புதுப்புது வைரஸ்கள் வந்து அடிக்கடி கேரளாவை ஆட்டிப்படைக்கிறது. தற்போது, வட அமெரிக்கா நாடுகளில் பரவி வரும் வெஸ்ட் நைல் காய்ச்சல் கேரளாவிலும் பரவி வருகிறது. வேகமாகப் பரவி வரும் வெஸ்ட் நைல் காய்ச்சலால் 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
கேரள மாநிலத்தின் மலப்புரம் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில் வெஸ்ட் நைல் காய்ச்சலால் 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கை,கால் வலி, தலைவலி, மயக்கம், காய்ச்சல், வலிப்பு ஆகிய அறிகுறிகளுடன் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அறிகுறிகள் மூளைக்காய்ச்சலுக்கானவை என்பதால் மருத்துவர்கள் அதற்குரிய சிகிச்சைகள் அளித்து வந்துள்ளனர். இந்த சிகிச்சையில் நோய் குணமாகாததால் இரத்த மாதிரி பரிசோதனை செய்து பார்த்தபோதுதான் அவர்களுக்கு ‘வெஸ்ட் நைல்’ காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பூனாவில் நடந்த பரிசோதனையில் இந்த முடிவுகள் வெளிவந்துள்ளன. இந்த காய்ச்சல் க்யூலெக்ஸ் என்கிற கொசுவின் மூலம் பரவுகிறது என்பதும் தெரியவந்துள்ளது.
இந்த நோய், மனிதனில் இருந்து மனிதனுக்கு நேரடியாக பரவுவதில்லையாம். வெஸ்ட் நைல் நோய் பாதித்த விலங்குகள், பறவைகளை கடித்த கொசுக்கள் மனிதனை கடிக்கும்போது இந்த நோய் பரவுகிறதாம்.
வெஸ்ட் நைல் பாதித்த 10 பேர் கோழிக்கோடு, மலப்புரம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதில் ஒருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த நிலையில், கேரளாவில் தனியார் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின்னர் தொடர் சிகிச்சையில் இருந்து வந்த இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களுக்கு வெஸ்ட் நைல் பாதிப்பு இருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, இந்த நோய் தாக்குதலினால்தான் அவர்கள் உயிரிழந்தார்களா? என்பது குறித்து பரிசோதனைகள் நடந்து வருகின்றன.
கொசுக்கள் மூலம் மனிதர்களுக்கு இந்த வைரஸ் காய்ச்சல் வட அமெரிக்க நாடுகளில் அதிகம் பரவுகின்றன. குழந்தைகள் முதல் முதியவர்கள் என அனைவரும் இந்த காய்ச்சல் தாக்கி வருகின்றன.
உகாண்டாவில் 1937ஆம் ஆண்டில் இத வெஸ்ட் நைல் வைரஸ் கண்டறியப்பட்டது. கேரளாவில் கடந்த 2011ஆம் ஆண்டில் இந்த வைரஸ் காய்ச்சல் கண்டறியப்பட்டது. 2019ஆம் ஆண்டிலும் இந்த வைரஸ் ஒரு சிறுவனுக்கு இருப்பது கண்டறியப்பட்டதும், அந்த சிறுவன் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2022ஆம் ஆண்டில் கேரளாவில் இந்த வைரஸ் பாதித்த 47 வயது உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வட அமெரிக்காவில் பரவி வரும் இந்த காய்ச்சல் கேரளாவிலும் பரவி வருகிறது. வேகமாகப்பரவும் இந்த காய்ச்சலால் கேரள மக்கள் அச்சத்தில் உள்ளனர்.