
ராமதாசுக்கும் அன்புமணிக்கும் மோதல் வலுத்து வந்ததுமே பாமகவில் இரண்டு அணிகள் உருவெடுத்தன. ராமதாஸ் பின்னால் அவரது ஆதரவாளர்களும், அன்புமணி பின்னால் அவரது ஆதரவாளர்களும் திரண்டு நின்றனர்.
ராமதாஸ் அழைத்த கூட்டத்திற்கு வராத அன்புமணி ஆதரவாளர்கள் மீது ராமதாஸ் ஆத்திரத்தைக் காட்டினார். அதே மாதிரி அன்புமணி அழைத்த கூட்டத்திற்கு வராத ராமதாஸ் ஆதரவாளர்கள் மீது அன்புமணி ஆத்திரத்தைக் காட்டினார். அது இப்போதும் தொடர்கிறது.
சேலத்தில் பாமக பொதுக்குழு கூட்டத்தை அன்புமணி கூட்டியபோது ராமதாஸ் ஆதரவாளரும் சேலம் மேற்கு தொகுதி பாமக எம்.ஏ.வுமான அருள், தனக்கு நெஞ்சுவலி என்று சொல்லி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டார். இவரைப்போலவே ஜி.கே.மணியும் மருத்துவமனையில் அட்மிட் ஆனார்.

இதை பொதுக்குழு கூட்டத்தில் கிண்டலடித்தார் அன்புமணி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த இருவரும் நலம் பெற்று வீடு திரும்ப கூட்டுப்பிரார்த்தனை செய்வோம் என்று சொல்லி சிரித்தார். கூட்டத்தினரும் சிரித்தனர்.
இதைத்தொடர்ந்து தைலாபுரம் சென்று அடிக்கடி ராமதாசை சந்திக்கும் அருள், அன்புமணியை சந்திக்கவே இல்லை. இது அன்புமணிக்கு எரிச்சலை தந்துள்ளது. இதில், ராமதாசுக்கு ஆதரவாக தொடர்ந்து ஊடகங்களில் பேசி வந்ததால் என்ன நடந்ததோ தெரியவில்லை, ‘’என் உயிருக்கு ஆபத்து’’ என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார்.
’’அன்புமணியின் பின்னால் இருப்படு நிர்வாகிகள். அய்யாவின் பின்னால் இருப்பது விசுவாசிகள்’’ என்றும், ‘’பதவிக்காக பெத்த அப்பனை வீட்டுப்போகிறார். அப்பாவுக்கு மகன் கட்டுப்படமாட்டேன் என்று சொன்னால் இது ஒரு தவறான முன்னுதாரணம். எதிர்காலத்தில் ஒரு தவறான முன்னுதாரணமாக மாறிவிடுவாரோ அன்புமணி என்ற அச்சம் இருக்கிறது’’ என்றும் சொல்லி வந்தார்.

தன்னைப்பற்றி அருள் அவதூறாக பேசி வருவதாகவும், அதனால் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்லி கெடு விதித்திருந்தார் அன்புமணி. தான் எந்த தவறும் செய்யாத போது எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அருள் இருந்ததால், அவரை கட்சியில் நீக்கம் செய்கிறேன் என்று அன்புமணி அறிவித்துள்ளார்.
இது குறித்த அவரது அறிவிப்பில், ‘’சேலம் மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினர் இரா. அருள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் வகையிலும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

அண்மைக் காலங்களில் கட்சித் தலைமை குறித்து செய்தித் தொலைக்காட்சிகள் உள்ளிட்ட முதன்மை ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் அவதூறான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இது குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப் பட்ட ஒழுங்கு நடவடிக்கைக் குழு, இது குறித்து விசாரித்து வந்த நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் வகையிலான நடவடிக்கைகளுக்காக கட்சித் தலைமையிடம் 12 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இரா. அருளுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அதை அவர் மதிக்கவில்லை.

அதைத்தொடர்ந்து கட்சித் தலைமைக்கு ஒழுங்கு நடவடிக்கைக்குழு அளித்த பரிந்துரை அறிக்கையின் அடிப்படையில், பாட்டாளி மக்கள் கட்சியின் அமைப்புச் சட்ட விதி 30&இன்படி பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இன்று (02.07.2025) புதன்கிழமை முதல் இரா. அருள் நீக்கப்படுகிறார். பாட்டாளி மக்கள் கட்சியினர் எவரும் அவருடன் எந்த வகையிலும் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்’’ என்று கூறியிருக்கிறார்.
இதற்கு அருள் அளித்திருக்கும் விளக்கத்தில், ‘’டவுசர் போட்ட காலத்தில் இருந்து பாமகவில் 36 ஆண்டுகளாக பயணித்து வருகிறேன். அன்புமணியுடன் தமிழ்நாட்டு முழுவதும் நான் செல்லாத கிராமங்களே இல்லை. பாமகவில் அய்யாவுக்கு பிறகு நீங்கள்தான் தலைவர். அதனால் அய்யாவுடன் இணைந்து செயல்படுங்கள். தைலாபுரம் வாருங்கள் என்று சொல்வது தவறு என்று நினைத்து என்னை கட்சியை விட்டு நீக்குவதாக அறிவிக்கிறார். ஆனால், கட்சியை விட்டு ஒருவரை நீக்கவோ, சேர்க்கவோ அய்யாவுக்குத்தான் அதிகாரம் இருக்கிறது. செயல்தலைவராக இருக்கின்ற அன்புமணிக்கு அந்த அதிகாரம் இல்லை. ஆகவே இந்த நீக்கம் செல்லாது. ஆகவே, பாமகவின் இணை பொதுச் செயலாளராகவும், கட்சியின் அடிப்படை உறுப்பினராகவும் அய்யா அறிவிக்கும் வரையில் இருப்பேன்.

அய்யாதான் தலைவர், தெய்வம் என்று 36 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்றுக்கொண்டேன். இன்றைக்கும் அதில் மாறாமல் இருக்கிறேன். பதவிக்கு ஆசைப்பட்டு அய்யாவை விட்டு சின்னய்யா வாழ்க என்று போகவில்லை. அதுக்காக சின்னய்யாவை ஒதுக்கவில்லை. அய்யாவைத் தொடர்ந்து அவர்தான் வேணும்னு சொல்கிறேன். அய்யாவுக்கு அடுத்த தலைவர் அவர்தான் என்று சொல்கிறேன்.
அய்யா செய்வது தவறு என்று சொல்லிவிட்டு அன்புமணி வாழ்க என்று வந்துவிட வேண்டுமா? இரண்டு பேரும் வாழ்க என்று சொல்கிறேன். இது தவறா?’’என்று கேட்கிறார்.