
மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா கட்சிக்கு செய்த துரோகங்கள் என்று வைகோ பட்டியலிட்டதில் முத்துரத்தினத்தின் சகவாசம் என்பதும் ஒன்று.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் பல்லடம் தொகுதியில் மதிமுக சார்பாக போட்டியிட்ட முத்து ரத்தினம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். 2019ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் மதிமுக இணைந்த பின், மதிமுகவில் இருந்து விலகிய எந்த நிர்வாகியும் ஸ்டாலின் முன்னிலையில் சேர்க்கப்படவில்லை.
முத்துரத்தினம் திமுகவில் இணையும்போது அவருடன் தொடர்பில் இருந்தார் மல்லை சத்யா. இது கட்சிக்கு செய்த துரோகம் என்கிறார் வைகோ.

’’ஒட்டுமொத்த கட்சியும் துரை வைகோவை ஏற்றுக்கொண்டபோது திருப்பூர் துரைசாமி, புலவர் செவ்வந்தியப்பன், செங்குட்டுவன், முத்துரத்தினம் உள்ளிட்ட சில நிர்வாகிகள் அதை ஏற்க மறுத்து வெளியேறினர்! ஆனால் சத்யா வெளியேற வில்லை. கட்சிக்குள் இருந்து கொண்டே தலைவர் வைகோவையும் கட்சியையையும் விமர்சிக்கும் அவர்களுடன் இன்று வரை தொடர்பில் இருந்து வருகிறார் சத்யா.
கடந்த சில மாதங்களுக்கு முன் சத்யா ஆதரவாளர்கள் இணைத்தில் துரை வைகோ பற்றி எழுத அதற்கு பதிலாக கட்சியினர் சிலர் அதற்கு எதிர்கருத்து எழுத அந்த பிரச்சினையை வைத்து துரை வைகோ தனது கட்சி பதவியை ராஜினாமா செய்ய, அதைத் தொடர்ந்து நடந்த நிர்வாக குழுகூட்டத்தில் கூட வைகோ சத்யா பக்கம் முழுமையாக நின்று இருவருக்கும் இடையே சமாதானம் செய்து வைத்தார்.
ஆனால், சில நாட்களுக்கு முன்பு முத்துரத்தினம் திமுகவில் இணைந்தார். அப்போது அன்று நாள் முழுவதும் அவருடன்தான் சத்யா இருந்துள்ளார்.
இது எவ்வளவு பெரிய துரோகம். இந்த செயலை அறிந்தவுடன் தான் வைகோ, சத்யா மீது இருந்த நம்பிக்கையை தூக்கி எறிந்தார்’’ என்கிறார்கள் வைகோ ஆதரவாளர்கள்.

மேலும், ’’முத்துரத்தினம் திமுகவில் இணைந்ததை அடுத்து கடந்த வாரம் தாயகத்தில் நடந்த நிர்வாகக்குழு கூட்டத்தில் வைத்து முத்துரத்தினம் திருப்பூர் துரைசாமி இவர்களுடனான மல்லை சத்யாவின் தொடர்பு குறித்தும் முத்து ரத்தினத்துடன் மதிமுகவில் ஒரு பெருங்கூட்டத்தை அழைத்துவந்து திமுகவில் இணைக்க செந்தில் பாலாஜியின் ஒப்புதலுடன் ஒரு ஆலோசனை நடந்திருக்கிறது . அதில் மல்லை சத்யாவும் கலந்து கொண்டிருக்கிறார். இரண்டு நாட்கள் அவர்களுடன்தான் இருந்திருக்கிறார். இது வைகோவின் காதுகளுக்கு சென்றதனால்தான் நடந்த நிர்வாககுழுவில் மல்லை சத்யாவை கண்டித்திருக்கிறார்’’ என்கிறார்கள்.
மல்லை சத்யா ஆதரவாளர்கள் இதை மறுக்கிறார்கள். முத்து ரத்தினம் 2021 இல் இருந்தே திமுக உறுப்பினர்தான். 2021 தேர்தலில் 6 இடங்கள் மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டது. அனைவருமே திமுக சின்னத்தில் போட்டியிட்டார்கள். ஒரு கட்சியின் சின்னம் பெற வேண்டுமானால் கட்சியின் விதிபடி அக்கட்சியின் உறுப்பினராக இருக்க வேண்டும்.
ஆக போட்டியிட்டபோது ஆறு பேருமே திமுக உறுப்பினர்கள் அட்டைகள் பெற்றவர்கள்தான். இதில் வெற்றி அடைந்த நால்வரும் இன்றும் திமுக உறுப்பினர்களாகவே தொடர்கிறார்கள்.
தோற்ற இருவரில் மல்லைசத்யா மட்டும் மறுபடியும் மதிமுக உறுப்பினர் அட்டையை மீண்டும் பெற்றிருக்கிறார். ஆனால் முத்து ரத்தினம் கட்சியிலிருந்து தள்ளியே இருந்தார். அவர் மீண்டும் மதிமுக உறுப்பினர் ஆகவில்லை. அவர் 2021 இல் இருந்தே சட்டபூர்வமாக திமுக உறுப்பினர்தான்.
அப்படி 2021 இல் இருந்து இருப்பவரை சமீபத்தில் திமுக தலைமை அங்கிகரித்து புகைப்படம் வெளியிட்டிருக்கிறது. இதில் மல்லை சத்யா செய்த துரோகம் என்ன?’’ என்ற கேள்வியை எழுப்புகின்றனர்.