
Police Encounter
குற்றச் செயல்கள் பற்றிய செய்திகள் பரபரப்பாகும்போது மக்கள் கேட்கக் கூடிய கேள்வி, “இவனுங்களையெல்லாம் போட்டுத் தள்ளிடணும்” என்பதுதான். பொதுப்புத்தியில் உறைந்து போன கருத்து என்று இதை ஒதுக்கிவிட முடியாது. ஒரு ரவுடியை இன்னொரு ரவுடி கொலை செய்வதும், கொலை செய்த ரவுடி சிறைத் தண்டனையிலிருந்து ஜாமீனில் வெளிவருவதும், வெளியே வந்த ரவுடியை ஏற்கனவே கொல்லப்பட்ட ரவுடியின் கூட்டாளிகள் போட்டுத் தள்ளிவிட்டு, புதிய ரவுடியாக உருவெடுத்து உலாவருவதும் தொடரும்போது சட்டம், நீதி, நியாயம் இவற்றின் மீது நம்பிக்கை இழக்கும் மக்கள், இத்தகைய கொலைக்குற்றவாளிகளையும் சமூக விரோதிகளையும் கேஸ், ஜெயில், ஜாமீன் என்று இழுக்காமல் என்கவுன்ட்டரில் போட்டுத் தள்ளிவிட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
தமிழ்நாட்டில் அவ்வப்போது என்கவுன்ட்டர்கள் நடப்பது வழக்கம். சீவலப்பேரி பாண்டி முதல் சந்தனக்காடு வீரப்பன் வரை பல உதாரணங்கள் உண்டு. லோக்கல் தாதாக்கள், பேங்க் கொள்ளையர்கள், பாலியல் குற்றவாளிகள் சிலரும் என்கவுன்ட்டர்களில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். குற்றவாளிகள் போலீசைத் தாக்விட்டு தப்பிக்க முயன்றதாகவும் அப்போது சுட்டதாகவும் போலீஸ் தரப்பில் சொல்லப்படும்.
இரக்கமின்றி பல கொலைகளை செய்த பயங்கரமான குற்றவாளி, போலீஸைத் தாக்கும்போது கருணை மனதுடன் உயிருக்கு ஆபத்து ஏற்படாத வகையில் வெட்டுக்காயம் ஏற்படுத்துவதும், போலீஸ் துப்பாக்கியோ குற்றவாளியின் உயிரைக் குடிக்கும் வகையில் சரியான இடத்தில் பாய்ந்திருப்பதையும் பல என்கவுன்ட்டர்கள் நிகழ்வுகளில் பார்த்திருக்கிறது தமிழ்நாடு. மற்ற மாநிலங்களிலும் இதே நிலைமைதான். எனினும், இந்த ட்ரீட்மென்ட்தான் குற்ற நடவடிக்கைகளை குறைக்கும் என்பது மக்களின் நம்பிக்கை.
என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்டுகளாக பெயரெடுத்த போலீஸ் அதிகாரிகள் மக்களிடம் ஹீரோக்களாகிவிடுகிறார்கள். அவர்களின் சாயலில் திரைப்படங்களில் ஹீரோக்கள் வரும் போது அந்தப் படங்களும் வசூலை வாரிக்குவிக்கும். “நான் போலீஸ் இல்லே..பொறுக்கி” என்று குற்றவாளி வில்லன்களைப் பார்த்து போலீஸ் கதாநாயகன் பேசும் வசனத்திற்க தியேட்டரே அதிர்ந்ததை தமிழ்நாடு பார்த்திருக்கிறது. உடனடி நியாயம், அதிரடித் தீர்ப்பு இவை சினிமா பாணியில் வரவேற்பைப் பெற்றாலும், நிரந்தரமானத் தீர்வு என்பதில் என்கவுன்ட்டர்களுக்கு இடமில்லை. போலீசாகவே இருந்தாலும், மிகவும் நெருக்கடியான தருணங்களைத் தவிர மற்ற நேரங்களில் சட்டத்தைக் கையில் எடுக்க முடியாது.
