
மனித குல வரலாற்றையே மாற்றி அமைத்தன கழுதைகள் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளார்கள். அக்காலங்களில் கழுதைகள்தான் போக்குவரத்துக்கழகம், தபால் நிலையம், சலவை நிலையம். இந்த நவீன யுகத்தில்தான் காணாமல் போயிருக்கின்றன கழுதைகள்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கூட, கிராமங்களில் உப்பு வியாபாரிகள் கழுதை மேல் உப்பு மூட்டைகளை வைத்துதான் தெருத்தெருவாக சுற்றி உப்பு வியாபாரம் செய்து வருவார்கள். மலையேற்றத்திற்கு கழுதைகளைத்தான் பயன்படுத்தி வந்தார்கள்.
சலவை தொழிலுக்கும் கழுதைகள் தான் பயன்படுத்தப்பட்டு வந்தன. சின்னக்கவுண்டர் படத்தில் கூட சலவைத்தொழில் செய்யும் கவுண்டமணி கழுதைகள் வளர்த்து வருவார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு கூட தமிழ்நாட்டில் இருந்து கேரளா, ஆந்திராவுக்கு ரேசன் அரிசி கடத்தலுக்கு கழுதைகளைத்தான் பயன்படுத்தி வந்தார்கள்.
உலகம் முழுவதும் மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் முக்கியப்பங்கு வகித்து வந்தன கழுதைகள். அந்தக்கழுதைகள் இப்போது கண்ணில் தென்படுவதில்லை.
நாய்களை அழிக்க வேண்டும் என்று பலரும் போராடி வரும் நிலையில், ’’தெருநாய்களை தெருநாய்கள் என்று சொல்லுவதே தவறு. இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல; எல்லா உயிர்களுக்கும் சமமானது. ஒருநாளைக்கு எத்தனையோ குற்றங்கள் நடைபெறுகின்றன. அதில் நாய்களால் வரும் பிரச்சனை என்பது டெல்லியில் 0,5%தான். அப்படி இருக்கும் போது டெல்லியில் மொத்த நாய்களையும் அழித்துவிட வேண்டும் என்று சொல்வதில் நியாயமில்லை’’ என்று சொல்லி, இயக்குநர் வசந்த் போன்று பலரும் எதிர்க்குரல் எழுப்பி வருகின்றனர்.

இந்த நாய்கள் விவகாரம் குறித்து கமல்ஹாசன் எம்.பியிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘’கழுதைகள் எல்லாம் காணாமல் போச்சே, நமக்காக எவ்வளவு பொதி சுமந்திருக்கு. அந்த கழுதைகள் காணாம போச்சேன்னு யாராவது கவலைப்படுறாங்களா? இப்போ கழுதைகள பார்க்க முடியலையே. யாராவது அத காப்பாத்தணும்னு பேசுறாங்களா? எல்லா உயிர்களையும் காப்பாத்தணும். எவ்வளவு முடியுமோ காப்பாத்தணும்’’ என்றார்.
நாய்களுக்காக குரல் கொடுப்பவர்கள் கழதைகளை காப்பாற்றாமல் விட்டு விட்டார்களே என்ற ஆதங்கத்தில் அவர்களைச் சாடுகிறார் கமல்ஹாசன். அதே நேரம், நாய்கள் மட்டுமல்லாது எல்லா உயிர்களையும் பாதுகாக்க வேண்டும் என்கிறார்.