறைக்கப்படும் தலைவர்களில் வி.பி.சிங்கிற்கு முதன்மை இடம் உண்டு. அதனால்தான் அவரது மரணச் செய்திகூட அப்போது புறக்கணிக்கப்பட்டது.
மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் (26/11) நடத்திக் கொண்டிருந்த நேரம் என்பதால் வி.பி.சிங் மரணத்தை மறைப்பதற்கு ஊடகங்களுக்கான ஒரு வாய்ப்பாகவும் அமைந்துவிட்டது. மரணத்திலும் அவரைக் கடுமையாக வசைபாடிய ஊடக செய்திகளும் உண்டு.
கோட்சேவைக் கொண்டாடும் கூட்டம் உள்ள ஒரு நாட்டில் வி பி சிங் போன்றவர்களை புறக்கணிப்பதும் விமர்சிப்பதும் ஆச்சரியமில்லை. ஜனநாயகத்தைப் படுகொலை செய்துவிட்டு, அதன் மண்டை ஓட்டின் மீது பதவி நாற்காலியைப் போட்டு உட்காரத் துடிக்கும் அரசியலை சாணக்கியத்தனம்-அற்புதம் என ஆராதிக்கும் காலத்தில், கொள்கைக்காக பதவியை உதறித்தள்ளிய நேர்மையாளரான வி.பி.சிங் அவசியமற்றவராக அவர்களுக்குத் தெரியக்கூடும். ஆனால், அந்த மாமனிதரை நன்றியுடன் நினைத்துப் பார்க்கும் மாநிலம், தமிழ்நாடு.
ஈழத்தில் தமிழர்களை அழித்தொழித்த இந்திய அமைதிப்படையைத் திரும்பப் பெறச் செய்தவர் வி.பி.சிங். காவிரியில் தமிழ்நாடு தனது உரிமைகளைப் பெறுவதற்காக நடுவர் மன்றத்தை அமைத்துக் கொடுத்தவர். தமிழ்நாட்டின் உயிர்க் கொள்கையான சமூக நீதியை இந்திய அரசியலின் தவிர்க்க முடியாத கொள்கையாக மாற்றியவர். அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று சென்னை விமான நிலையத்தை திறந்து வைத்தபோது விழா மேடையிலேயே , பன்னாட்டு முனையத்திற்கு அண்ணா பெயரையும் உள்நாட்டு முனையத்திற்கு காமராஜர் பெயரையும் சூட்டினார்.
அத்துடன் முதல்வர் கலைஞரைப் பார்த்தபடி, “இனி உங்கள் கோரிக்கைகளுக்காக நீங்கள் டெல்லிக்கு வரவேண்டியதில்லை. ஒரு போன் செய்யுங்கள். நிறைவேற்றுகிறோம்” என்று மாநில உரிமைகளை மதித்து உறுதியளித்தவர் வி.பி.சிங் என்ற மாமனிதர்.
பின்னாளில் அவருக்கு சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்ட பொழுது தமிழ்நாட்டின் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டைச் சேர்ந்த திராவிடர் கழக இளைஞர்கள் தங்கள் சிறுநீரகத்தை வழங்குவதற்கு முன் வந்தனர். அப்போது வி.பி. சிங், “வாழ வேண்டிய இளைஞர்கள் தங்கள் சிறுநீரகத்தை வழங்க வேண்டியதில்லை எனக்கு இன்னொரு பிறவி என்று ஒன்று இருந்தால் அப்போது தமிழனாகப் பிறக்க ஆசைப்படுகிறேன்” என்று சொன்னார்.
சிறுநீரக மாற்று சிகிச்சை செய்து கொள்ளாமல் டயாலிசிஸ் மூலமாகவே வாழ்ந்த பிபிசி தன் இறுதிக் காலத்திலும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிரான போராட்டத்தில் நேரடியாக களம் இறங்கியவர் ஆட்சியாளர்களின் செயல்பாடுகள் எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கெடுத்தவர். ராஜ குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் சராசரி மனிதர்களுக்கான அரசியலை நடத்தியவர் மாமனிதர் வி.பி.சிங்.