வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 108ஐ கடந்தது. கேரளாவில் இதுவரை இல்லாத அளவுக்கு பெருந்துயரத்தை தந்திருக்கிறது இந்தப்பேரழிவு.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் திடீரென்று பெய்த அதிக கனமழையினால் சூரல்மலா, மேப்பாடி, முண்டக்கை , அட்டமலை பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவினால் ஆற்றின் கரையோரம் இருந்த குடியிருப்புகள் அடித்துச் செல்லப்பட்டன. பள்ளிக்கட்டிடங்கள் மண்ணுக்குள் புதைந்தன. மக்கள் மண்ணுக்குள் புதைந்தனர்.
கேரளாவை உலுக்கி எடுத்த இந்த நிலச்சரிவில் மண்ணில் புதைந்து உயிரிழப்புகள் நேர்ந்துள்ளன. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 108ஐ கடந்தது. 128 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து கேரளா முழுவதும் சுற்றுலாத்தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. வயநாடு உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.
இது குறித்து கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், ‘’கேரளாவில் இதுவரையிலும் இல்லாத வகையில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. 48 மணி நேரத்தில் 572 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. திடீரென்று பெய்த கனமழையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் சூழ்நிலையை உணர்ந்து பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டியது அவசியம்.
மண்ணில் புதைந்த உடல்களை கண்டறிய காவல்துறை மோப்ப நாய்களை பயன்படுத்தி வருகின்றன. 30 பேர் கொண்ட தேசிய பேரிட மீட்புப்படையினர் இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விரைந்துள்ளார்கள். காயமடைந்தவர்களை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் செய்யப்பட்டுள்ளன. நிலச்சரிவில் இருந்து காயங்களுடன் மீட்கப்பட்டவர்களுக்கு சிறப்பான சிகிச்சை தரப்படுகிறது. கோழிக்கோடு, கண்ணூர், திருச்சூர் பகுதிகளில் இருந்து சிறப்பு மருத்துவக் குழுக்கள் சென்றிருக்கின்றன.
வயநாடு மற்றும் கோழிக்கோடு பகுதிகளில் இருந்து தடயவியல் நிபுணர்கள் சென்றிருக்கிறார்கள். அனைத்து சக்திகளையும் ஒன்று திரட்டி மீட்பு பணியை மேற்கொண்டிருக்கிறோம். முப்படைகளும் இணைந்து மீட்பு பணிகளை செய்து வருகின்றன’’ என்கிறார்.
அதே நேரம், ’’பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் சூழ்நிலையினை உணர்ந்து பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டியது அவசியம். அரசின் மீட்பு நடவடிக்கைகள் முழுமை அடைய பாதிக்கப்பட்ட மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’ என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.