
101 வயதைக் கடந்த தலைவரை கேரளா இழந்திருக்கிறது. அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வரான வி.எஸ்.அச்சுதானந்தனின் மரணம் இந்திய அரசியலில் தியாகம் நிறைந்த காலத்தின் சுவடாகப் பதிந்துள்ளது. எளிமையான பின்னணியில் பிறந்தவர் அச்சுதானந்தன். இளம் வயதிலேயே தாயையும் அதைத் தொடர்ந்து தந்தையையும் இழக்கிறார். குடும்பத்தின் வருமானத்திற்காக தன் அண்ணனுடன் கயிறு தொழிற்சாலையில் வேலை செய்கிறார். தொழிலாளர்களின் நிலையை சொந்த அனுபவத்தில் உணர்கிறார்.
1938-40ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் விடுதலைப் போராட்டம் உச்சத்தில் இருந்த நேரம். காங்கிரஸ் கட்சியின் போராட்டம் ஒரு வழி என்றால், கம்யூனிஸ்ட்டுகளின் போராட்டம் இன்னொரு வழியில் பிரிட்டிஷாரை எதிர்த்து நடந்தது. வெள்ளைக்கார அரசாங்கம் காங்கிரஸ் தலைவர்களைக் கைது செய்தது. ஆனால், காங்கிரஸ் கட்சியைத் தடை செய்யவில்லை. அதேநேரத்தில், கம்யூனிஸ்ட் கட்சியை பிரிட்டிஷ் அரசு தடை செய்தது. கம்யூனிஸ்ட்டுகளை வேட்டையாடியது. இளைஞரான அச்சுதானந்தனுக்கு நாடு முதன்மையாக இருந்தது. நாட்டைக் காக்க பொதுவுடைமைக் கொள்கைதான் சரியானதாக இருக்கும் என அவர் மனது நம்பியது. கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பணியாற்றத் தொடங்கினார்.
ஆலப்புழா பகுதிதான் அவருடைய சொந்த மண். நீரும் நிலமும் இரண்டறக் கலந்தது. விவசாயிகள், மீனவர்கள், படகோட்டிகள் என உழைக்கும் மக்கள் அதிகம் நிறைந்த பகுதி. கம்யூனிஸ்ட்டான அச்சுதானந்தன் அந்தத் தொழிலளார்களின் உரிமைகளுக்காகப் போராடினார். கட்சி கொடுத்த பணிகளை செய்தார். இயக்கங்களைக் கட்டமைப்பதில் முதன்மையாக இருந்தார். புரட்சி மூலம் புதிய ஆட்சி என்பதுதான் கம்யூனிஸ்ட்டுகளின் அன்றைய எண்ணமாக இருந்தது. சோவியத் யூனியன் (ரஷ்யா) புரட்சி போல இந்தியாவிலும் புரட்சி வெடிக்கும் என எதிர்பார்த்தனர். இந்திய மண்ணின் தன்மை மாறுபட்டிருந்தது.
சுதந்திரத்திற்குப் பிறகு நாடாளுமன்ற ஜனநாயக அடிப்படையிலான தேர்தல் முறையில் கம்யூனிஸ்ட்டுகள் பங்கேற்றனர். இரண்டாவது பொதுத் தேர்தலான 1957ல் கேரளாவில் கம்யூனிஸ்ட்டுகளின் ஆட்சி இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் தலைமையில் அமைந்தது. உலகில் பல நாடுகளில் அப்போது கம்யூனிஸ்ட் கட்சிகள் இருந்தன. ஆனால், தேர்தல் மூலம் முதன்முதலில் ஆட்சிக்கு வந்தவர்கள் கேரள மாநில கம்யூனிஸ்ட்டுகள்தான். ஆட்சிக்கு வந்தபிறகும் போராளிகளாகத்தான் இருந்தார்கள்.
தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பண்ணையார்களுக்கும் ஜமீன்தாரர்களுக்கும், பஸ் முதலாளிகளுக்கும், பஞ்சாலை உரிமையாளர்களுக்கும் சாதகமான ஆட்சிகள் நடந்து கொண்டிருந்த அந்த காலகட்டத்தில், கேரளாவில் நிலச்சீர்திருத்தம் உள்ளிட்ட புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. தொழிலாளர்களின் உரிமைக் குரல் ஓங்கி ஒலித்தது. ரொம்பத் தொந்தரவாக இருக்கிறது என்று மத்திய அரசு கருதியது. இந்திய அரசியல் சட்டத்தின் 356வது பிரிவின்படி முதன்முதலில் கலைக்கப்பட்டது இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் தலைமையிலான கேரளாவின் கம்யூனிஸ்ட் ஆட்சிதான். கலைக்கப்பட்டாலும் கம்யூனிஸ்ட்டுகளின் இயக்க செயல்பாடுகள் குறையவில்லை.
இ.எம்.எஸ். உள்ளிட்ட சீனியர்களின் வழிகாட்டுதலில் அச்சுதானந்தன் போன்ற இளைஞர்கள் வளர்ந்தனர். 1964ல் கம்யூனிஸ்ட் கட்சி சி.பி.ஐ, சி.பி.எம் என இரண்டு பிரிவுகளானபோது, இ.எம்.எஸ். வழியில் சி.பி.எம்.மில் சேர்ந்து பணியாற்றத் தொடங்கினார் அச்சுதானந்தன். நிலச்சீர்திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர் முன்னெடுத்த போராட்டம் முக்கியமானது. பல போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றார். ஆண்டுக்கணக்கில் சிறைவாசம் அனுபவிக்க நேர்ந்தது.
பேராட்ட உணர்வுமிக்க அச்சுதானந்தன் கேரளாவில் அதிககாலம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர் என்ற பெருமைக்குரியவர். சட்டமன்றத் தேர்தலில் 10 முறை போட்டியிட்டு 7 முறை வெற்றி பெற்றவர். சட்டமன்றத்திற்குப் போக முடியாத சூழல்களில் மக்கள் மன்றத்தில் முன்னணியில் நிற்பார். எளிமை அவருடைய வலிமை.
கேரளாவில் கம்யூனிஸ்ட்டுகளின் ஆடம்பரமற்ற அரசியல் போக்கு, அந்த மாநிலத்தின் காங்கிரஸ்காரர்களையும் ரோட்டில் இறங்கி நடக்க வைத்து, ஓட்டு கேட்கச் செய்தது. 2006 சட்டமன்றத் தேர்தலில் இடது முன்னணியின் ஆட்சி அமைந்தபோது, கேரளாவின் முதலமைச்சரானார் அச்சுதானந்தன். கட்சியிலிருந்து நம்பூதிரிபாட், நாயனார் போன்றவர்கள் முதல்வர் பொறுப்பு வகித்ததைத் தொடர்ந்து, எளிய குடும்பப் பின்னணியிலிருந்து வந்த அச்சுதானந்தன் முதல்வரானது கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் முக்கியமான மாற்றமாகக் கருதப்பட்டது.
அரசியல் சூழலும் இந்தியாவில் பெருமளவில் மாறியிருந்தது. தொழிலாளர் நலன் காக்கும் கம்யூனிஸ்ட் அரசாங்கம் தொழில் முதலீடுகளையும், தொழில்நுட்பங்களையும் அதற்கேற்ற துறைமுகம், விமானநிலையம் போன்ற கட்டமைப்புகளையும் உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. முதல்வர் அச்சுதானந்தன் கேரளாவின் வளர்ச்சிக்கானக் கட்டமைப்புகளை உருவாக்குவதில் முன்னின்றார்.
அதற்காக மத்திய அரசுடன் போராடினார். சபரிமலை ஏறிய முதல் கம்யூனிஸ்ட் முதல்வர் என்ற பெயரும் அவருக்குரியது. முல்லை பெரியாறு அணை குறித்த விவகாரத்தில் அவருடைய நிலைப்பாட்டுக்கும் தமிழ்நாட்டுக்கும் முரண்பாடுகள் நிலவின.
82 வயதில் முதலமைச்சர் பொறுப்பை ஏற்ற சீனியரான அச்சுதானந்தன் தன் கொள்கையிலும் போராட்ட வாழ்விலும் சமரசமின்றித் திகழ்ந்தார். 101 வயது வரை பெருவாழ்வு வாழ்ந்து மறைந்திருக்கிறார். லால் சலாம்.