
அப்போது அதிமுக அமைச்சராக இருந்த கே.டி.ராஜேந்திரபாலாஜி, திமுக அரசை கடுமையாக விமர்சித்தார்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் இவர் மீதிருந்த ஊழல் வழக்கில் கைது செய்ய சென்றபோது தலைமறைவானார். கடைசியில் போலீசார் இவரது காரை துரத்திச்சென்று மடக்கிப்பிடித்தனர்.
தன் மீதான குற்றச்சாட்டுகளின் வழக்குகளை சந்தித்து வரும் ராஜேந்திர பாலாஜி, அண்மைக்காலமாக அதிமுகவுக்கு ஆதரவாக அதிரடியாக பேசி சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறார்.
தேமுதிகவில் விருதுநகர் தொகுதியில் நின்று வென்ற மாஃபா பாண்டியராஜன், அதிமுகவில் ஆவடி தொகுதியில் நின்று அமைச்சர் ஆனார். அவர் அடுத்து மீண்டும் விருதுநகர் தொகுதியில் போட்டியிடப் போவதாக ஒரு பேச்சு இருக்கிறது.

மாஃபாவை சிவகாசி தொகுதியில் போட்டியிட வைத்து, ராஜேந்திரபாலாஜியை விருதுநகர் தொகுதியில் போட்டியிட வைக்க தலைமை முடிவெடுத்திருப்பதாக ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் இரு தரப்புக்கும் இடையே அடிக்கை வார்த்தைப் போர் வெடித்து வருகிறது.
இந்நிலையில் பழனிசாமியின் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரச்சாரம் பயணம் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற இருப்பதை முன்னிட்டு அம்மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார் ராஜேந்திராபாலாஜி.
அப்போது, தனக்கு சிவகாசி தொகுதிதான் வேண்டும் என்று அழுது அடம்பிடித்தார். ‘’சில பேர் சொல்வார்கள், அங்கே நிற்பார் இங்கே நிற்பார் என்று. சிவகாசி என் மண். நான் சிவகாசியில்தான் நிற்பேன். இந்த மண் தான் என்னை சட்டமன்ற உறுப்பினராக்கியது, அமைச்சராக்கியது. எனக்கு அத்தனையும் கொடுத்தது சிவகாசி தொகுதிதான். இங்கே யாரை நிறுத்தினாலும் நான் நின்று உங்கள் ஆதரவுடன் வெற்றி பெறுவேன். எனது மனக்குமுறலை சொல்லக்கூடிய பாக்கியத்தை கொடுத்த உங்கள் அத்தனை பேருக்கும் நெஞ்சார்ந்த நன்றி’’ என்றார் ராஜேதிராபாலாஜி.

ஊழல் வழக்கில் கைதாகி சிறைக்கு சென்றபோது, அதிமுகவை காட்டிக்கொடுக்கச் சொல்லி அதிகாரிகள் மிரட்டியதாகவும், செத்தாலும் சாவேனே தவிர அதிமுகவை காட்டிக் கொடுக்க மாட்டேன் என்று உறுதியாக நின்றதாகவும், அதனால் சிறையில் தன்னை தனிமைச்சிறையில் அடைத்து வைத்து வதைத்ததாகவும், தனக்கு ஒரு ஊறுகாய் கூட கொடுக்க விடாமல் வதைத்தார்கள் என்றும் சொல்லி கண்ணீர் வடித்தார்.