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 4 படுகொலைகள் என்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் குற்றம்சாட்ட, அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த குற்றச்செயல்களின் எண்ணிக்கையையும், தி.மு.க. ஆட்சியில் அது குறைவாக உள்ளது என்றும் முதலமைச்சர் பதிலளித்தார். பொதுமக்களுக்கு புள்ளிவிவரங்கள் சுவாரஸ்யம் தருவதில்லை. அதிரடியை எதிர்பார்க்கும் மனநிலை உள்ளது. அதற்கேற்ப சின்னச் சின்ன தீனிகளும் போடப்பட்டுத்தான் வருகின்றன.
தி.மு.க ஆட்சிக்கு வந்த 2021க்குப் பிறகு முக்கியமான சில கொலை வழக்குகளில் என்கவுன்ட்டர்கள் அரங்கேறியுள்ளன. இரண்டு நாட்களுக்கு முன் ஈரோட்டில் நடந்த பழிக்குப்பழி படுகொலையிலும், நெல்லையில் முன்னாள் போலீஸ் அதிகாரி படுகொலை செய்யப்பட்டதிலும் துப்பாக்கிச்சூடு நடத்தி குற்றவாளிகளைப் பிடித்துள்ள செய்திகள் வெளியாகியிருப்பதுடன், சுடப்பட்டவர்கள் கட்டுப்போட்டபடி இருக்கும் படங்களும் வெளியாகியுள்ளன. 27 கொள்ளை வழக்குளில் சம்பந்தப்பட்டிருந்த கன்னியாகுமரியைச் சேர்ந்த கொள்ளையனை கடலூர் மாவட்ட போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துள்ளனர்.
கொலை, கொள்ளை உள்ளிட்ட கொடூர குற்றவாளிகளை இப்படி சுட்டுப் பிடிக்கும்போதும், சாதாரணமாக பிடிபட்ட குற்றவாளிகளை கோர்ட்டில் ஆஜர்படுத்தும்போது மாவுக்கட்டுடன் அவர்கள் ஆஜராவதும் வெளியில் இருக்கும் ரவுடிகளை மனரீதியில் அலற வைக்கும். அதேநேரத்தில், ரசிகர்களின் கைத்தட்டலால் வசூலைக் குவிக்கும் சினிமா போலீஸ் ஹீரோ போல, நிஜ போலீசாரால் செயல்பட முடியாது. ஒவ்வொரு தோட்டாவுக்கும் அவர்கள் பதில் சொல்லியாக வேண்டும்.
நீதிமன்றம், தீர்ப்பாயம், மனித உரிமை ஆணையம் எனப் பல அமைப்புகளையும் என்கவுன்ட்டர் போலீசார் எதிர்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது. கையில் துப்பாக்கி இருப்பதால் குற்றவாளிகளின் உயிரைப் பறிக்கும் சட்ட அங்கீகாரம் இல்லை என்று நீதித்தீர்ப்புகள் வெளியாவதுடன், என்கவுன்ட்டர் போலீஸ் அதிகாரிகள் பணிநீக்கம், இடமாற்றம், சட்டநடவடிக்கைகள் ஆகியவற்றையும் எதிர்கொள்ள நேரிடும். அதனால்தான், இதுவரை போலீசாரைத் தாக்கிவிட்டு தப்ப முயன்றதாக சொல்லப்பட்ட ரவுடிகள், போலீசாரின் உயிருக்கு ஆபத்தின்றி வெட்டினார்களோ, அதுபோல போலீசாரும் இப்பாதும் ரவுடிகளின் உயிர் போகாதபடி சுடத் தொடங்கியிருக்கிறார்கள்.
சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட என்கவுன்ட்டர்களைவிட, உளவுத்துறையின் தீவிர கண்காணிப்பும், சரியான அறிக்கையும், அதன் மீதான உறுதியான நடவடிக்கையுமே முழுமையானத் தீர்வைத் தரும். குற்றவாளிகள் மீது காவல்துறை இரக்கம் காட்டக்கூடாது என்பதுபோலவே, காவல்துறையினர் செயல்பாடுகள் மீதான நடவடிக்கைகளிலும் ஆட்சியாளர்கள் கருணை காட்டக்கூடாது.
3291ib
gt33bk
yl81lp
k92iww
is54eu
twsryd