
நாடாளுமன்றத்தில் மக்களவை, மாநிலங்களவை என்ற இரு அவைகளில், மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்களைக் கொண்ட மக்களவையை (லோக்சபா) லோயர் ஹவுஸ் என்றும், அந்தந்த மாநில சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களைக் கொண்ட மாநிலங்களவையை (ராஜ்யசபா) அப்பர் ஹவுஸ் என்றும் குறிப்பிடுவது வழக்கம். அறிவார்ந்த உறுப்பினர்கள் நிறைந்த அவை என்ற முறையில் அதற்கு அந்தப் பெயர் உண்டு. மாநிலங்களவை உறுப்பினர்கள் முழுமையான பதவிக்காலம் 6 ஆண்டுகளாகும்.
தமிழ்நாட்டிற்கு மாநிலங்களவையில் 18 இடங்கள் உண்டு. குறிப்பிட்ட இரண்டாண்டு கால இடைவெளிகளில் 6+6+6 என் முறையில் உறுப்பினர்கள் தேர்வு செய்ப்பட்டு மாநிலங்களவைக்கு அனுப்பப்படுவார்கள். மாநிலங்களவை உறுப்பினர் ஒருவர் பதவி விலக நேரிட்டாலோ, இறந்துபோனாலோ அவரது மிச்ச பதவிக்காலத்திற்கு மாற்று எம்.பி. தேர்வு செய்யப்படுவார். தமிழ்நாட்டைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பிக்களில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, தி.மு.க.வின் சண்முகம், வில்சன், எம்.எம்.அப்துல்லா, அ.தி.மு.க.வின் சந்திரசேகர், பா.ம.க.வின் அன்புமணி ஆகிய 6 உறுப்பினரிகளின் பதவிக்காலம் ஜூலை 24ந் தேதியுடன் நிறைவடைந்தது. இவர்களில் வில்சன் மீண்டும் மாநிலங்களவை எம்.பியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார்.
வைகோவுக்கு பதில் கமல்ஹாசனுக்கு தி.மு.க. ஆதரவளித்து தேர்வு செய்திருக்கிறது. எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோர் தி.மு.க. சார்பில் புதிதாக மாநிலங்களவைக்கு செல்கிறார்கள். அ.தி.மு.க ஆதரவில் எம்.பியான அன்புமணிக்கு பதில் அ.தி.மு.கவே தன் கட்சியின் தனபால், இன்பதுரை ஆகியோரை தேர்வு செய்துள்ளது. இவர்கள் இனி பொறுப்பேற்பார்கள். அதற்கு முன்பாக, பதவிக்காலம் நிறைவடைந்தவர்களுக்கு மாநிலங்களவையில் வழியனுப்பும் விழா நடைபெற்றது.
ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ ஏறத்தாழ 47 ஆண்டுகளுக்கு முன் முதன்முதலாக மாநிலங்களவைக்குள் நுழைந்தவர். தன்னைத் தொடர்ந்து மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராக்கிய தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதியையும், நாடாளுமன்றத்தில் பயிற்றுவித்த முரசொலி மாறனையும் மறக்காமல் நினைவுகூர்ந்த வைகோ, இந்திய நாடாளுமன்றத்தில் இலங்கைத் தமிழர் உரிமைகளுக்காகப் பல முறை தீர்மானங்களைக் கொண்டு வந்ததைப் பெருமையுடன் குறிப்பிட்டு, தனித் தமிழீழக் கோரிக்கையை எப்போதும் ஆதரிப்பேன் என்பதையும் பதிவு செய்து, அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்தார்.
81 வயது நிறைந்த மூத்த உறுப்பினரான வைகோவின் நன்றியுரை இப்படி அமைந்த நிலையில், வயதில் இளைய உறுப்பினரான எம்.எம்.அப்துல்லா, தனது நன்றியுரையிலும் திண்டிவனம்-பழனி இடையிலான கணக்கம்பட்டியில் மகான் பழனிசுவாமிகள் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்காக ஒரு ரயில் நிலையம் அமைக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மதநல்லிணக்கத்தை வெளிப்படுத்தியதுடன், நாடாளுமன்றப் பதவிக்காலம் நிறைவடைந்தாலும், சமூக நீதிப் பயணம் தொடரும் என்கிற உறுதியை அளித்து விடைபெற்றார்.
பதவி நிறைவடைந்தவர்களை தி.மு.க. சார்பில் மாநிலங்களவைக் குழுத் தலைவர் திருச்சி சிவா எம்.பி.யும், அ.தி.மு.க. சார்பில் தம்பிதுரை எம்.பி.யும் வாழ்த்தினர். அவரவர் கட்சிக்கொள்கைகளின்படி இதுநாள்வரை காரசாரமாக விவாதித்திருந்தாலும், விடைதரும் நாளில் அந்த மாச்சரியங்களை மறந்து, ஜனநாயகத்தின் வலிமைகாக்கும் நாடாளுமன்ற மேலவைக்குரிய கண்ணியத்துடன் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டு எம்.பி.க்களின் பதவி நிறைவினையொட்டி, கேரள மாநிலத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும் முன்னாள் பத்திரிகையாளருமான பிரிட்டாஸ் வாழ்த்திப் பேசும்போது, ஒவ்வொருவர் பணியையும் சிறப்பாக அலசினார். மூத்த உறுப்பினரான தி.மு.க.வின் சண்முகம் தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர் என்பதால் உழைப்பாளர் வர்க்கத்திலிருந்து வந்திருக்கும் தன்னுடைய கட்சியின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், அவரது பணியின் சிறப்புகளை எடுத்துரைத்தார். இளைய எம்.பி. அப்துல்லா ஒவ்வொரு நாளும் அவை கூடுவதற்கு முன்பாகவே வந்து, மாலையில் எத்தனை மணிக்கு அவை நடவடிக்கைகள் நிறைவடைகிறதோ அதுவரை பொறுப்பாக இருந்து செயல்பட்டதைக் குறிப்பிட்டார். வைகோவின் தீரமிக்க நாடாளுமன்ற நடவடிக்கைகள் தனக்கு எப்படி வழிகாட்டின என்பதையும், பதவி நிறைவு பெறுவதற்கு முதல்நாள்கூட, தமிழ்நாட்டு மீனவர்களின் நலனுக்காக வைகோ முழங்கியதையும் சுட்டிக்காட்டி, இவர்தான் உண்மையான புலி எனப் பாராட்டினார் பிரிட்டோ.
நாடாளுமன்ற மக்களவைக்கு 40 பேர் போய் என்ன செய்யப் போகிறார்கள்? கேன்டீனில் வடை தின்பார்களா? டீ குடிப்பார்களா? என்று நெட்டிசன்கள் கிண்டலடித்தாலும், மக்களவையிலும் மாநிலங்களவையிலும் சிட்டிசன்களுக்காகக் குரல் கொடுப்பவர்கள் எம்.பி.க்கள்தான்.
வெவ்வேறு கட்சியாக இருந்தாலும் தமிழ்நாட்டின் உரிமை என்று வந்துவிட்டால், விட்டுக்கொடுககாமல் செயல்படும் நமது எம்.பி.க்களின் பணியை பிற மாநிலத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பாராட்டியபோதுதான், என்ன செய்தார்கள் எம்.பி.க்கள் என்பதை எடை போட்டுப் பார்க்க முடிந்தது.