மக்களவையில் இன்று கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்தது ஒன்றிய பா.ஜ.க. அரசு. அப்போது எதிர்க்கட்சிகள் வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்புகள் தெரிவித்து தங்களது வாதத்தை முன்வைத்துள்ளன.
‘’வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா, இஸ்லாமியர்கள் – சிறுபான்மையினருக்கு மட்டுமல்லாது மனித இனத்திற்கே எதிரானது’’ என்கிறார் கனிமொழி எம்.பி. அவர் மேலும், ‘’இந்த சட்ட திருத்தம் மூலம் இந்தியா மதச்சார்பற்ற நாடு என்கிற நம்பிக்கையை மக்கள் இழந்துவிடுவார்கள்’’ என்கிறார்.
‘’ஒரு மதத்தின் உரிமையில் மற்றொரு மதத்தினர் எதற்காக தலையிட வேண்டும்?’’ என்ற கேள்வியை எழுப்பி இருக்கும் கனிமொழி, ’’அரசு சொத்துக்கள் வக்பு வாரியத்திடம் இருந்தால் மாவட்ட ஆட்சியர்கள் இதுகுறித்து முடிவெடுக்கலாம் என்பது ஏற்கத்தக்கது அல்ல’’ என்றார் அழுத்தமாக.
’’அயோத்தி கோயில் வாரியத்தில் இந்து அல்லாதோரை சேர்க்க முடியுமா?’’ என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார் காங்கிரஸ் எம்.பி. கே.சி.வேணுகோபால். அவர் மேலும், ‘’வக்பு வாரிய சட்ட திருத்தம் என்பது அரசியல் அமைப்பின் அடிப்படை கோட்பாடுகள் மீதான தாக்குதல்’’ என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
’’மக்களிடம் நிலவுகின்ற நல்லிணக்கத்தை பாதிக்கின்ற வகையில் உள்நோக்கத்துடன் வக்பு வாரிய திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த திருத்த மசோதா, நாட்டின் ஒற்றுமையினை சீர்குலைக்கும் என்பதால்தான் ஆரம்பத்தில் இருந்தே இதை நான் கடுமையாக எதிர்த்து வருகிறேன்’’ என்றார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் தொகுதி எம்.பியுமான திருமாவளவன்.
அவர் மேலும், இந்தியர் எனும் உணர்வுடன் வாழும் இஸ்லாமியர்களை அந்நியர்கள் போன்று மாற்றுகின்ற முயற்சி வேதனை அளிக்கிறது’’ என்கிறார்.
இது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது. அதனால் இது அரசியல் சட்ட அடிப்படையில் செல்லாது என்பது தெளிவாகத் தெரியும். தெரிந்தே வக்பு திருத்த மசோதாவை தாக்கல் செய்கிறார்கள். இஸ்லாமியர்களை குறிவைத்து தாக்கும் போக்குதான் இது’’ என்று ஆவேசப்பட்டுள்ளார் சிபிஐ திருப்பூர் எம்.பி. சுப்பராயன்.