அமெரிக்க அதிபராக ஜனவரி 20ந் தேதி பதவியேற்கிறார் டொனாலட் டிரம்ப். கடந்த நவம்பர் மாதமே அதிபர் தேர்தல் நடைபெற்று, முடிவுகளும் மறுநாளே வெளியாகி, குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் வெற்றி பெற்றிருந்தாலும், அமெரிக்காவின் ஜனநாயக நடைமுறைப்படி, ஜனவரியில்தான் அவர் பதவியேற்கிறார். ஒவ்வொரு லீப் ஆண்டு (நான்காண்டுகளுக்கு ஒரு முறை) நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறும். அதில் வெற்றி பெற்றவர், அடுத்து வரும் ஜனவரியில் அதிபராக பதவியேற்பார்.
அதிபர் தேர்தலில் மக்கள் அளிக்கும் வாக்குகளின் முன்னணியின் அடிப்படையில் ஒவ்வொரு மாகாணத்தின் தேர்வாளர்கள் வாக்குகள் ஒரு கட்சிக்கே முழுமையாக கிடைக்கும். அந்த வகையில் மொத்தமுள்ள 50 மாநிலங்களின் மக்கள்தொகைக்கேற்ப அந்தந்த மாநிலங்களுக்குரிய தேர்வாளர்கள் வாக்குகளில் தனது பெரும்பான்மைக்குத் தேவையான வாக்குகளைப் பெற்று டிரம்ப் வெற்றி பெற்று அதிபரானார்.
வாக்காளர்கள் எண்ணிக்கையில் இந்தியாவுடன் ஒப்பிடும்போது மூன்றில் ஒரு பங்கு வாக்காளர்களே அமெரிக்காவில் உள்ளனர். பரப்பளவைப் பொறுத்தவரை இந்தியாவைவிட இரண்டு மடங்கிற்கு மேல் பெரியது அமெரிக்க ஐக்கிய நாடுகள். தற்போதுள்ள தொழில்நுட்பம், போக்குவரத்து இவை இல்லாத காலத்தில் 50 மாநிலங்களின் வாக்குகளும் எண்ணப்பட்டு, அதனடிப்படையில் தேர்வாளர்கள் வாக்குகள் கணக்கிடப்பட்டு, முடிவுகள் வெளிவர மாதக்கணக்கில் ஆகும். அதுமட்டுமின்றி, கடைக்கோடி மாநிலத்தைச் சேர்ந்தவர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவரும் அவரது குடும்பத்தாரும் நண்பர்களும் தலைநகரான வாஷிங்டனுக்கு வந்து சேர கூடுதல் அவகாசம் தேவை. இவை எல்லாவற்றையும் கணக்கிட்டே நவம்பரில் தேர்தல் நடந்தாலும், அடுத்து வரும் ஜனவரியில் பதவியேற்பு என்கிற நடைமுறையைக் கடைப்பிடித்தது அமெரிக்கா. அந்த நடைமுறை இப்போதும் தொடர்கிறது.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதிவிரைவு போக்குவரத்து வளர்ச்சி கொண்ட இந்த யுகத்தில், தேர்தல் முடிவுகளுக்கும் புதிய அதிபர் பதவியேற்பதற்கான காலத்திற்குமிடையே நிர்வாக மாற்றம் தொடர்பான முடிவுகள், கொள்கை வகுக்கும் செயல்பாடுகள், எந்தெந்த துறைக்கு யார் யாரை நியமிப்பது என்ற ஆலோசனைகள் இவற்றை ஆளுந்தரப்பு மேற்கொள்வது வழக்கம். ஜோ பைடன் நிர்வாகத்திடமிருந்து டிரம்ப்புக்கு இந்த நிர்வாக மாற்றம் ஏற்படும் வகையில் வெள்ளை மாளிகை அதிகாரிகள் செயல்படுவார்கள். யார் எந்தப் பொறுப்பை நிர்வகிப்பதில் சரியாக இருப்பார்கள் என்பதை ஆளுங்கட்சியான குடியரசு கட்சி முடிவு செய்யும். இவையெல்லாம் ஜனவரி இரண்டாம் வாரத்திற்குள் முழுமையடைந்து, ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்காவின் அதிபராக டிரம்ப் பதவியேற்பார்.
டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாகப் பதவியேற்கும் விழாவுக்கான அழைப்பினை முதல்கட்டத்தில் சீன அதிபர் ஸி ஜின்பிங்கிற்கும், எல்சால்வடார் நாட்டின் அதிபருக்கும், இத்தாலி நாட்டின் பிரதமர், அர்ஜென்டினா அதிபர் ஆகியோருக்கு விடுத்திருக்கிறார். இரண்டாவது கட்ட அழைப்பில் இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட மேலும் சில நாடுகளின் ஆட்சியாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் இரண்டாவது வாரத்திலேயே இந்த அழைப்புகள் முடிவு செய்யப்பட்டு உரிய முறையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் ஜனவரி 3ஆம் நாள் வரை ரஷ்யா, உக்ரைன், இந்தியா ஆகிய நாடுகள் இடம்பெறவில்லை.
ரஷ்யாவும் உக்ரைனும் போரில் ஈடுபட்டு வரும் நிலையில், ரஷ்யாவைப் பல கோணங்களிலும் புறக்கணித்து வருகிறது அமெரிக்கா. அத்துடன், பதவியேற்பு விழாவில் உக்ரைனுக்கும் அழைப்பில்லை. ஆனால், இந்தியா அதுவும் நரேந்திர மோடி பிரதமராக உள்ள இந்தியாவுக்கு ஏன் அழைப்பில்லை என்பது டிரில்லியன் டாலர் கேள்வியாக மாறியது. மோடி ஒரு வார்த்தை சொன்னால் அமெரிக்காவின் டிரம்ப்பும் ரஷ்யாவின் புதினும் ஆடுவார்கள் என்கிற அளவில் இங்குள்ள பா.ஜ.க.வினர் பில்டப் கொடுத்து வரும் நிலையில், இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் டிசம்பர் இறுதியில் வாஷிங்டன் சென்றது, எப்படியாவது அழைப்பிதழைக் கேட்டுப் பெற்றுவிடத்தானா என்று சமூக வலைத்தளங்களில் கிண்டல் நிறைந்த தொனி வெளிப்பட்டது. சுப்பிரமணிய சாமி இதனைத் தொடங்கி வைக்க, அதே பாணியில் பலரும் கிண்டலடித்தனர்.
அண்ணாமலை போல ஜெய்சங்கர் வெள்ளை மாளிகை முன்பு சட்டையில்லாமல் சவுக்கால் அடித்துக்கொண்டு அழைப்பிதழ் கேட்பாரா என்கிற அளவிற்கு கிண்டலும் கேள்வியும் பரவியது. உண்மையில், இது மோடிக்கும் அவர் அரசுக்குமான அவமானமல்ல, அழைப்பிதழைக் கூட கேட்டு வாங்கும் இடத்தில் இந்தியாவை நிறுத்தியிருக்கிறாரா மோடி என்கிற அளவிலான தேசத்தின் அவமானம்.