
மீண்டும் செங்கோட்டையன் – பழனிசாமி இடையே மோதல் வெடித்திருக்கிறது.
கோபி செட்டிபாளையத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ’’வரும் 5ம் தேதி கோபி செட்டிப்பாளையத்தில் நடைபெறும் கூட்டத்தில் மனம் திறந்து பேசுவேன். அனைத்து தகவல்களை அந்த நேரத்தில் சொல்வேன். அப்போது முடிவை அறிவிப்பேன். அதுவரை பொறுமையாக இருங்கள்’’ என்று தெரிவித்திருக்கிறார்.
கடந்த பிப்ரவரி மாதத்தில் பழனிசாமி மீது கடும் அதிருப்தியில் இருந்து வந்த செங்கோட்டையன், அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி வந்தார்.
பன்னீர்செல்வத்திடம் இருந்து பிடுங்கிய முதல்வர் நாற்காலியை யாருக்கு கொடுப்பது? என்று நடந்த கூவத்தூர் ஆலோசனையில் செங்கோட்டையன் பெயரே பட்டியலில் முதலில் இருந்திருக்கிறது. அந்த நேரத்தில் அவர்கள் கேட்ட கப்பத்தை கட்ட வழி இல்லை என்று செங்கோட்டையன் சொன்னதால், அந்த நேரத்தில் அவர்கள் கேட்ட கப்பத்தை கட்டிவிட்டு முதல்வர் நாற்காலியை வாங்கிக்கொண்டார் எடப்பாடி பழனிசாமி என்று பலரும் சொல்லி வந்த நிலையில், ‘’செங்கோட்டையன் அப்போது அமைச்சராக இல்லை. அவர் அமைச்சராக இருந்திருந்தால் அவருக்குத்தான் முதல்வர் பதவியை கொடுத்திருப்போம்’’ என்று புதுக்கதை சொன்னார் அமமுக டிடிவி தினகரன்.

தனக்கு கிடைக்க வேண்டிய நாற்காலியில் உட்கார்ந்திருப்பதோடு அல்லாமல் தனக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை என்று பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்து வந்திருக்கிறார் செங்கோட்டையன்.
அதிமுக தொடர் தோல்வியை சந்தித்து வருவதால் தொண்டர்கள் அதிருப்தியில் இருந்து வரும் நிலை அறிந்து, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட 6 பேர் சேலத்தில் எடப்பாடி பழனிசாமியை கடந்த ஆண்டு சந்தித்து அதிமுகவுக்கு வெளியே இருக்கும் சசிகலா, ஓபிஎஸ், தினகரன் ஆகியோரை இணைக்க வேண்டும். அப்போதுதான் கட்சி வலுப்படும் என்று சொல்ல, இதை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்ளவே இல்லை.
அது மட்டுமில்லாமல் அன்றிலிருந்து அந்த 6 பேருக்கும் கட்சியில் முக்கியத்துவம் குறையும்படியும், தனது ஆதரவாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கும்படியும் செய்து வந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
இந்த நிலையில், கோவையில் எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழா மேடையில் எடப்பாடி பழனிசாமி படம் மட்டும் தான் உள்ளது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் இல்லையே என்ற குற்றச்சாட்டை சொல்லி புறக்கணித்தார் செங்கோட்டையன்.
அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை கொண்டு வர கடந்த 2011ஆம் ஆண்டில் ரூ.3.72 கோடி நிதியளித்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியில் இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வந்தது.
இதற்காக அதிக்கடவு – அவிநாசி திட்ட கூட்டமைப்பு, பொதுமக்கள், விவசாயிகள் இணைந்து எடப்பாடி பழனிசாமிக்கு கடந்த பிப்ரவரி மாதத்தில் கோவை மாவட்டத்தில் அன்னூர் அடுத்த கஞ்சப்பள்ளியில் பாராட்டு விழா எடுத்தனர்.

எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த இந்த பாராட்டு விழாவை அதிமுகவின் மூத்த தலைவர் செங்கோட்டையன் புறக்கணித்தது அக்கட்சிக்குள் பெரும் புயலை எழுப்பியது.
விழா நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு விழா ஏற்பாட்டாளர்கள் தன்னை சந்தித்ததாகவும், அப்போது எங்களை உருவாக்கிய எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் மேடையில் இல்லை. இந்த திட்டம் வர காரணமானவர் ஜெயலலிதா. அதிமுகவின் நிறுவனர் எம்.ஜி.ஆர். அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு நிறைய பாடுபட்டிருக்கிறார் தனபால். இவர்களை தவிர்த்து எடப்பாடி பழனிசாமியை மட்டும் முன்னிலைப் படுத்தியதால் விழாவை புறக்கணித்து, தன் உணர்வை வெளிப்படுத்தியதாகச் சொன்னார் செங்கோட்டையன்.
செங்கோட்டையனின் இந்த குற்றச்சாட்டுக்கு, ‘’இது கட்சி விழா அல்ல. பொது விழா. அதனால்தான் மற்றவர்களின் படங்கள் வைக்கப்பட வில்லை’ என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மழுப்பலான பதிலைச் சொல்ல, வைகைச்செல்வனோ, ‘’எடப்பாடிக்கு எதிராக திரும்ப வேண்டும் என்று வைத்திருந்த ரொம்ப நாள் திட்டத்தை இப்போது இதை காரணமாகச் சொல்லி எதிர்த்திருக்கிறார்’’ என்றார்.
ஆனால், எம்.ஜி.ஆர். மாளிகை வட்டாரமோ தான் இருக்க வேண்டிய இடத்தில் இருந்துகொண்டு தன்னையே ஓரங்கட்டுவதை யார்தான் பொறுத்துக்கொள்வார்? அந்த கோபம்தான் செங்கோட்டையனுக்கு வந்தது.
அதுமட்டுமில்லாமல், அந்த பாராட்டுவிழாவில் பாஜக விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜும் பங்கேற்றிருந்தார். அவருடன் இபிஎஸ் கைகோர்த்து சிரித்து நின்றதை கட்சியினர் யாரும் ரசிக்கவில்லை. பாஜகவுடன் அதிமுக மீண்டும் கூட்டணி அமைக்கப்போகிறது என்ற விமர்சனம் இருந்து வரும் நிலையில், இபிஎஸ்சின் இந்த செயல் செங்கோட்டையனை மேலும் கோபப்படுத்தி இருக்கிறது. ஜி.கே.நாகராஜ் அந்த பாராட்டு விழாவில் பங்கேற்கப்போவது முன்கூட்டியே செங்கோட்டையனுக்கு தெரிந்தது. அந்த விழாவை செங்கோட்டையன் புறக்கணிக்க இதுதான் முக்கியக்காரணம் என்றது.
அந்த சமயத்தில் தனது ஆதரவாளர்களுடன் அடிக்கடி ஆலோசனைக் கூட்டத்தை நடத்தை பரபரப்பை ஏற்படுத்தி வந்தார் செங்கோட்டையன். டெல்லி சென்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்து பேசி வந்தார். இதனால் பழனிசாமியை நீக்கிவிட்டு செங்கோட்டையனை அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆக்க பாஜக காய் நகர்த்தி வருகிறது என்ற பேச்சு எழுந்தது.
அந்த நேரத்தில் பாஜகவுடன் பழனிசாமிக்கு சுமூகமான உறவு இல்லாமல் இருந்தது. இந்த சமயத்தில்தான் டெல்லி சென்று பாஜக தலைமையை சந்தித்து கூட்டணியை உறுதிப்படுத்திவிட்டார் பழனிசாமி. இதனால் அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆகிறார் செங்கோட்டையன் என்ற பேச்சு நின்றது.
அதன்பின்னர் செங்கோட்டையனும் பழனிசாமிக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருந்து வந்தார்.
சில தினங்களுக்கு முன்பு கோபி செட்டிப்பாளையம் வழியாகச் சென்ற பழனிசாமியை செங்கோட்டையன் சந்திக்கவில்லை. இதனால் பழனிசாமி மீதான அதிருப்தி இன்னும் குறையவில்லை என்று தெரிந்தது.

இந்நிலையில் மீண்டும் அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறார் செங்கோட்டையன். வரும் 5ம் தேதி முடிவை அறிவிக்கப்போவதாக சொல்லி இருக்கிறார்.
கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் முகமாக இருக்கும் கட்சியின் மூத்த நிர்வாகி செங்கோட்டையனின் முடிவால் கட்சியில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
பாஜகவுடன் பழனிசாமி கைகோர்த்ததால் அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து அவரை நீக்குவதற்காக பாஜக எந்த காயையும் நகர்த்தப்போவதில்லை என்று தெரிகிறது. இதனால் அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் விலகப்போகிறாரா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
ஆனால் அதிமுகவின் முன்னாள் நிர்வாகி பெங்களூரு புகழேந்தியோ, ‘’தனக்கான அதிகாரத்தை பெறுவதற்காக அரசியல் நாடகம் ஆடுகிறார் செங்கோட்டையன். வரும் 5ம் தேதி ஒன்றும் நடக்காது. சும்மா பரபரப்பை ஏற்படுத்துகிறார்’’ என்கிறார்.