
மதிமுகவின் துணை பொதுச்செயலாளர் மல்லை இயக்கத்திற்கு எதிராக செயல்படுவதாக கடுமையாக விமர்சித்திருந்தார் வைகோ. பிரபாகரனுக்கு துரோகம் செய்த மாத்தையாவை மல்லை சத்யாவுடன் ஒப்பிட்டுப்பேசி இருந்தார் வைகோ.
இதற்கு பேசாமல் ஒரு பாட்டில் விஷத்தை குடித்துவிட்டு சாகச் சொல்லி இருந்தால் இறந்து போயிருப்பேன். ஆனால் காலத்திற்கும் தீராத ஒரு அபாண்ட பழியைச் சுமத்தி, என் பொது வாழ்க்கையை முடித்து வைப்பதற்காக ’துரோகி’ பட்டத்தை சுமத்திவிட்டாரே வைகோ என்று தனியார் செய்தி சேனல்களுக்கு அளித்து வரும் பேட்டிகளில் கதறிக்கதறி அழுது வருகிறார் மல்லை சத்யா.
’’புயலின் முகங்களே பூகம்பத்தின் விதைகளே வணக்கம். நலம் வாழிய நலனே மெளனம் கலைகின்றேன்’’ என்று மதிமுகவில் நடந்தது என்ன? நடப்பது என்ன? என்பது குறித்து அறிக்கையாகவும் வெளியிட்டிருக்கிறார் மல்லை சத்யா.

அதில், ’’மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் தொடர்ந்து இயங்க வேண்டும் என்ற உணர்வுடனே இதுநாள் வரை இருந்து வந்துள்ளேன் ஆனால் கழகத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை அதற்கு நிச்சயமாக நான் காரணம் இல்லை’’ என்கிறார்.
மேலும், ’’கடந்த 09 06 25 புதன்கிழமை அன்று திராவிட ரத்னா தமிழினக் காவலர் நான் உயிராக நேசித்த என் அன்புத் தலைவர் வைகோ எம்பி ஒரு தொலைக்காட்சி பேட்டியில், வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு புலிப் படை வீரன் மாத்தையா துரோகம் செய்ததைப் போன்று தனக்கு மல்லை சத்யா துரோகம் செய்து விட்டார் என்று ஒப்பிட்டு பேசினார்.
சான்றோர் பெருமக்களே, நான் மாத்தையா போன்று துரோகியா நீதி சொல்லுங்கள்.. என் அரசியல் பொதுவாழ்க்கையில் என் அன்புத் தலைவர் வைகோ எம்பிக்கு எதிராக நான் சிந்தித்தேன் செயல்பட்டேன் என்பது உண்மையானால் பெரும்புலவர் இளங்கோ அடிகளின் தமிழர்களின் பெருங்காப்பியம் சிலப்பதிகாரத்தின் மூதுரை அரசியல் பிழைத்தோற்க்கு அறமே கூற்றுவனாகட்டும் என்ற நீதி நின்று நிலைத்து என்னை இப்போதே சுட்டெரிக்கட்டும்’’ என்கிறார் சத்யா.

மதிமுகவில் 32 ஆண்டுகள் பயணித்து வரும் தனக்கு வைகோ துரோகப் பட்டம் கட்டியதை தாங்கிக்கொள்ள முடியாமல், ‘’வைகோ எம்பி , தன் மகன் துரை எம்பியின் அரசியலுக்காக 32 ஆண்டுகள் வெளிப்படைத் தண்மையோடு உண்மையாகவும் விசுவாசமாகவும் குடும்பத்தை மறந்து என் வாழ்க்கையின் 32 ஆண்டுகளாக வசந்தத்தை தொலைத்து இரவு பகல் பாராமல் கட்சி கட்சி தலைவர் வைகோ என்று பணியாற்றி வந்த என் மீது அபாண்டமாக துரோகப் பழி சுமத்தப் பட்ட கடந்த 09 07 25 தொடங்கி 13 07 25 ஞாயிற்றுக்கிழமை இரவு வரை ஐந்து இரவுகளும் என்னால் தூங்க முடியவில்லை.
என் தூக்கத்தை தொலைத்து விட்டேன் என் அரசியல் பொது வாழ்க்கையை வீழ்த்துவதற்கு உயர்ந்த உலகம் போற்றும் மாமனிதர் தலைவர் வைகோ எம்பி வேறு ஏதாவது ஒரு குற்றச்சாட்டை சொல்லி இருக்கலாமே
அல்லது ஒரு பாட்டில் விசம் வாங்கி கொடுத்து குடிக்க சொல்லி இருந்தால் குடித்து செத்து போய் இருப்பேனே அன்புத் தலைவர் வைகோ அவர்களே அறம் சார்ந்த என் அரசியல் பொதுவாழ்வை உங்கள் மகனுக்காக வீழ்த்துவதற்கு துரோகம் என்ற சொல்லா தங்களுக்கு கிடைத்தது வேதனையில் துடிக்கின்றேன்’’ வேதனையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

தனக்கு துரோகி பட்டம் கட்டியது போல் வேறு எய்ந்த தொண்டருக்கும் செய்யாதீர்கள் என்று, ’’என் அன்புத் தலைவர் வைகோ எம்பி அவர்களே உங்கள் தாள் பணிந்து மன்றாடி கேட்டுக் கொள்கின்றேன் இனி எக்காலத்திலும் யார் மீதும் எந்த தொண்டன் மீதும் இதைப் போன்ற அபாண்டமான பழியை சுமத்தி பழிக்கு ஆளாக வேண்டாம் அரசியலில் நீங்கள் அடைந்து இருக்கும் உங்கள் உயரத்திற்கு அது அழகல்ல’’ என்று வைகோவுக்கு கோரிக்கையும் வைத்திருக்கிறார்.
இந்த விவகாரத்தில், பொதுவெளியில் துரைவைகோ, தன்னை பற்றி விமர்சனம் செய்ததற்கு, ’’சகோதரர் துரை எம்பி பொதுவெளியில் விமர்சித்து பேசியுள்ளார். பதில் சொல்ல வேண்டிய ஜனநாயக கடமை எனக்கு உண்டு. என் மெளனத்தைக் கலைக்கின்றேன்’’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார் சத்யா.